வியாழன், 12 ஜனவரி, 2017

ஜல்லிக் கட்டு: சங்க காலப் பண்பாடும், ஆயர்குடிகளும், ஏறு தழுவுதலும்…அனைத்து தமிழர்களின் பண்பாடா ? மரபா? விளையாட்டா ?

சந்திர மோகன்thetimestamil : சந்திர மோகன்; PETA போன்ற அமைப்புகள் முன் வைக்கும் விலங்குகள் வதை, மனித நலன் என்ற விவாதம் இதுவல்ல! பாரதீய ஜனதா,காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க, திமுக, மதிமுக, பா.ம.க, விசிக, தமிழ் அமைப்புகள், சிபிஐ,சிபிஎம்’மில் துவங்கி லிபரல் மா.லெ தமிழ் தேசிய குழுக்கள் வரையிலுமான பல வண்ண முற்போக்கு அமைப்புகள் வரை, “ஜல்லிக்கட்டு”க்கு கொடி பிடித்துள்ளனர்.
‘சல்லிக்கட்டு’ மொத்த தமிழ் சமூகத்தின் பண்பாடா, பாரம்பரியமா? அனைத்துத் தமிழர்களின் வீர விளையாட்டா?
  1. சங்க காலப் பண்பாடும், ஆயர்குடிகளும், ஏறு தழுவுதலும்…
ஐந்திணைகளில் (குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல்,பாலை) சங்க கால மக்களின் வாழ்க்கை வேறுபட்ட சமூக, பொருளாதார அடிப்படையில் அமைந்திருந்ததை பண்டைய இலக்கியங்கள் விளக்குகின்றன.

காடும்,காடு சார்ந்த நிலமும் முல்லை நிலமாகும்/ திணையாகும். இதில் வசித்தவர்கள் ஆயர்குடிகள் ஆவர்.(ஆயர்,கோவலர்,அண்டர், இடையர் எனப்பட்டோர்). ஏறு தழுவுதல் (காளை மாட்டை அடக்கி உடல் வலிமையை/வீரத்தை காண்பித்தல்) முறையிலான மணமுறையும் முல்லைத் திணையில் குறிப்பிடப் படுகிறது. எட்டுத் தொகை, கலித்தொகையில் குறிப்புகள் உள்ளன.
சங்க காலப் பண்பாட்டிற்குப் பிறகு, நிலப்பிரபுத்துவ அமைப்புத் தோன்றுகிறது; சோழர்களுக்குப் பிறகு களப்பிரர்களின் ஆட்சியும் தமிழக நிலப்பரப்பில் உருவாகிறது. பல மாற்றங்கள் உருவாகிறது; பல்வேறு மரபுகளும், பழக்கங்களும் மாறுகின்றன. எனினும், மரபின் தொடர்ச்சியாக, ஆயர் குடிகளிடம் (மாடுகளை வைத்து பராமரிக்கும் சமூகங்கள்) மத்தியில், பொங்கல் பண்டிகையின் போது, மாடுகளை அலங்கரித்து, கொம்புகளில் சல்லியை (காசு,பணம்,தங்கம்….)கட்டி அனுப்புவது, இன்றும் பல்வேறு கிராமங்களில் நடைபெறுகிறது.சாதி தமிழர்களில் திறமை யுள்ளவர்கள் மாட்டை மறித்து எடுத்துக் கொள்ளலாம். இது அலங்காநல்லூர் வகை ஜல்லிக்கட்டு அல்ல.
2) ஆநிரைக் கவர்தல் முதல் அலங்காநல்லூர் வரை :
ஆயர்குடிகளிடமிருந்து, ஆடு மாடுகளை, வேறு சில சமூகங்கள் கவர்ந்து /திருடிச் சென்றதை பண்டைய தமிழ் இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன.பிந்தைய நாட்களின் பிரிட்டிஸ் ஆட்சி கால ஆவணங்களும் குறித்துள்ளன. மாடுகளை கவர்ந்து சென்ற கூட்டங்கள், அவற்றை பராமரிப்பதையும் மேற்கொண்டன.பிறகு மாடு பிடித்தல் தொடர்பான “சல்லிக்கட்டு” அவர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டு ஆகவும் மாறியது. குறிப்பாக,இது கள்ளர்,மறவர்கள், பொதுவாக முக்குலத்தோர் /தேவர்கள் என அறியப்படுவர்களின் விளையாட்டாகவும் உருப்பெற்றது/ மாறியது. பிறகு, வேறு சில சாதித் தமிழர்களும், வேறு பகுதிகளிலும் ஜல்லிக் கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளா ரேஸ் என வெவ்வேறு வடிவில் மாடுகளை வைத்து விளையாட்டுகளை கடைபிடிக்கின்றனர்.
இன்று நாம் விவாதிக்கும் இந்த ஜல்லிக்கட்டு, (அதாவது வாடிவாசலில் பறை/ஒலி எழுப்பி மாடுகளைத் துரத்தி, மாடு பிடிக்கும் வீரர்கள் கும்பலாகச் சென்று, மடக்குவது) சில நூற்றாண்டுகள் மட்டுமே பழக்கத்தில் உள்ள விளையாட்டு ஆகும். சங்க கால முல்லைத் திணை ஏறு தழுவுதல் வேறு ; அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வேறு. அங்கு பங்கேற்ற, இங்கு பங்கெடுக்கும் மக்களும் வேறு வேறு; நோக்கங்களும் வெவ்வேறு ஆகும்.
3) சாதித் தமிழர்களும், மீதித் தமிழர்களும் (தலித்துக்களும்):
தென் மாவட்டங்களில், கிராமங்கள் என்பதே, ஒவ்வொரு சாதியின் அலகு/Unit ஆக இருக்கிறது. தலித் உட்பட எவர் ஒருவரும் ஜல்லிக்கட்டைப் பார்வை இடலாம்.குறிப்பிட்ட சில சாதிக் குழுக்களின் இந்த வீர விளையாட்டில் தலித்துக்கள் பங்கேற்றால்….காளையை அடக்கினால்….என்ன ஆகும்?
சிலர் பின்வருமாறு சொல்கிறார்கள் :
‘ சாதி சார்ந்த தமிழ்ச் சமூகத்தில், “பன்மைத் தன்மைக் கொண்ட தமிழ் சமூகம்” இருக்கும்.ஜல்லிக் கட்டும் இருக்கட்டும். இது ஒட்டுமொத்த தமிழர் பண்பாடு, உழவுத் தொழிலில் ஈடுபடும் உழைக்கும் மக்களின் பண்பாடு” என்றெல்லாம் லிபரல்/தாராளவாதக் கருத்துக்களைச் சொல்கிறார்கள்.அவர்கள் விரும்பும் தமிழ் தேசீயத்திற்கு ஊறு வராமல் பார்த்துக் கொள்ள, இப்படி எல்லாம் சொல்லுகிறார்கள்.
# ஜல்லிக் கட்டுக்கு மல்லுக் கட்டும் தமிழ் தேசியவாதிகள்,குறைந்த பட்ச சீர்திருத்தமாக தலித்துகளும் மாடு பிடிக்கும் விளையாட்டுக்கு ஏற்பாடு செய்வார்களா ?
#ஜல்லிக்கட்டு போன்ற நிலப்பிரபுத்துவ கால வீர விளையாட்டுகள், (விலங்குகளை வதைக்கின்றன என்பதற்கு அப்பால்) பண்டைய மரபுகள், சாதீய அமைப்பக் கட்டிக் காப்பாற்றவே உதவுகிறது. சல்லிக் கட்டு
சமத்துவமான விளையாட்டும் அல்ல.
4) அரசியல் விளையாட்டு :
பாரதீய ஜனதாவும், அ.இ.அ.தி.மு.க வும், ஏன் இதைக் கையில் எடுத்தன?
வாக்கு வங்கி அரசியல், தேர்தல் ஆதாயம் போன்றவை ஒருபுறமிருந்தாலும், (ஏனென்றால்,ஆதரிக்கும் பல்வேறு கட்சிகளுக்கும் மனப்பூர்வமாக உடன்பாடு இல்லை என்றாலும், ஜல்லிக்கட்டுச் சாதிகளின் வாக்கு தவறிவிடக்கூடாது என்பதால் அறிக்கை விட்டுச் சமாளிக்கிறார்கள்) மக்களைத் தங்கள் மீதான வெறுப்பு /அதிருப்தியிலிருந்து திசைத் திருப்ப வேண்டும் என்பது தான் நோக்கம் ஆகும்.
கடும் விலை உயர்வு, தொழில் மந்தம்/பொருளாதார நெருக்கடி, காவி வெறுப்பு அரசியலின் நரவேட்டை மீதான மக்களின் அதிருப்தியிலிருந்து பாரதீய ஜனதா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.
சனநாயக விரோத அடக்குமுறை ஆட்சி, வெள்ளம் பேரிடர் நிலைமைகளில், குற்றமய /Criminal அலட்சியத்தில் ஈடுபட்டு மக்களைத் தவிக்கவிட்டதால், ஜெயா ஆட்சியானது மக்களிடம் அம்பலப்பட்டுப் போய் உள்ளது.
சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக