புதன், 25 ஜனவரி, 2017

இன்று ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினம்..!!

Image may contain: 12 people, textதமிழ் உணர்வுள்ள எல்லோரும் இதை முழுதும் படிக்கவும், பகிரவும்...! மொழிப்போர் எனப்படும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் இறுதிக்கட்டத்தை அடைந்த தினம் இன்று . 1937 இல் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்ட பொழுது ராஜாஜி ஹிந்தி படிப்பதை மேனிலை கல்வியில் கட்டாயம் ஆக்கினார். குழந்தைக்கு தாய் கட்டாயப்படுத்தி தான் பாலூட்ட வேண்டும் என்று விளக்கம் தந்தார். ஹிந்தி ரயில் வண்டி அதில் போனால் வேகமாக முன்னேறலாம் என்றும் சொன்னார்.
பெரியார் கொதித்து எழுந்து சுயமரியாதை இயக்கத்தின் மூலமும் , நீதிக்கட்சியின் மூலமும் போராட்டங்கள் நடத்தினார். ஹிந்தி மற்றும் சமஸ்க்ருதத்தை தமிழுக்கு பதிலாக திணிக்க பார்க்கிறார்கள் என்கிற எண்ணம் வலுப்பெற்று போராட்டங்கள் நடைபெற்றன . பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர் .தீரர் சத்தியமூர்த்தியும் ராதாகிருஷ்ணன் அவர்களும் காங்கிரசிலேயே ஹிந்தி திணிப்பை எதிர்த்தார்கள்; எனினும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார் ராஜாஜி.

இந்திய குடிமக்கள் மீது ஆங்கிலேய அரசு போலவே கிரிமினல் சட்டத்தை தாகூர் மற்றும் ஜின்னாவின் எதிர்ப்புகளை கண்டுகொள்ளாமலே பயன்படுத்தினார் ராஜாஜி. நடராசன் என்ற இளைஞர் சிறைக்கொடுமையின் காரணமாக 1939 ஜனவரி 15 அன்று உயிர் நீத்தார். அவரையடுத்து திரு. தாளமுத்து என்ற இளைஞரும் சிறைக்கொடுமை தாங்காது 1939 மார்ச் 13ஆம் நாளன்று சிறைச்சாலையிலேயே இயற்கை எய்தினார்.. கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் என்று இரண்டுஉயிர்கள் போன பின்னும் போராட்டங்களை விமர்சித்தார் ராஜாஜி.
பெண்கள் பலர் குழந்தைகளோடு சிறை சென்றனர். பெண்களை போராட தூண்டியதற்காக பெரியார் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஆறு மாதத்தில் உடல்நலம் காரணமாக விடுவிக்கப்பட்டார் .தனித்தமிழ் இயக்கம் வளர்ந்ததும் அப்பொழுது தான்.
அதற்கு பிறகு 1939 இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விலக கவர்னர் மீண்டும் அச்சட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டார் .காங்கிரஸ் விடுதலைக்கு பிறகு ஆட்சிக்கு வந்ததும் எல்லா மாநில அரசுகளையும் ஹிந்தியை கட்டாயம் ஆக்க சொன்னது. முதலில் தமிழ் பேசும் பகுதியில் இன்னொரு மொழியாக தேர்வு செய்துகொண்டு படிக்க வேண்டிய பாடம் என்று பல மொழிகளை கொடுத்து அதில் ஹிந்திக்கு மட்டும் ஆசிரியர்களை அதிகமாக நியமித்து ஹிந்தி திணிப்பை மறைமுகமாக ஆரம்பித்தது ஓமந்தூரார் அரசு. பின்னர் குறைந்தபட்ச மதிப்பெண்களை பிள்ளைகள் பெற்றாலே உயர்கல்விக்கு தகுதி பெறுவர் என்றது இன்னமும் கொதிப்பை அதிகப்படுத்தியது .
பெரியார் போராட்டக்களம் புகுந்தார் ; ம.பொ .சிவஞானம், திருவி.க. முதலியோரும் எதிர்ப்புகளில் கலந்து கொண்டனர் ; ஒரு வழியாக அரசு போராட்டக்காரர்களின் மீதான வழக்குகளை திரும்பபெற்றது ;கட்டாயம் என்பது விருப்பப்பாடம் என்றானது.
இதற்கு முன்னமே அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும் பொழுது ஹிந்தி தான் தேசிய மொழியாக வேண்டும் என ஒரு குழு விரும்பியது (அதிலேயே சுத்தமான ஹிந்தி ,ஹிந்துஸ்தான் என இரண்டு குழு இருந்தது தனிக்கதை ). அதை எதிர்த்து தென்னக மற்றும் வங்கத்தை சேர்ந்த குழு உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர் ; இறுதியில் தேசிய மொழி என்று ஒன்று இல்லாமலேயே, முன்ஷி அய்யங்கார் திட்டப்படி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அதிகாரப்பூர்வ மொழிகள் ஆயின ; பதினைந்து வருடங்கள் வரை இதே நிலை தொடரும் என்றும் , ஐந்து ஆண்டுகள் கழித்து எப்படி படிப்படியாக ஆங்கிலத்தை விளக்கி ஹிந்தியை தேசிய மொழியாக்குவது என பரிந்துரைகள் தர ஒரு கமிஷன் அமைக்கப்படும் என்றும் குறிக்கப்பட்டன.
படிப்படியாக அரசு ஹிந்தியை வளர்த்தது ;சட்ட ஆணைகளில் ஹிந்தியை பயன்படுத்தியது . டால்மியாபுரத்தை கல்லக்குடி என பெயர் மாற்றம் செய்யசொல்லி 1953 போராட்டம் நடந்து இரண்டு திமுக தொண்டர்கள் உயிர் விட்டார்கள் . அண்ணா, பெரியார் ,முந்தைய ஹிந்தி ஆதரவாளர் ராஜாஜி ஆகியோர் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலமே தொடர வேண்டும் என்று 1956 இல் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே அரசியலமைப்பில் சொன்னபடி கேர் கமிஷன் அமைக்கப்பட்டது ; ஹிந்தியை எப்படி முழுப்பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம் என அது பல்வேறு யோசனைகள் தந்தது . அக்குழுவின் தென்னக மற்றும் வங்க உறுப்பினர்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர் . கோவிந்த் வல்லபாய் பந்த் தலைமையில் இதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது .அதுவும் அதையே சொன்னது . பத்தொன்பது வகையான ஹிந்தி மொழிகள் பேசப்பட்டுக்கொண்டு இருந்த சூழலில் 36 கோடி மக்களில் வெறும் இரண்டரை கோடி மக்கள் மட்டும் பேசிய கடீபோலி ஹிந்தியை தென்னகத்துக்கும் திணித்தார்கள் மக்கள் மீண்டும் போராட எழுந்தார்கள் .
நேரு ,1959 இல் "ஹிந்தி பேசாத மாநில மக்கள் ஆங்கிலத்தை பயன்படுத்தி கொள்ளலாம் ;ஹிந்தி திணிப்பு செய்யப்பட மாட்டாது என்றார் . பந்த் ரெண்டு ஆண்டுகள் போராடி சாதித்தவற்றை பிரதமர் இரண்டு நிமிடங்களில் கெடுத்து விட்டார் என புலம்பினார் ". 1959 இல் தந்த உறுதியை நிஜமாக்க நேரு சட்ட வரைவை கொண்டு வர அதில் ஆங்கிலம் தொடரலாம் என்கிற வார்த்தையை, கண்டிப்பாக தொடரும் என மாற்றச்சொல்லி கேட்டார்கள் தமிழர்கள் . shall be என்கிற வார்த்தையை போட்டுவிட்டு ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக தொடரலாம் என்கிற இடத்தில் may be போட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. நேரு தொடரலாம் என சொன்னதை தொடராமலும் போகலாம் என வருகிறவர்கள் கொள்வார்கள் என பயந்தார்கள் .
அதுவே நடந்தது, சாஸ்திரி பிரதமர் ஆனதும் 15 வருடகால காலக்கெடு முடிந்தது என சொல்லி கட்டாய ஹிந்தியை அறிமுகப்படுத்தினார் .தமிழகம் கொதித்து எழுந்தது . 70 பேர் அதிகாரப்பூர்வ பதிவுகளின் படி தீக்குளித்து கொண்டனர். ஐம்பாதாயிரம் மாணவர்கள் ஊர்வலமாக போனார்கள் ; கலவரங்கள் வெடித்தன. பாரா மிலிடரி படைகள் வந்தன. பக்தவச்சலம் முரண்டு பிடித்தார் .ஒ.வி.அழகேசன் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் பதவி விலக அதை சாஸ்திரி ஏற்றார் ; பின்னர் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பிரிய வழி வகுக்காதீர்கள் என்று சொன்னதற்கு பிறகு ஹிந்தி திணிப்பு நின்றது. அதற்கு பிறகு தேர்வுகளில் ஆங்கிலமும் இருக்கும் என அறிவித்தார்கள் .மும்மொழி கொள்கையை கொண்டு வந்தார்கள் ; அதை எதிர்த்தும் தமிழகத்தில் போராட ஹிந்தி கற்கிற வாய்ப்பு பறிபோனது. 1986 இல் நவோதயா பள்ளிகள் தமிழகம் வரும்பொழுது அதை ஹிந்தி திணிப்பு என கலைஞர் எதிர்த்து போராட்டம் நடத்த இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் ஆனது தமிழ்நாடு.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்திக்கான கால அளவை அதிகப்படுத்துவது, மொரார்ஜி தேசாய் காலத்தில் துணை கமிஷனர் அல்லது அதற்கு மேலான பதவியில் உள்ள ஹிந்தி கற்காத மாநில அதிகாரிகள் கட்டாயம் ஹிந்தி கற்க வேண்டும் என்று உத்தரவு போட்டது,. ராஜீவ் காந்தி காலத்தில் ஹிந்தி வாரம் கொண்டாட வேண்டும் என்று அறிக்கை வந்தது,மத்திய அரசு அதிகாரிகள் ஹிந்தியிலேயே கையெழுத்து போடவேண்டும் என்கிற உத்தரவு, என்.சி.ஆர்.டி. புத்தகங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடியவர்களை முட்டாள்கள் என்று சித்தரித்த கேலிச்சித்திரம் இடம் பெற்றது என்று ஹிந்தி திணிப்புக்கான ஆதரவும், ஹிந்தி திணிப்புக்கு எதிரான எதிர்ப்பை ஹிந்திக்கு எதிரான எதிர்ப்பாகவும் பதிவு செய்வதும் தொடர்கிறது.  முகநூல் பதிவு
-- By Suresh Sureka Subra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக