வெள்ளி, 6 ஜனவரி, 2017

தீபா மெதுவாக ஆனால் அழுத்தமாக அரசியலை ஆரம்பித்து விட்டார்!


மின்னம்பலம்:  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமை ஏற்க வேண்டும் என விரும்பும் அதிமுகவினர் சென்னை தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு வருகிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது கவலையோடு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த தீபா பின்னர் அமைதியாகி விட்டார். அதன் பின்னர் அமைதியாக இருந்த தீபா ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அரசியல் விருப்பம் தொடர்பாக சில பேட்டிகள் அளித்தார். பின்னர் அமைதியாகி விட்டார்.
ஆனால், தமிழகத்தின் பல இடங்களில் ஜெயலலிதா தீபா பேரவை துவங்கப்பட்ட நிகழ்வும், அதையொட்டி அதிமுக தொண்டர்கள் திநகரில் உள்ள தீபா வீட்டிற்கு வருவதும் அவரது வீட்டிற்கு வெளியில் நின்று தீபாவைப் புகழ்ந்தும், சசிகலாவை இகழ்ந்தும் கோஷமிடுவதாக சில நிகழ்வுகள் நடந்து வந்தன. சில நாட்களுக்கு முன்னர் கூட அப்படி வந்தவர்களை நான் அரசியலுக்கு வருவேன். இப்போது நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பி வருகிறார் தீபா.

தனக்கிருக்கும் ஆதரவை பல்ஸ் பார்க்க விரும்பிய தீபா தன் வீட்டில் வருகைப் பதிவேடு ஒன்றை வைத்திருக்கிறார்.தீபாவை பார்க்க வரும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்களது பெயர், அ.தி.மு.க.வில் தற்போது வகிக்கும் பதவி, எந்தெந்த மாவட்டங்களில் இருந்து வருகிறோம், ஒவ்வொரு நிர்வாகியின் தலைமையிலும் எத்தனை தொண்டர்கள் வந்திருக்கிறோம் என்ற விவரத்தை எழுதி வைத்து விட்டு செல்கிறார்கள்.
சசிகலா பதவியேற்றிருக்கும் நிலையில் தீபா தயங்குவதை அறிந்து கொண்ட பல நிர்வாகிகள் தொண்டர்களோடு வந்து பதிவு செய்திருப்பதைப் பார்த்து வியந்து போயிருக்கும் தீபா அரசியலுக்கு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறாராம்.
மாநில அளவில் நேற்று சேலத்தில் ‘ஜெயலலிதா தீபா பேரவை’ அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று சேலம், தஞ்சை, விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் இன்று தீபா வீட்டுக்கு வந்திருந்தனர். அப்போது தீபா வீட்டில் இல்லை என்று சொல்லப்பட, வந்தவர்கள் தீபா வீட்டில் இருந்த வருகை பதிவேட்டில் தங்களைப் பற்றிய விவரங்களை எழுதி விட்டு கையெழுத்து போட்டுவிட்டு கிளம்ப இருந்த நிலையில் தீபா வசிக்கும் வீட்டின் பால்கனிக்கு தீபா வந்தார்.
கீழே நின்றிருந்த தொண்டர்களை நோக்கி இரட்டை இலை போல கைவிரலைக் காட்டியவர் பின்னர் அவர்களிடம் மைக் இல்லாமல் சத்தமாகப் பேசினார் “என் அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது.திட்டமிட்டபடி அரசியலுக்கு வருவேன். தொண்டர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.ஜெயலலிதாவின் புகழையும், பெயரையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அவர் செய்த தியாகங்களுக்கு ஈடு இணையே இல்லை. உங்களுக்காக பணியாற்ற நான் காத்திருக்கிறேன்” என்று கூறினார். கீழே நின்ற நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சின்னம்மா சின்னம்மா என்று தீபாவை நோக்கி கத்தினார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக