ஞாயிறு, 1 ஜனவரி, 2017

ஜெ.,க்கு 400; சசிக்கு 1,000 போலீசார் பாதுகாப்பு போக்குவரத்து நிறுத்தியதால் மக்கள் தவிப்பு

அ.தி.மு.க., பொதுச்செயலராக பதவியேற்க, கட்சி அலுவலகம் வந்த சசிகலாவுக்கு, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டதை விட, இரு மடங்கு போலீஸ்பாதுகாப்பு தரப்பட்டதும், போக்குவரத்து நிறுத்தப்பட்டதும், மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா முதல்வராக, முதல் இரண்டு முறை இருந்த போது, அவர் செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2011ல் முதல்வராக பொறுப்பேற்ற போது, தான் செல்லும் பாதையில் போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என, போலீசாருக்கு உத்தரவிட்டார். அதை ஏற்ற போலீசார், அவர் வரும் வழியில் உள்ள சாலை சந்திப்புகளில் மட்டும், ஐந்து நிமிடத்திற்கு முன், போக்குவரத்தை நிறுத்துவர். கடற்கரை சாலையில், நடுவில் முதல்வர் வாகனம் செல்ல வழி விட்டு, இரு புறமும், மற்ற வாகனங்கள் செல்ல அனுமதித்தனர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா, நேற்று கட்சி அலுவலகம் வந்தார். இதையொட்டி, காலை, 6:00 மணி முதல், போயஸ் கார்டனில் இருந்து, கட்சி அலுவலகம் வரை, இரண்டு அடிக்கு ஒரு போலீசார்நிறுத்தப்பட்டனர்.


போயஸ் கார்டனில் இருந்து, சசிகலா புறப்படும், 20 நிமிடங்களுக்கு முன், கதீட்ரல் சாலை, டி.டி.கே., சாலை, அவ்வை சண்முகம் சாலை போன்றவற் றில், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், அண்ணா சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை என, முக்கிய சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது; பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சசிகலா அரசு பதவியில் இல்லாத நிலையில், அவர் கட்சி அலுவலகம் செல்லும் வழியில், பல நுாறு போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டதும், 'போக்குவரத்து நிறுத்தப்பட்டதும் மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜெயலலிதா கட்சி அலுவலகம் செல்லும் போது, 400 போலீசார் நிறுத்தப்படுவர்; அதே அளவு போலீசாரே தற்போதும் நிறுத்தப்பட்டு உள்ளனர்' என்றனர்.
தொண்டர்கள் கூட்டம் குறைவு

ஜெயலலிதா கட்சி அலுவலகம் வந்தால் அவரை காண்பதற்காக, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்தோடு வருவர். அவர் வரும் வழியெங்கும் திரண்டு நின்று வணங்குவர். ஆடல், பாடல் என, உற்சாகம் கரை புரண்டோடும்.

ஆனால், சசிகலா நேற்று வந்த போது, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் வந்திருந்தனர். கீழ் மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. கட்சி அலுவலகத்திற்கு வெளியே, குறைந்த அளவு தொண்டர்களே கூடியிருந்த னர்; பெண்கள் கூட்டமும் மிகக் குறைவாக இருந்தது.

- நமது நிருபர் - dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக