சனி, 31 டிசம்பர், 2016

தமிழகம் கடத்தப்பட்டு உள்ளது.. நடந்து கொண்டிருப்பது High Jack.. ஒரு மோசடிகும்பல் அரங்கேற்றும் கூட்டுகொள்ளை !

ஜெயலலிதா ஏன் சசிகலாவை அரசியல் களத்தில் நிறுத்த விரும்பியதில்லை, அனுமதிக்கவில்லை?
அறிவழகன் கைவல்யம்அறிவழகன் கைவல்யம்  |; ; அ.தி.மு.க வின் பொதுச் செயலாளராக திருமதி.சசிகலா, அந்தக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது, இந்த நியமனம் அ.தி.மு.க வின் விதிகளுக்கு உட்பட்ட தனித்த முடிவு.
இந்த முடிவின் மீது விமர்சனம் வைக்கப்படுவதும், மறுபுறம் அது அவர்களது உட்கட்சி ஜனநாயகம், மற்றவர்கள் பேசுவதற்கு ஏதுமில்லை என்று சொல்வதுமாகத் தமிழக அரசியல் களம் சூடாகி இருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையிலும், தாய்க்கழக வரிசையிலும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.
கடந்த முப்பதாண்டு கால வரலாற்றில் ஜெயலலிதாவுடன் தொடர்ந்து வாழ்ந்தவர், அவரது தனிப்பட்ட தேவைகளைக் கவனித்துக் கொண்டவர், அவரது பயணங்களில், வழக்குகளில், ஊழல்களில் என்று வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்து வந்தவர் என்பது ஒன்றுதான் திருமதி.சசிகலாவின் தகுதி. ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சியின் பொதுக்குழு தேர்வு செய்திருக்கிற பெண்ணை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்கிற ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.

திருமதி.சசிகலா ஏன் எதிர்க்கப்பட வேண்டும்?
அரசியல் என்பது சமூகத்தின் அடுக்குகள் எல்லாவற்றின் மீதும் நேரடியான தாக்கம் விளைவிக்கிற ஒரு கருவி, இந்தக் கருவிக்கென்று சில அடிப்படைத் தகுதிகள் உண்டு, வெகு மக்கள் தளங்களில் இருந்து, பல்வேறு போராட்டங்கள், வெளிப்படையான உழைப்பு, மக்கள் செல்வாக்கு என்று படிப்படியாக வளர்ச்சி பெற்று மக்களால் தேர்வு செய்யப்படும் பதவிகளில் அமர்ந்து ஒரு கட்சியின் தலைவராக, பொதுச் செயலாளராக பரிணாம வளர்ச்சி அடைவது ஒரு மாநிலத்தின் முதல்வர் என்கிற மிகப்பெரிய நிலையை அடைவது என்பது பொதுவான விதி.
இந்த விதி சசிகலாவுக்கு ஒருபோதும் பொருந்தாது. நேரடியான வெகுமக்களின் அரசியல் தளங்களில் நாம் இதுவரை சசிகலாவை இதுவரை பார்த்ததில்லை. அவரது குரல் பொதுத் தளங்களில் ஒருபோதும் ஒலித்ததில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்டதில்லை.தான் சார்ந்திருக்கிற சமூகத்தின் சமகாலச் சிக்கல்களில் ஒருபோதும் சசிகலாவின் குரலோ, அவரது பங்காற்றலோ இருந்ததாக எனக்கு நினைவில்லை.
சசிகலா ஒரு நல்ல அரசியல் தலைவர் என்று ஜெயலலிதாவால் அறியப்பட்டிருப்பாரேயானால், குறைந்த பட்சம் தஞ்சை மாவட்டச் செயலாளராகவாவது அறிவித்திருப்பார், மக்கள் பணியாற்றக்கூடிய கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பலரை ஜெயலலிதா அமைச்சர்களாக்கி அழகு செய்திருக்கிறார், ஆனால், ஒருபோதும் சசிகலாவை அவர் அரசியல் களத்தில் நிறுத்த விரும்பியதில்லை, அனுமதிக்கவில்லை.
ஏனெனில் சசிகலாவை தனது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தோழியாகவோ, தனிச் செயலராகவோ மட்டுமே அவர் முன்னிறுத்தினார். ஆகவே, ஜெயலலிதாவின் அரசியல் முடிவுகளுக்கு எல்லாம் சசிகலா உற்ற துணையாக இருந்தார் என்று முன்வைக்கப்படும் வாதம் சொத்தையானது மட்டுமன்றி நேர்மையற்றதும் கூட.
அதிமுகவைப் போன்ற மிகப்பெரிய மக்கள் இயக்கத்தில், மக்கள் மன்றத்தில் நின்று, மக்கள் பணியாற்றி, தேர்தல்களில் வெற்றி தோல்வி என்று ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றிலும் முன்னின்ற தலைவர்களும், தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் இருக்க, ஜெயலலிதாவின் கூடவே இருந்தார் என்கிற ஒற்றைத் தகுதியை மட்டுமே வைத்துக் கொண்டு ஒருவர் கட்சி மற்றும் ஆட்சியின் அதிகார மையமாக உருவெடுப்பது வெகு மக்களுக்குச் செய்யப்படும் துரோகம். கட்சியின் உயிர் நாதமாக விளங்கும் அடிமட்டத் தொண்டன் ஒவ்வொருவனுக்கும் செய்யப்படுகிற அநீதி.
தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக அதிமுகவின் ஜனநாயகப் பண்புகள் அழிக்கப்பட்டு ஜெயலலிதா ஒற்றை அதிகார மையமாக முன்னிறுத்தப்பட்டு, கட்சியும் ஆட்சியும் ஏறத்தாழ அடிமைகளின் கூடாரம் போல, வேற்று மாநில மக்கள் ஏளனம் பேசுகிற அளவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சர்வாதிகார நிலைப்பாடு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அழிந்து எளிய உழைக்கும் மக்களை முன்னிறுத்துகிற ஒரு பண்பாட்டு வளர்ச்சியை அதிமுக அடைய வேண்டுமென்றால் சசிகலாவை யாரும் எதிர்த்தே ஆகவேண்டும். ஏனெனில், மீண்டும் ஒரு ஜெயலலிதாவின் சர்வாதிகாரப் பண்புகளைக் கொண்ட தலைமை அரசியல் சாபக்கேடாகவே நீடிக்கும்.
ஜெயலலிதா, தனது ஊழல்களால் நன்கு அறியப்பட்டவர், ஊடகங்களிலும், நீதி மன்றங்களிலும், மக்கள் மன்றங்களிலும், அவரது ஊழல்கள் புகழ் பெற்றவை, டான்சி நில வழக்கு, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு துவங்கி இன்றைய சேகர் ரெட்டி மற்றும் ராம்மோகன் ராவ் சொத்துக் குவிப்பு வழக்குகள் வரை ஜெயலலிதாவின் ஊழல் நிழல் படிந்தபடியே தானிருக்கிறது. எல்லாக் காலங்களிலும், ஜெயலலிதாவின் ஊழல்களோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து இருந்தவர் சசிகலா, சிறைச்சாலை வரையில் இணை பிரியாதிருந்த அவர்களின் நட்பு ஊழலின் பாற்பட்டது. நேர்மையானவர், மக்கள் நலனில் அக்கறை செலுத்தியவர் என்கிற எந்த அடையாளமும் சசிகலாவுக்கு இதுவரை கிடையாது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சசிகலா சாதிய அடையாளங்களை முன்னிறுத்தி குறுக்கு வழியில் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம் செலுத்தியவர் என்பது பொதுவாகவே அறியப்பட்ட ஒரு செய்தி, தமிழகத்தின் ஆதிக்க சாதி அரசியல் சூழல் மாற்றம் பெற வேண்டிய, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை முன்னேற்றம் காண வேண்டிய ஒரு சூழலில் சசிகலாவைப் போல சாதிக் குறியீடுகளால் அடையாளம் காணப்படுகிற ஒருவர் அதிமுகவின் தலைவராகப் பொறுப்பேற்பது எந்த வகையிலும் தமிழக மக்களின் வாழ்வுக்கு நன்மை தராது.
இறுதியாகத் தமிழக மக்கள் வாக்களித்தோ, அல்லது இடைத்தரகர்களின் வாக்குச் சிதைவு மூலமாகவோ தேர்வு செய்தது ஜெயலலிதா என்கிற மக்கள் மன்றத்தில் அறியப்பட்ட ஒரு தலைவரையும் அவரது தலைமையிலான 130 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் மட்டுமே, எதிராக வாக்களித்தவர்களின் பிரதிநிதிகளாக திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 98 பேர் களத்தில் இருக்கிறார்கள்.
சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைப்பதில் தோல்வியுற்றிருந்தாலும், எல்லா உறுப்பினர்களின் முதல்வராக ஜெயலலிதா அறியப்பட்டிருந்தார், இந்தக் கேள்விகளும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார், ஆனால், அந்த இடத்தில் அமரக் கூடிய தகுதியும், திறனும் மக்கள் மன்றத்தில் இருந்து, மக்கள் பணியாற்றிய ஒரு தலைவருக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
சசிகலாவைப் போல குறுக்கு வழி அதிகார போதையில் திளைத்திருந்த ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்து அவரை மக்களின் தலைவராக முன்னிறுத்துவது, ஜனநாயகத்தில் குற்றச் செயல். அதை யார் செய்தாலும் அறிவுத் தளங்களில் இயங்குபவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
சசிகலாவை அதிமுக வின் பொதுச் செயலராக ஏற்றுக் கொள்வது என்பது வெறும் அதிமுகவின் சிக்கல் மட்டுமல்ல, அது சமூகத்தின் சிக்கல், அது வெகு மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளுக்கு எதிரான மிகப்பெரிய சிக்கல், அவர் மக்கள் மன்றத்தில் இருந்து வரட்டும், நமக்கு எந்த ஆட்சேபனைகளும் இல்லை.
அறிவழகன் கைவல்யம், சமூக அரசியல் விமர்சகர். மின்னம்பலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக