வியாழன், 15 டிசம்பர், 2016

இந்தியாவின் கோரிக்கைக்கு பூட்டான் மறுப்பு ! setback for India - Bhutan relationship.

In a major setback to India's regional cooperation strategy, Bhutan's Upper House has rejected a move to have the country join the Bangladesh, Bhutan, India, Nepal Motor Vehicles Agreement (BBIN MVA), citing environmental concerns. The four South Asian nations signed the BBIN agreement in June last year in Thimphu, Bhutan, in what was seen as a significant symbol of sub-regional unity. The agreement allowed for the regulation of passenger, personal and cargo vehicular traffic among the four countries.
அண்டை நாடுகளிலேயே இந்தியாவுடன் மிகவும் அணுக்கமாகவும், நெருக்கமாகவும் இருந்து வரும் நாடு பூடான்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியக் குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வரவிருந்த ஓமன் நாட்டு சுல்தான் திடீரெனத் தனது வருகையை ரத்து செய்தபோது, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தான் வருவதாகக் கூறி நமக்கு கை கொடுத்தவர் பூடான் அரசர் ஜிக்மி கேசர் நம்கெயல் வாங்சுக். சர்வதேச அமைப்புகளிலும் சரி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்புப் பிரச்னைகளிலும் சரி, இந்தியாவை முழுமையாக ஆதரித்து வரும் நாடும் பூடான்தான்.

அதனால்தான், பூடான் நாடாளுமன்றத்தின் மேல்சபை, இந்தியாவால் முன்மொழியப்பட்ட "பி.பி.ஐ.என்.' எனப்படும் வங்கதேசம், பூடான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளை இணைக்கும் மோட்டார் வாகன ஒப்பந்தத்தை நிராகரித்திருப்பது அதிர்ச்சி அலைகளை எழுப்பி இருக்கிறது. இந்தியாவுடனான பூடானின் ராஜீய நெருக்கம் குறைகிறதோ என்கிற அச்சத்தையும் சர்வதேச அரங்கில் எழுப்பி இருக்கிறது.
வங்கதேசத்தையும் நேபாளத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலை என்பது இந்தியா நீண்டநாட்களாக முன்மொழிந்து வரும் கனவுத் திட்டம். இதன்மூலம், நிலத்தால் சூழப்பட்ட, துறைமுக வசதி இல்லாத பூடானும், நேபாளமும் பயன் பெறும் என்பதும்கூட இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
இந்தத் திட்டம் நிறைவேற வேண்டுமானால் வங்கதேசம், பூடான், இந்தியா, நேபாளம் ஆகிய நான்கு நாடுகளின் நாடாளுமன்றங்களும் இதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும். ஏற்கெனவே, வங்கதேசம், இந்தியா, நேபாளம் ஆகிய மூன்று நாடுகளும் இந்த ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் வழங்கிவிட்டன. பூடானின் தேசியப் பேரவை எனப்படும் மக்களவையும் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்து விட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், பூடான் தேசிய கவுன்சில் எனப்படும் நாடாளுமன்ற மேலவை, இந்த ஒப்பந்தத்தை நிராகரித்து வாக்களித்திருக்கிறது.
பூடானின் மக்களவை இந்தப் பிரச்னையை விவாதித்தபோதே, மேலவையில் இதற்கு எதிர்ப்பு எழக்கூடும் என்பதை இந்திய அதிகாரிகள் உணர்ந்து செயல்பட்டிருந்தால் பிரச்னையே எழுந்திருக்காது. பூடான் மக்களவையில், இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜிக்மே தின்லே கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். அதையும் மீறித்தான் இந்த ஒப்பந்தம் மக்களவையில் நிறைவேறியது என்றாலும், மேலவையில் எதிர்க்கட்சிக்கு கணிசமான உறுப்பினர்கள் இருப்பதால், கவனமாகக் கையாண்டிருக்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
தனிப்பட்ட முறையில், எதிர்க்கட்சித் தலைவர் ஜிக்மே தின்லேக்கு இந்தியாவின் மீது கோபம் உண்டு. கடந்த முறை அவர் பிரதமராக இருந்தபோது, இந்தியாவுக்குத் தெரியாமல் சீனாவுடன் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டார். இது தெரிந்ததால், இந்திய அரசு பூடானுக்குத் தரப்படும் சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை ரத்து செய்தது. அதன் விளைவாக ஜிக்மே தின்லே தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதற்கு இந்தியாவைப் பழிவாங்கக் காத்திருந்த ஜிக்மே தின்லே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
பூடானின் இரு சபைகளையும் ஒருங்கிணைத்து, இந்த ஒப்பந்தத்துக்கு அங்கீகாரம் பெற்று விடலாம் என்றாலும், ஜிக்மே தின்லேயின் எதிர்ப்பு மட்டுமே, பூடான் மேலவையில் இந்தத் தீர்மானம் தோல்வியடைவதற்குக் காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. பூடானில் உள்ள அறிவுஜீவிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பெளத்த மத குருமார்களும்கூட இந்தத் திட்டம் குறித்துப் பலவிதமான கேள்விகளையும், கவலைகளையும் தெரிவிக்கிறார்கள்.
வங்கதேசத் துறைமுகங்களிலிருந்து, இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் நடைபெறக்கூடிய சரக்குப் போக்குவரத்தால், பூடானின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இயற்கைச் சூழலில் உள்ள பூடானில் காற்று மாசு அதிகரித்து அதன் ஆரோக்கியம் சேதப்படும் என்றும் அச்சம் தெரிவிக்கிறார்கள். இமயமலையில் அமைந்த சிறிய நாடான பூடானில் இப்போது மோட்டார் வாகனப் போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருக்கிறது. இது அதிகரிப்பதை அந்த நாட்டு மக்கள் விரும்பவில்லை.
அவர்கள் தெரிவிக்கும் கவலைகள் புறம்தள்ளக் கூடியவை அல்ல. பூடானின் வருங்கால வளர்ச்சிக்கு, இதுபோலவொரு நெடுஞ்சாலையும், அதிகரித்த மோட்டார் வாகனப் போக்குவரத்தும் அத்தியாவசியம் என்கிற இந்திய அரசின் வாதத்தில் அர்த்தமில்லை. பூடானைப் பொருத்தவரை, மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை அந்த இயற்கை சூழ்ந்த நாடு எட்டுவது அசாத்தியம். அவர்கள் சுற்றுலாப் பயணிகளையும், இந்தியா வழங்கும் மானியங்களையும் நம்பி இயற்கையோடு இயைந்த அமைதியான வாழ்க்கை நடத்துபவர்கள். அவர்களை நெருக்கடி கொடுத்து ஏற்றுக்கொள்ள வைப்பது, பூடானை நாமே வலியப்போய் சீனாவிடம் தள்ளுவதாக அமைந்துவிடும்.
அவ்வளவு எளிதாக பூடான் மக்கள் இந்தியாவிடமிருந்து அகன்றுவிட மாட்டார்கள். பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் அவர்கள் இந்தியாவை அண்டி வாழ்பவர்கள். அவர்களது நியாயமான கவலைகளை அங்கீகரிப்பதுதான் சரியே தவிர, பூடானை இந்திய அரசு நிர்பந்தப்படுத்தி மோட்டார் வாகன ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளச் செய்ய முயலக்கூடாது. பூடானுக்கு உடன்பாடு இல்லையென்றால் வங்கதேசம், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளை இணைக்கும் நெடுஞ்சாலையை அமைத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும். நல்லதொரு நண்பனை நாம் இழந்துவிடக் கூடாது! தினமணி தலையங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக