புதன், 4 ஜனவரி, 2017

ஸ்டாலின் : மத்திய மாநில அரசுகள் ஜல்லிகட்டு நடத்தப்படும் என்று பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ...

மதுரை, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம் என்று, அலங்காநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.தி.மு.க. ஆர்ப்பாட்டம் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஜல்லிக்கட்டு அனுமதி அளிக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-


பொங்கல் திருநாளில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அப்படி நடக்கும் போது அந்த வீரவிளையாட்டை உங்களோடு சேர்ந்து காணும் வாய்ப்பை பெறுவேன் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அதனை எடுக்காததால் இன்று போராட்ட களத்தில் சேர்ந்து உள்ளேன். வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள் என்று மத்திய அரசை கேட்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், பாரதீய ஜனதா தலைவர்கள் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் அது நடத்தப்படும், உறுதியாக நடத்தப்படும் என்று வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலை இன்னும் வரவில்லை.

தடைக்கு அ.தி.மு.க. அரசே காரணம்2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்த போது உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. அந்த நேரத்தில் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி சட்ட ஆலோசகர்களுடன் கலந்து பேசினார். பின்னர் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிமுறைகளை ஆலோசனைகளை கடை பிடிப்போம் என்ற உறுதியை தந்து ஜல்லிக்கட்டை நடத்திய பெருமை தி.மு.க.வுக்கு உண்டு என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. அதற்கு பிறகு என்ன ஆயிற்று? ஜல்லிக்கட்டை நடத்த தி.மு.க. கடைபிடித்த வழிமுறைகளை, நெறிமுறைகளை அ.தி.மு.க. அரசு பின்பற்றவில்லை. இதனால் உச்சநீதிமன்றம் ஒரு கமிட்டி அமைத்தது. அந்த கமிட்டி தமிழகம் வந்து ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.

அதில் உச்சநீதிமன்றம் தெரிவித்த வழிமுறைகளை அ.தி.மு.க. அரசு பின்பற்றவில்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையிலேயே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.

ஐகோர்ட்டு நீதிபதி
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அன்றைய நீதிபதி மார்க்கண்டேயகட்ஜு கூறும் போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு தவறான தகவலை அதிகாரிகள் வழங்கி இருக்கிறார்கள். மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்தி இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார். இதைத் தான் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதனை சொன்னால் தமிழக பாரதீய ஜனதா தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் திசை திருப்பும் நோக்கில் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின்போது தான் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது என பழிபோடும் வகையில் பேசி வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் உரிய பாதுகாப்போடு முறையாக ஜல்லிக்கட்டை நடத்தினோம். இன்று அ.தி.மு.க.விற்கு நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை சேர்த்து மொத்தம் 50 எம்.பி.க் கள் உள்ளனர். இவர்களில் யாராவது ஒருவராவது எழுந்து ஜல்லிக்கட்டுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கக் கூடிய தெம்பு, திராணி உள்ளதா என்றால் இல்லை. அது தான் இன்றைய சூழ்நிலை.

தமிழன்னை சிலை
வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தி தமிழர்களின் மானத்தை காப்பாற்றிட வேண்டும். தமிழ் உணர்வை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை அ.தி.மு.க.விற்கு இல்லை. கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது 110-வது விதியின் கீழ் எத்தனையோ நூற்றுக்கணக்கான அறிவிப்புகளை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதே மதுரையில் அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை போல, ரூ.100 கோடி மதிப்பில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என அறிவித்தார். அந்த சிலை அமைக்கப்பட்டதா? அதற்காக அடிக்கல் நாட்டு விழா நடந்ததா? ஒரு செங்கலாவது எடுத்து வைக்கப்பட்டதா? இல்லை இடம் தேர்வு நடைபெற்றதா என்றால் இல்லை. தமிழ் மண் மீது தமிழர்களின் உணர்வு மீது அ.தி.மு.க.வுக்கு அக்கறை இல்லை என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை.

தி.மு.க. மீது பழி சுமத்த கூடாது
தை பொங்கல் இன்னும் 11 நாட்களில் வரப்போகிறது. இன்றைய முதல்-அமைச்சர் நாளைக்கு அவர் இருப்பாரா இருக்கமாட்டரா என்பது அவருக்கே தெரியாது. இது அவர்களது உள்கட்சி பிரச்சினை, அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று நான் பேச மாட்டேன்.

நான் கலைஞரின் மகன். ஆதாரத்தோடு தான் எதையும் பேசுவேன். 22.12.2015 அன்று சட்டமன்றத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என உறுதி அளித்தார். அது அவைக்குறிப்பில் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு 16 வந்தது, 17-ம் வந்து விட்டது. ஆனால் ஜல்லிக்கட்டு தான் வரவில்லை.

ஆகவே தான் இங்கு போராட்டம் நடைபெறு கிறது. அவர்களை நான் குறைகூறவில்லை. குற்றம் சாட்டவில்லை. தங்கள் பொறுப்பை மறந்து அலட்சியமாக திட்டமிட்டு தி.மு.க. மீது பழி சுமத்தக் கூடாது. இது தி.மு.க., அ.தி.மு.க. இடையே நடைபெறும் ஜல்லிக்கட்டு அல்ல. தமிழர்களின் வீர விளையாட்டு. தமிழர்களின் பண்பாட்டை காக்க, மானத்தை காப்பாற்ற வேண்டியது அவசியம்.

வடிவேலு காமெடி
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டுக்கான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என்று கூறுகிறார். இதை நினைத்தால் எனக்கு வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருகிறது. ஜல்லிக்கட்டு வரும், ஆனா வராது என்பது போல் உள்ளது. இதை நான் வேடிக்கையாக சொல்லவில்லை. வேதனையோடு சொல்கிறேன்.

நமக்குள்ள ஆவேசம் என்னவென்றால் இன்னமும் தமிழர்களின் பண்பாட்டை கொச்சைப்படுத்தும் உணர்வை அனுமதிக்கலாமா? உச்சநீதிமன்றத்தில் தடை உள்ளது அதை மீறி என்ன செய்ய முடியும் என்று பேசிக்கொண்டிருக்கக் கூடாது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போது அதை நிறைவேற்றும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஏன் அதனை செய்யவில்லை? அலங்காநல்லூர், பாலமேடு வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி அவர்களே தமிழகத்தை வஞ்சிக்காதீர்கள், தமிழர்களின் உணர்வுகளை சோதிக்காதீர்கள்.

இந்த மண்ணின் உணர்வை இளைஞர்களின் உணர்வை எண்ணிப் பாருங்கள். இந்த போராட்டத்தை கட்சி நோக்கமாகவோ, அரசியல் நோக்கமாகவோ கருதாதீர்கள். இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும். 5 ஆண்டுகளாக காட்சிப் பொருளாக இருந்த மாநில அரசு இன்னும் காட்சிப் பொருளாக இருக்கும் இந்த அரசு, காளைகளை காட்சிப் பொருளாக்கி விடவேண்டாம். மத்திய அரசு உரிய சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்தவும், அதில் பங்கேற்கவும் நாங்கள் காத்து இருக்கிறோம்.  இவ்வாறு அவர் பேசினார்  தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக