செவ்வாய், 31 ஜனவரி, 2017

மீண்டும் வீதிக்கு வருவோம் என பயந்து தாக்கியது அரசு!”

அடக்குமுறையால் எங்களைக் கலைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் திரும்பவும் வந்து போராடுவோம்” என்று சொல்கிறார் அரபுராணி. மெரினா போராட்டத்தில் ஏழு நாட்களும் இருந்தவர்களில் ஒருவர் இவர். கடைசி நாளில் போலீஸ் தாக்குதலுக்கு உள்ளானவர். அதுபற்றி டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டு நம்மிடம் பேசினார்: ‘‘எனது சொந்த ஊர் திண்டுக்கல். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவள் இல்லை. போராட்ட அனுபவமும் எனக்குக் கிடையாது. மீடியாக்களில் வெளிவந்த செய்திகளைப் பார்த்துவிட்டே மெரினாவுக்குப் போனேன். லட்சக்கணக்கில் ‘தமிழ்’ உணர்வோடு கூடியிருந்தவர்கள் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையளித்தார்கள். ‘நாட்டுக்காக, மக்களின் நலன்களுக்காக யாராவது அரசியல் கட்சியினர் போராடட்டும்’ என்று கைகாட்டாமல், நாங்களே போராடியது புதிய விஷயம். அது இனியும் தொடரும். மெரினாவில் பொதுமக்கள் எழுச்சியும், தமிழகம் முழுக்கப் பரவிய தீவிரமான போராட்டங்களும் அரசையும், போலீஸையும், அரசியல் கட்சிகளையும் பயப்பட வைத்துவிட்டன.
ஆறு நாட்கள் எங்களோடு தங்கியிருந்து, உணவு சாப்பிட்டு, அன்பாய்ப் பழகிய போலீஸார், 23-ம் தேதி அதிகாலையில் கொடூரமாக நடந்துகொண்டனர். அத்துமீறி வலுக்கட்டாயமாக மாணவர்களை, பெண்களை, குழந்தைகளைக் கையைப் பிடித்து இழுத்துச்சென்று ரோட்டில் விட்டனர். மறுத்தவர்களை அடித்து உதைத்தனர். பெண்களை வயிற்றில் உதைத்துக் கொடுமைப்படுத்தினர். ஆண் போலீஸார் பெண்களின், மாணவிகளின் கையைப்பிடித்து இழுத்து முறுக்கி வெளியேற்றினர். பலருக்கு கைகள் உடைந்து இப்போது சிகிச்சையில் இருக்கிறார்கள். மண்டை உடைந்து, பற்கள் நொறுங்கி, ரத்தம் வழிய அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். அதைத்தான் தாங்க முடியவில்லை. வலிக்கிறது.

என்னையும் ஆண் போலீஸார்தான் கையைப்பிடித்து முறுக்கி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். நாங்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை. ஆனாலும் ஏன் தாக்கினார்கள்? ‘இந்தப் போராட்டம் நல்லபடியாக முடிந்தது என்றால், மக்கள் மீண்டும் மீண்டும் போராட வீதிக்கு வருவார்கள்’ என்று பயந்த அரசும் போலீஸும் இப்படி வன்முறையை நடத்திக்காட்டியுள்ளனர்.

இவ்வளவு கொடூரம் நடக்கும்போதும், மணலில் நடக்கமுடியாமல் கீழே விழுந்த ஒரு போலீஸ்காரரை எங்கள் மாணவன் ஒருவன் தூக்கிவிட்டான். தன்னை அடிக்க வந்தபோதுதான் அவர் கீழே விழுந்தார் என்பதை அறியாமல், இயல்பாகச் செய்த உதவி இது! இந்த உணர்வு போலீஸ்காரர்களுக்கு ஏன் இல்லை? போராட்டம் எங்களுக்கு வெற்றிதான். ஆனால் வெற்றியைக் கொண்டாடமுடியாமல் சதி செய்துவிட்டது அரசு” என்கிறார் அவர் உறுதியாக.   

- சி.தேவராஜன், படம்: தே.அசோக்குமார்   vikatan 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக