புதன், 4 ஜனவரி, 2017

சொத்து குவிப்பு வழக்கில் 10ம் தேதிக்குள் தீர்ப்பு? ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் இளவரசி..

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், வரும், 10ம் தேதிக்குள், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என, கூறப்படுகிறது. வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக, முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, தமிழகத்தில் நடந்தால் நேர்மையாக இருக்காது எனக் கூறி, தி.மு.க., தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று, வழக்கு விசாரணையை கர்நாடகா மாநிலத்திற்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமினில் வெளியே வந்தனர்
உச்ச நீதிமன்ற கண்காணிப்பில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, 2014செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. அதில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உடன் நால்வரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்; பின், ஜாமினில் வெளியே வந்தனர்.
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த, உயர் நீதிமன்றம், 2015 மே 11ல், நான்கு பேரையும் விடுதலை செய்தது.
 விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு, ஜூன் மாதம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா, திடீர் மரணம் அடைந்ததால், எஞ்சிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வரும், 10ம் தேதிக்குள், இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த தீர்ப்புக்கு பின், முதல்வர் பதவியேற்பது குறித்து சசிகலா முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது. - நமது நிருபர் - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக