திங்கள், 30 ஜனவரி, 2017

ரயில்வே சலுகை: கட்டாயமாகும் ஆதார் எண்!


மின்னம்பலம் : ரயில் பயணத்தை அதிகரிக்கும் நோக்கில் ரயில்வே துறை பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு ரயில்வேயின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு அரசின் மானியங்கள், சலுகைகளை பெறுவதில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்ப்பதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படுகிறது. மூத்த குடிமக்கள், நோயாளிகள், விளையாட்டு வீரர்கள்,மாணவர்கள் என, பல்வேறு தரப்பினருக்கு, ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. இது, உரியவர்களுக்கு மட்டும் பயனடையும் வகையில், முன்பதிவின் போது,ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
இந்த முடிவு பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட்டில் அமல்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முதன்முறையாக மத்திய பட்ஜெட்டுடன் இணைந்த ரயில்வே பட்ஜெட் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் உரையில் வெளியிடுவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வே துறை அளித்து வரும் சலுகைக்கு கடந்த 2015-16 ஆம் ஆண்டில் மட்டும் அரசுக்கு ரூ.1600 கோடி செலவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ரயில் டிக்கெட்டுகள் வாங்குவதற்கும், கட்டண சலுகை மற்றும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது,ஆதார் கார்டு அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 111 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், 99% இளைஞர்கள் ஆதார் எண்களைப் பெற்றுள்ளனர். கடந்த மாதம் மட்டும் சுமார் 3.73 லட்சம் பேர் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக