செவ்வாய், 24 ஜனவரி, 2017

வேடிக்கை பார்த்தவர்களும் கைது.. .வீடு வீடாக போலீஸ் .. பெற்றோர் கண்ணீர் !

நேற்று நடந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக இதுவரை தமிழ் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் எழும்பூர் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட 61 பேரை ஆஜர் செய்ய அழைத்து வந்திருந்தனர். வந்தவர்களில் மாணவர்களின் எண்ணிக்கையை விட கொஞ்சம் வயது மூத்தவர்களின் எண்ணிக்கை அதிகமிருந்தது. நகரின் மற்ற பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களிலும் இது போல் சிலரை ஆஜர் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தது. கைதான பலரும் கண் கலங்கி நின்றிருந்தனர். அவர்கள் அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தோம். சார்.. நாங்க எதுவுமே செய்யல. ஆனா எங்கள அடிச்சி கூட்டிட்டு வந்துட்டாங்க சார் என அருகில் நின்றிருந்த ஒரு கான்ஸ்டபிளிடம் ஒரு மாணவன் அழுத படியே கூறிக்கொண்டிருந்தான். எப்பா, பிட் பாக்கெட், திருட்டு கேஸ்னா தான் பயப்படனும். இது போலீஸ் வேனை எரிச்சது, கவர்மெண்ட் பஸ்ஸ உடைச்சதுனு சின்ன கேஸ் தானப் பா, கவலைப் படாம போயிட்டு வா என சிரித்த படியே அவர் கூற அந்த மாணவன் கண்ணீரோடு முகத்தை மறைத்துக் கொண்டான். அனைவரையும் ரிமான்ட் செய்து இன்று சிறைக்கு கொண்டு செல்ல இருந்தனர். மாணவர்களின் பெற்றோர்கள் சிலரையும் நீதிமன்றத்தில் பார்க்க முடிந்தது. என் மகனின் வாழ்க்கையே போச்சே என அழுதபடி சென்று கொண்டிருந்தனர்.
நிறைய பேரின் பெற்றோர்களுக்கு தங்கள் மகன் கைதான தகவல் கூட இன்னும் தரப்படாமல் இருந்தது. ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்பட இயக்குநர் சரவணன் சிட்டி சென்டர் பகுதியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது அவரையும் காவல்துறை கைது செய்திருக்கிறது. அவர் விளக்கி கூறிய போதும் காவல் துறை அவர் மேல் எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறது. அங்கிருந்து கிளம்பும் போது சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வரும் காவல் துறையினர் ஆட்டோவுக்கு தீ வைக்கும் வீடியோ, போராட்டத்துக்கு சம்மந்தமில்லாத வீடுகளில் உள்ள பெண்களை தாக்கும் வீடியோ, வாகனங்களை அடித்து நொறுக்கும் வீடியோ போன்றவைகளை நீதிமன்ற வளாகத்திலிருந்த பலரும் பார்த்துக் கொண்டிருந்தனர். மின்னம்பலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக