செவ்வாய், 3 ஜனவரி, 2017

வீட்டு மனைகளாக மாறிய 26 லட்ச ஏக்கர் விளைநிலங்கள்!


இந்தியாவிலேயே நகரமயம் தமிழகத்தில்தான் வேகமாக நடந்து வருகிறது. 2015இல் 43%அளவு தமிழ்நாடு நகரமயமாக மாறிவிட்டது. அதற்கு, இங்கு நடைபெறும் அதிவேக ரியல் எஸ்டேட் வியாபாரமும், விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவதும்தான் மிக முக்கிய காரணம். மேலும் கிராமங்களில் உள்ள சிலர் கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பது அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை இயற்கை எழில் கொஞ்சிய தமிழகம் இப்போது வீட்டு மனைகளாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் சுமார் 26.42 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், தமிழகத்தில் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தது.
அதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி, அகில இந்திய மனை மேம்பாட்டாளர்கள், முகவர்கள் கூட்டமைப்பு, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத்தரகர்கள் நலச் சங்கம் உள்ளிட்டவை சார்பாக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின்மீதான விசாரணை, உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டம் 2008 பிரிவு 22-ஏ-யின் படி, தமிழக அரசு கடந்த அக்டோபர் 20ஆம் தேதி ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன் 2ஆவது உட்பிரிவு, அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பதிவு செய்வதை தடை செய்கிறது. ஆனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு அந்தப் பிரிவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை மனையிடங்களாக மாற்றக் கூடாது, நாங்கள் ஒட்டுமொத்த பத்திரப் பதிவுக்கும் தடை விதிக்கவில்லை. அங்கீகரிக்கப்படாத மனையிடங்களுக்கு மட்டுமே தடை விதித்துள்ளோம். தமிழகத்தில் எந்தெந்த நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தினால் மட்டுமே பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்க முடியும் எனத் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக பதிலளித்திருந்த தமிழக அரசு, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை நெறிமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் கூடுதல் மனு ஒன்றை வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் 26.42 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலேயே மனைகளுக்கு சட்டவிரோதமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்துள்ளதாகவும் அந்த மனுவில் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இப்போது, தமிழகத்தில் 13.28 லட்சம் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் உள்ளன. இவற்றை நெறிமுறைப்படுத்த ரூ.17 ஆயிரம் கோடி செலவாகும். அதற்கான வருவாய் ஆதாரத்தை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் 2008ஆம் ஆண்டுக்கு பிறகு அங்கீகாரம் இல்லாத மனைகளை நெறிமுறைப்படுத்த முடியாது என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளநிலையில், தற்போது உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகளை மீண்டும் நெறிமுறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது என மனுவில். இந்த வழக்கு வரும் 9ஆம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக