திங்கள், 30 ஜனவரி, 2017

ஓசூர் ...116 வயது மூதாட்டி .. கண்ணாடி, கைத்தடி, நோய்நொடி எதுவும் இல்லை..! வெத்தலையும் போடுவாங்க!

116 வயது மூதாட்டி
இன்றைய நாகரிக உலகில் நோய்நொடி இல்லாமல் ஒருவர் ஐம்பது வயதை எட்டுவதே ஆச்சரியமாகிவிட்டது. ஆனால்,116 வயதுவரை எந்த நோயும் இல்லாமல் ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அது  ஆச்சர்யம்தானே... அதிசயம்தானே..!
116 வயது மூதாட்டிகிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்து உள்ள ஒன்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்த ராமக்காதான் அந்த ஆரோக்கியம் போற்றும் அதிசய மூதாட்டி. இதுவரை ஐந்து தலைமுறைகளைக் கண்டிருக்கும் ராமக்காவை காண நாம் ஒன்னல்வாடி கிராமத்திற்கு சென்றோம், " ராமக்கா  என்ற பெயரைச் சொன்னதுமே கிராமவாசிகள் அவர் வீட்டுக்கு வழிகாட்டுகிறார்கள். சுத்துக்கட்டு வீடு.. சுற்றிலும் சொந்தங்கள்.. என நிறைந்திருக்கிறது  ராமக்காவின் வீடு.   வீட்டுக்குள் நுழைந்ததும்  தானாகவே காலச்சக்கரம்  40 ஆண்டுகள் பின்னோக்கி ஓடிவிட்ட உணர்வு.  ராமக்காவின் நான்காம் தலைமுறை மனிதர்கள் நம்மை வரவேற்கிறார்கள்.  ராமக்காவின் கொள்ளுப்பேத்தி பாக்யா  (35 வயது) ராமக்காவின் அறைக்கு நம்மை அழைத்துச்சென்றார்.

நைட்டி அணிந்து... கட்டிலில் ஒடுங்கி படுத்திருந்த ராமக்காவிடம், "பத்திரிகைகாரங்க உன்ன பாக்க வந்திருக்காங்க.. எழுந்திருச்சி உட்காரு... ஃபோட்டோ புடிக்கணுமாம்" என்று பாக்யா சொல்ல... அது பளிச்சென ராமக்காவின் காதுகளில் விழுகிறது.  கைகளை ஊன்றி மெல்ல எழுந்திருத்திருக்கிறார். கண்களை துடைத்துக்கொண்ட  ராமக்கா நம்மை பார்த்த முதல் வேலையாக 'நல்லா இருங்க' என ஆசிர்வாதம் செய்து விட்டு... வெற்றிலையை இடித்து தன் வாயில் போட்டுக்கொண்டார்.
சாப்ட்டீங்களா பாட்டி.?  என்று நாம் கேட்டதும்  ''ம்ம்.. சாப்ட்டேன்..!'' என்று உடனடியாக  பதில் வருகிறது. முதுமை காரணமாக தளர்ந்தே இருந்தார் அவர். ஆனால் எந்த நோய் நொடிக்கும் ஆளாகவில்லை என்பதும், அவர் வேலையே அவரே செய்து கொள்கிறார் என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேற்கொண்டு அவரை தொந்தரவு செய்ய மனமில்லாததால் அவரை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு, அவரது கொள்ளுப்பேத்தி பாக்யாவிடம் பேசினோம்,
116 வயது மூதாட்டி"இவங்க எனக்கு கொள்ளுப்பாட்டி.  இவங்க கணவருடைய பெயர் சின்ன சின்னப்பா இவங்களுக்கு குழந்தை இல்லை.  ஆனால், இவங்க கணவருடைய அண்ணன் பெரிய சின்னப்பாவுக்கு ஆறு பிள்ளைகள். அந்த ஆறு பிள்ளைகளையும் தன் பிள்ளைங்க போல ராமக்கா பாட்டியும், தாத்தாவும் பார்த்துட்டாங்களாம். அந்த ஆறு பிள்ளைங்களோட ஜெனரேஷன்தான் நானெல்லாம். எனக்கு பிள்ளைகள் இருக்காங்க. எங்க ராமக்கா பாட்டி இதுவரைக்கும் ஐந்து தலைமுறைகளை பாத்துருக்காங்க. எங்க குடும்பத்துல இருபது கல்யாணம் அவங்க கையால நடத்தி வச்சிருக்காங்க.  ஆறு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் ரொம்ப நல்லா இருந்தாங்க. பெரும்பாலும் 'களி' தான் சாப்பிடுவாங்க.  இவ்வளவு தள்ளாத வயசுலயும் அவுங்களுக்கு தேவையான உணவை அவங்களேதான் செஞ்சு சாப்டுவாங்க. நீங்க ஏன் சிரமப்படுறீங்க... நாங்க செஞ்சு தர்றோம்னா அதெல்லாம் வேணாம்னு சொல்லிடுவாங்க.  அந்த காலத்து கைப்பக்குவத்துல  அவ்வளவு சூப்பரா சமைப்பாங்க. அவுங்க தேவையை அவுங்களே நிறைவேத்திக்கிறது மட்டுமில்லாம, எங்களுக்கு காய் நறுக்கி தர்றது, கடலை உடைச்சி தர்றதுனு எங்களுக்கும் சின்ன சின்ன உதவிகளை செஞ்சி கொடுப்பாங்க.
ஆறு மாசத்துக்கு முன்னாடி திடீர்னு கீழ விழுந்துட்டாங்க. அதுக்குப்பிறகுதான் ரொம்ப உடல் மோசமாகியிருக்கு.  இதுவரைக்கும் அவுங்க கண்ணாடி போட்டுகிட்டது இல்லை. இதுவரைக்கும் நோய்னு ஆஸ்பத்திருக்கு போனது கிடையாது. சளி, காய்ச்சல் மட்டும் அப்பப்ப வரும் கசாயம் குடிச்சிப்பாங்க. அவசியப்பட்டா கிராமத்துக்கு வரும் டாக்டர்களை வீட்டுக்கு வரவச்சு காமிச்சிப்போம். கண் ஆபரேஷன் மட்டும் பண்ணிருக்காங்க. ஆபரேஷன் பண்ணப்ப கூட கண்ணாடி போட மாட்டேன்னு சொல்லீட்டாங்க. கண்ணாடி, கைத்தடி, ஸ்வெட்டர்னு எதையும் போட்டுக்க மாட்டாங்க. ஆனா வெத்தலை போடுற பழக்கத்தை மட்டும் விடவே மாட்டேங்குறாங்க.
இன்னவரைக்கும் எங்க குடும்பம் அத்துனையும் ஒத்துமையா இருக்கோம்னா அதுக்கு காரணம் ராமக்கா பாட்டிதான். அவுங்க பாசத்தை காட்டி வளர்த்த விதம்தான். போன வாரம்தான் அவுங்களுக்கு கனகாபிஷேகம் பண்ணோம். அவுங்க இன்னும் நெறைய நாள் எங்க கூட இருப்பாங்கன்ற நம்பிக்கையும் ஆசையும் எங்களுக்கு இருக்கு. எந்த முக்கியமான முடிவு எடுத்தாலும்  எல்லாரும் கூடி அவுங்ககிட்ட ஒருவார்த்தை கேட்டுட்டுதான் எடுப்போம். இன்னும் அவுங்களுக்கான மரியாதையை நாங்க கொடுத்துகிட்டுதான் இருக்கோம்.  ஏன்னா அவங்க தான் எங்களுக்கு எல்லாமுமே" என்றார்.
5 தலைமுறைகள் கண்டு, 116 வயதில் பேரன், பேத்திகள், கொள்ளுபேரன்கள் என 75 பேருடன் சீரான உடல்நிலையோடு, ஆரோக்கிய ஸ்மைலியுடன் இருக்கிறார் ராமக்கா
-எம்.புண்ணியமூர்த்தி விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக