வெள்ளி, 6 ஜனவரி, 2017

BBC :இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சனை.. . யாழ்ப்பாணத்தில் சஞ்சே பாண்டே .. இந்திய வெளியுறவு இணை செயலாளர்

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்காக கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவு இணைச் செயலர் சஞ்சய் பாண்டே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். கொழும்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுக்கள் நடத்திய பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இந்திய நிதி உதவியின் கீழ் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்களைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இருநாட்டுப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இணை செயற்பாட்டு குழு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை சந்தித்துப் பேச்சுக்கள் நடத்துகின்றது.


இரு நாட்டு அமைச்சர்களும் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை சந்திக்கின்றார்கள். இந்தச் சந்திப்புக்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''இழுவைப் படகுகளில் மடிவலையைப் பயன்படுத்தும் பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது. ஆனாலும் நாங்கள் அதனை நிறுத்துவதற்குக் கடமைப்பட்டிருக்கின்றோம். ஆகவே மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான பயிற்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு நீண்ட படகுகள் தேவை. அவற்றை வாங்குவதற்கு நிதியுதவி வழங்க முயற்சிக்கின்றோம்,'' என்றார் இந்திய வெளியுறவு இணைச் செயலர் சஞ்சய் பாண்டே.

மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இரு நாட்டு அரசுகளும் கடமைப்பட்டிருக்கின்றன. எனவே இந்தச் சிக்கல் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.
கடந்த இரண்டு மாதங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இரு தரப்பிலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அந்த வகையிலேயே பிடித்து வைத்துள்ள படகுகளை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருக்கின்றோம். எமது கோரிக்கையைப் பரிசீலிப்பதற்கு அவர்கள் இணங்கியிருக்கின்றார்கள். அவர்களுடைய பதிலுக்காக நாங்கள் இப்போது காத்திருக்கின்றோம் என்றார் சஞ்சய் பாண்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக