வெள்ளி, 27 ஜனவரி, 2017

திருவள்ளுவர் ; இகழ்வார் முன் ஏறுபோல் பீடு நடை ! ஏறு போற்றுதும்!


"இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை" என்கிறார் வள்ளுவர். இகழ்ச்சியுடன் பார்ப்பவர்க்கு முன்னால் தலை நிமிர்ந்து நிற்பதற்கு காளைதான் உவமையாக வருகிறது. சாலமன் பாப்பையா தன்னுடைய உரையில் ஏறு என்பதற்கு சிங்கம் என்றும் எடுத்தாள்கிறார். அப்படியும் தமிழில் சொல்லலாம்தான். காளையும் கம்பீரத்தில் குறைவதில்லை. தற்போது தமிழகத்தில் ஏற்படும் கொந்தளிப்பான நிகழ்வுகளால் இன்னமும் கொஞ்சம் கம்பீரம் கொண்டிருக்கிறார் காளையார். இக்கட்டுரை எழுதப்பட்டு, வெளியிடப்படுகின்ற இடைப்பட்ட காலத்திற்குள் இன்னும் பல திருப்பங்கள் நேர்ந்திருக்கும் என எண்ணும் அளவுக்கு சூடு கொண்டிருக்கிறது. தமிழர் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக முன்னிறுத்தப்பட்ட நிகழ்வானது, நாட்டுக் காளை இனங்களை அழிவிலிருந்து காக்கும் நடைமுறையின் மையமாக உருக்கொண்டு, இப்போது அரசு-சாரா தொண்டு நிறுவனங்களுக்கெதிரான தமிழின அடையாள அரசியலாக பேருருக் கொண்டிருக்கிறது.. ஒருமுனைப்படுத்தப்பட்ட இந்த உணர்வெழுச்சியின் பரிணாம வளர்ச்சியினூடே, தவறவிடாமல் இருக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.


முதலில் ஓர் எச்சரிக்கை. இந்தக் கட்டுரை மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகளின் நேரில் பார்த்த அல்லது பங்கேற்ற அனுபவங்கள் வைத்தோ, அதற்கான கள ஆய்வுகள் செய்தோ எழுதப்படவில்லை. மன்னி க்கவும்.

எனக்கு மாடுகள்பால் ஒரு தனி அன்பு உண்டு. தொன்மையான நட்சத்திர கூட்டமான டாரஸ் (Taurus) முன்பு, சூரியன் கடக்கும் காலம்த்தில்தான் என்னுடைய பிறந்தநாள் வரும். ஏதாவது ஒரு உரையாடலில், 'உங்களுடைய சன் சைன் என்ன' என உசாவப்படும்போது ஒரு காளையின் சித்திரம்தான் என் மனக்கண் முன் முதலில் தோன்றும். மாடுகளுக்கென தனிச்சிறப்பு சேர்க்கும் கொண்டாட்டங்களை கண்ணுற்று வளர்ந்ததும் இன்னொரு காரணமாக இருக்கலாம். மதுரையில் நாங்கள் குடியிருந்த பகுதியில் மாடுகள் அடர்ந்த சூழலாக இருந்தது. நாம் தொடும்முன்னர் சிலிர்த்து அடங்கும் விலாவும், சொறிந்து கொடுப்பதற்கு வாகாக வளைத்துக் கொடுக்கும் முகமுமாக விதவிதமான மாடுகள் நினைவில் தங்கியிருக்கின்றன. கழுத்தில் கழலை தொய்ந்த, புண்ணாகிப் போன பாரவண்டிகள் இழுக்கும் மாடுகளையும், கண்ணோரத்தில் நீர்த்தடம் தெரிய குப்பைகளை மேய்ந்து செல்லும் வற்றிய மாடுகளையும் கூட மறந்ததில்லை. சாமி சப்பரங்கள் வீதி உலா செல்கையில் முன்னின்று செல்லும் அலங்கார படுதா போர்த்திய கோவில் மாடுகள் மேல்தான் பறைகொட்டி செல்வர். அப்புறம்தான் யானைகளும் ஒட்டகங்களும் தொடர்ந்து வரும். வண்ணம் தீட்டிய கொம்புகளில் சலங்கை மணிகளால் ஜோடித்து, மெருகேற்றிய பளபளப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் காளைகள் உவகையை தந்திருக்கின்றன.

மாடு அடக்கும் மரபு:

கிரா-வின் கரிசல்கதைகளில் காளைகள் அடக்கும் நிகழ்ச்சி பற்றி மிகவும் விரிவாக பதிவு செய்திருப்பார். சிசு செல்லப்பா தன்னுடைய 'வாடிவாசல்' நாவலின் முன்னுரையில் ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். ரோசமூடப்பட்ட ஒரு மிருகத்துடன் மனிதன் நடத்தும் விளையாட்டு." எனக் குறிப்பிட்டிருப்பார். இரண்டு பதிவுகளிலும் அந்தக் காளைகளின் வீழ்ச்சி ஒரு பெரும் இறுமாப்பின் அடங்குதலாக விவரிக்கப்பட்டிருக்கும்.

மேய்ச்சல் நில வாழ்வியலிலிருந்து, காடு திருத்தி கழனி அமைத்து பயிர் செய்வித்து நிலவுடமை சமூகமாக மாறும் காலம்வரை, நீண்ட பரிணாம மாற்றத்தில் மனிதனின் உற்ற துணையாக இருந்து வருபவை மாடுகள். நம்முடைய பண்பாட்டு விழுமியங்களில் மாடுகளுக்கான இடம் அளப்பரியது. காடுடைய சுடலையான் கூட விடையேறித்தான் தம் பக்தர்களை புரக்க வருகிறார். வீரத்திற்கு சான்றுரைக்கவும் ஏறுகள்தான் இலக்காகின்றன. 'பொருபுகல், நல்ஏறு கொள்பவர்'கள்தான் சிறந்த வீரர்களாக அறியப்படுகிறார்கள். முல்லை நிலத்து தெய்வமான மாயோன் 'நல் விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனாக' பெரியாழ்வாரால் போற்றப்படுகிறான். 'கொல்லேறு கோடு அஞ்சுவானை' ஆய்ச்சியர் மதிப்பதில்லை என கலித்தொகை கூறுகிறது. கலித்தொகை இன்னமும் விரிவாக காளைகளை அணையும் விளையாட்டைப் பற்றி விவரிக்கிறது. கொம்புகளை அணைவது, திமில்களை பற்றி தொங்கிச் செல்வது, காளைகள் கொம்புகளால் குத்தி சுழற்றி எறிவது என தற்கால விவரணைகளுக்கொப்ப சொல்கிறது.

இந்த பாரம்பரிய தொடர்ச்சியில் இரண்டு விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏறு அடக்குதல் பெண் கொள்ளும் பொருட்டு நிகழ்த்தப்பட்டதாகவும்,. போருக்கு நிகரானதொரு நிகழ்ச்சியாகவும் பழந்தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. பெண்களை ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக கொள்ளும் நவீன காலக்கட்டட்த்தில் இந்த பாரம்பரியங்களை நாம் அடையாளமாக மட்டுமே கொள்ள முடியும். போர் நிகர்த்த விளையாட்டு எனும்போது அதில் கேளிக்கை நோக்கம் மாறுபட்டு விடுகிறது. ஆனால், அண்மையில் நிகழ்த்தப்படும் ஜல்லிக்கட்டுகள் பெரிதும் ஒரு கார்னிவெல் மனப்பான்மைதான் காணப்படுகிறது. காளை அணைபவர்களுக்கென விதிகள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன. முறைமைபடுத்தப்பட்ட அமைப்புகள் நிறைய கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் கூட்டங்களின் கட்டுபாடற்ற உணர்வெழுச்சி சமயங்களில் திகிலூட்டுகிறது. பாரம்பரிய அடையாளங்கள் நம் சமுதாயங்களுக்கான செறிவான பின்புலத்தை எடுத்துக் காட்டும்போது, முற்போக்கான சிந்தனைகளுக்கு தடைகல்லாக அமையாதிருப்பதில் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

நாட்டு மாட்டு இனங்களின் நலன்:

ஜல்லிக்கட்டு போட்டிகளினால் நாட்டு காளை இனங்களை பராமரித்து போற்றுவதும் இருக்கிறது. இந்த கோணம் வெகுமக்களிடையே சென்று சேர்ந்ததும் ஜல்லிக்கட்டிற்கான ஆதரவு பன்மடங்கு பெருகியிருப்பதை காணமுடிகிறது. இது போன்ற பண்பாட்டு நிகழ்வுகளின் தொன்மையால் சமூகத்தின்பால் விளையும் நன்மைகளில் ஒன்றாக காளை வகைகள் தொடர்ந்து பராமரிக்கப்படுவது நிகழ்கிறது. ஜல்லிக்கட்டு "மட்டுமே" நமது நாட்டு காளை மாடுகள் இனத்தை பாதுகாக்கிறது என்பது போன்ற வாதங்கள் வலுவற்றவை. உலகெங்கும் பண்ணை வளர்ப்பு மட்டும் பராமரிப்பில் அறிவியல்பூர்வமான பல முன்னேற்றங்கள் நடந்தேறிய வண்ணம் இருக்கும்போது, நம்முடைய நாட்டு மாட்டுவகைகள் பராமரிப்பை செறிவாக்க வேண்டியதன் அவசியமும் இருக்கிறது. பெரும் புஷ்டி மீசையுடன் சாம் எலியாட் நடிக்கும் The Ranch எனும் தொலைக்காட்சித் தொடர் எனக்கு மிகவும் பிடித்தமானது. தற்கால அமெரிக்க சூழலில் கால்நடை வளர்ப்பும் அதன் இடறல்களும் பற்றி நிறைய விஷயங்களை பேசும் நல்லதொரு தொடர். டெப்ரா விங்கர் நடித்த திரைப்படங்களைத் தேடி இந்த தொலைக்காட்சி தொடரை கண்டெடுக்க நேர்ந்தது என்பது இக்கட்டுரையின் பேசுபொருளுக்கு தேவையில்லாதது என்பதால் தவிர்த்துவிடுவோம். நாட்டு மாட்டு வகைகள் பராமரிப்பில் ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் நற்பயனைத் தந்திருந்தாலும், நாம் அதை மட்டுமே சார்ந்திராமல், நவீன நுட்பங்களைக் கொண்டு அதை மேலும் வலுவானதொரு முறையாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். நாட்டு மாடுகள் நல்வாழ்வுக்கென்று ஓர் தனி அமைப்பு இருக்குமானால், அதன் மூலம் மாட்டு வகைகளின் விந்தணுக்கள் சேகரிப்பு போன்றவை முறைமைபடுத்தப்பட்டு அரிய மாட்டு வகைகள் முற்றழிவிலிருந்து காக்க வேண்டும்.

அரசு-சாரா நிறுவனங்களுக்கெதிரான அரசியல் செயல்பாடு:

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாக பல தன்னார்வல அமைப்புகளும் செயல்பட்டுக் வருகின்றன என்பதையும் நாம் பார்க்கிறோம். மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இவர்கள் மூலமாகத்தான் இந்த ஜல்லிக்கட்டு சிக்கலின் ஆதாரமான சட்டச்சிக்கல்களைப் பற்றி புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம், அரசு-சாரா தொண்டு நிறுவனங்களுக்கெதிரான அரசியல் பற்றி பார்க்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. வெறும் கவனயீர்ப்புக்காக செயல்படும், பெரும் நிதி ஆதாரம் கொண்ட, சமூக முன்னேற்றத்திற்கு எதிரான நிறுவனங்கள் என்றொரு பொதுப்புத்தி கருத்தினை தொடர்ந்து பார்க்க முடிகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், விலங்குகள் நல வாரியம், சூழலியல் அமைதி காக்கும் அமைப்பு என எண்ணற்ற தன்னார்வல அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டு வருகின்றன. அரச பயங்கரவாதங்களால் நிகழ்த்தப்படும் மோதல் கொலைகளிலிருந்து, சூழலியல் சீர்கேடுகளை விளைவிக்கும் கண்மூடித்தன கட்டுமானப் பணிகள்வரை இந்த தன்னார்வல அமைப்புகள் கேள்விகள் எழுப்பிக் கொண்டேயிருக்கின்றன. இன்றைக்கு ஜல்லிக்கட்டு நிகழ்வின் தடைக்கான முக்கிய காரணம் இந்த தன்னார்வல அமைப்புகள் மட்டும் அல்ல. அவர்கள் முன்வைக்கும் சட்டச்சிக்கல்கள்தான் பிரச்னையின் ஊற்று. நீதிமன்றங்கள் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட சட்டங்களும், குற்றவியல் நடைமுறைகளும் காட்டும் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கே கணக்கில் கொள்ள வேண்டியது, நடைமுறைக்கும் சட்ட அமைப்புகளுக்குமான இடைவெளி.

பொதுபுத்தி அரசியல்., கண்மூடித்தனமான வழிபடும் மனப்பான்மை, எதிர்விசை அரசியல் போன்றவைகள் கடந்து சில ஆக்கப்பூர்வமான யோசனைகள்.


  • பாரம்பரியத் தொடர்ச்சி பற்றி உணர்வெழுச்சியோடு நின்றுவிடாமல், முற்போக்கு சமூகத்திற்கேற்ப மாற்றங்களை பரிந்துரைக்க வேண்டும்.
  • அணிவகுப்புகள் (parades), காட்சிகள், காளைகள் அணைவருக்கான வரைமுறைகள் என விரிவான அமைப்பு தேவை.
  • ஏறுகள் பராமரிப்பும் அதன் திறன் வளர்ப்புக்கும் ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளின் குவியம் ஏறுகளை போற்றுவதாக இருக்க வேண்டும். இதை வலியுறுத்தும் குரல்கள் அதிகம் எழ வேண்டும்.
  • பங்கேற்பாளர்களுக்கான லைசன்சுகள் முறை கொண்டு வரலாம். போட்டிகளின்போது காளைகளுக்கு ஊறு விளைவிப்போரை களைய இது போன்ற முறைகள் பயன்தரும்.
  • நாட்டு மாடுகள் நல வாரியம் என ஒன்று அமைத்து ஏறுகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கலாம்.


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். அடுத்து உழவனின் நண்பனான மாடுகளுக்கு மரியாதை செய்வோம். ஏறுகள் போற்றுதும்! ஏறுகள் போற்றுதும்!

பிற்சேர்க்கை:-

கல்குதிரை சிற்றிதழிலிருந்து கோணங்கியின் 'பாழி'யிலிருந்து ஜல்லிக்கட்டுப் பற்றிய சிறுபகுதியை மெயிலில் அனுப்பியிருந்தார்கள். அதன் விளக்கமான, கவித்துவ காட்சிபடுத்தலுக்காக சில பகுதிகளை தட்டச்சு செய்து இங்கே இணைத்திருக்கிறேன்.

o0O0o

பூமத்திய ரேகை மனிதர்கள் நிலம்பிளந்து வந்து ஏறு தழுவுகிறார்கள்.

வெள்ளை நிற ஜல்லிக்காளை சுடலைமாடன் பொட்டலில் கொம்புகளை தரையில் முட்டி வானத்தைப் பார்த்து அழைக்கிறது. ஆழிமாதிரி பெரிய காளை. கொம்பு சீவிவிட்ட லாட ஆசாரி அதன் திருகு கொம்புக்கு தைலம் பூசுகிறான்.

முழக்கென இடியெனத் தன்முன்னே ஆரவாரம் எழப் போர்க்காளை முக்காரமிட்டு நிற்கிறது. பூமத்திய ரேகை மனிதர்கள் ஏறு தழுவுகிறார்கள்.

காளை திரண்டிருந்த தொழு புழுதிபறக்க, கழுத்துமணி கழல் பயங்கரமாக சுழன்று வருகின்றன ஏழு காளைகள். ஓர் எருது கருமை நிறமாக வெள்ளைக் கால்களுடன். மற்றது சிவந்த உடலில் புள்ளிகள் படர்ந்திருந்தது. கரும்புள்ளிக்காளை, சுழி முதுகில்லாமல் திமில் அசைத்து வட்டமிட்டது.

கிளிக்கொம்பில் சுவர்களை முட்டிச் சிவந்திருந்தது போர் காளை. புயலாய் பாய்ந்தோடியது செம்புள்ளி. அசைவு தெரிய, பின் அதுவும் மறைந்தது. தூரமாய் ஓடி அரக்கு நிறப்பாறை உச்சியிலிருந்து உருண்டு வருவது போல இடிவிழுந்து பாய்ந்தது. அரக்கும் புள்ளிகள் திமிலில், வலது தோளில் படர்ந்த காளை.

பார்ப்பவன் நெஞ்சைக் காலால் உதைத்தது செம்போர்க்காளை. புள்ளி செறிந்த சித்துக்காளை ஒன்று கட்டுக்கடங்காத வேகத்துடன் எவ்வி, தன்முன் சென்ற சிவந்த காளை மேல் எக்குப்போட்டு கொம்பினால் முட்டியது.

காளை மீது தாவி ஏறி அதன் முதுகு வழுக்க கீழிறங்கி, மேலும் தாவி, மாட்டின் கொம்புகள் வேல் நுனியாகக் கூரியதாக் குத்த, அஞ்சாமல் கழுத்திலே பாய்ந்து அணைத்து தழுவினான்.

குரால் நிறக் கண்கள் கொண்ட காளை கொலைக் குணத்துடன் தழுவுபவனை விசிறியது கூட்டத்தின் மேல். கொடிய பகைமையுள்ள செவலை எருதில் புலிப்போல் பாய்ந்தான் நெட்டையானவன். பறைகள் எழுந்தன ஓசையுடன். பறையால் சினந்த எருது எட்டுவைத்து வந்தது சண்டைக்கிழுக்க. அதைப் பின்வாங்கிப் போய் பதுங்கிப் பாய்ந்தவனைக் கொம்பு மேல் சுழற்றி ஆடியது காளை. கூக்குரல் பறை முழங்க, சினங்குறையா எருதொன்று வெகுண்டு, பாய்ந்தவனைத் தரையோடு குத்திக் காலை மடித்து, தொலைவே ஓடி, பின்னோடும் பறையின் ஒலிக்கேற்ப புலியாய் வலம் பாய்ந்தது. தழுவ முயன்றவன் நிலத்தில் வீழ்ந்தான். புண்பட்டு விழுந்தவன் உருண்டு எழுந்ததும் பின்வாங்கிக் குபீரென்று திமிலைப் பிடித்தான் தாவி. கொம்பு மார்பில் படுவதை உணர்ந்தும், உயிர் கொடுத்து கொம்பைப் பிடித்தான் கிடுக்கியாய். காளையின் கொம்புகள் நிலத்தில் குத்தி அதன் வாய்திற்ந்த திண்றலோசை மண்ணில் பதிந்து கால்கள் அண்ணாந்து, பிளந்த குளம்புகள் வெறுமையை அலாவிச்சரிய, வருந்துங்குழல் ஊதிய அண்ணாவிமார் கண்களில் கண்ணீர் பெருகிற்று.

பலரையும் குத்திய உதிரம் தோய்ந்த கொம்புகள் பரசி வந்தது பாய்பவனை நோக்கி.

பூமத்திய ரேகை மனிதர்கள் நிலம்பிளந்து வந்து ஏறு தழுவுகிறார்கள்.  sridharblogs.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக