சனி, 31 டிசம்பர், 2016

அனைத்துக்கும் பின்னால் நடராஜன் : பொதுக்குழுவுக்கு முன்பும்... பின்பும்...!

முடியாது... நடக்காது’ என்று யூகிக்கப்பட்ட அனைத்தையும் யூகங்கள் ஆக்கி... பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார், சசிகலா. அச்சு பிசகாமல் திட்டமிட்டபடி அனைத்தையும் நடத்தி முடித்து இருக்கிறார்கள் கழகக் கண்மணிகள். கட்சியின் நிர்வாகிகள் வேண்டுமானால், ஆதரவாக இருக்கலாம்; ஆனால், தொண்டர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லிவந்த நிலையில்... வீட்டில் இருந்த சசிகலாவைத் தேடி பொதுச் செயலாளர் பதவி நியமனம் செய்யப்பட... அவருக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்கிற கேள்விதான் டெல்லி முதல் தி.மு.க வரை தொங்கித்தொங்கி நிற்கிறது.
டெல்லியின் அச்சுறுத்தல்கள்!  

முதலில் இருந்தே சசிகலாவை எதிர்த்துவரும் பி.ஜே.பி-யினர்... அவரை, கட்சியைவிட்டு வெளியேறுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சசிகலாவிடம் பேச... நிர்மலா சீதாராமன் அனுப்பிவைக்கப்பட்டார். ஜெயலலிதா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு 7 முறை தமிழகம் வந்திருந்தார் அவர். அதில், பலமுறை சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். சசிகலாவை வழிக்குக் கொண்டுவரும் பொறுப்பை நிர்மலா சரியாகச் செய்தாலும், கட்சியைவிட்டு வெளியேறுவதற்கு மட்டும் தொடர்ந்து பிடி  கொடுக்காமல் இருந்துள்ளார். இதற்குப் பிறகு வெங்கய்ய நாயுடுவைக் களம் இறக்கியது பி.ஜே.பி. கடந்த 4-ம் தேதி  ஜெயலலிதா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே... அசுரவேகத்தில் களம் இறங்கியது பி.ஜே.பி. சசிகலாவை, கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படுவதற்கு பி.ஜே.பி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. அதனால், எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் வரவழைத்து... அப்போலோ மருத்துவமனையில், தனக்கு ஆதரவாகக்  கையெழுத்துகளை சசிகலா வாங்கிய விஷயம் தெரிந்தது. அந்த ஃபைலை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு  அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு நேரில் வந்த வெங்கய்ய நாயுடு... அவர், தயார் செய்துகொண்டு வந்திருந்த ஃபைலில்... எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் கையெழுத்துப் போடவைத்து கவர்னர் மாளிகைக்கு அழைத்துச்சென்றார். அத்துடன் அன்று இரவே அவர்களைப் பதவி ஏற்கவைத்தது வரை எல்லாமே வெங்கய்ய நாயுடு உத்தரவின் கீழ்தான் நடந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஆளுநர் மற்றும் தமிழக பி.ஜே.பி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார். அதன்படி, தமிழகத்தில் ஆளுநர் அனுமதி இல்லாமல் எந்த ஃபைலும் நகரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
போயஸ் கார்டன் இல்லத்தில் நடராஜனும், சசிகலாவும் அமைச்சர்களை சந்தித்துப் பேசிய மறுநாளே... சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனையை நடத்தினர். இது, சசிகலா தரப்புக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்பட்டது. டெல்லி சென்றுவந்த பிறகு... ஓ.பி.எஸ்., கார்டன்  சென்று சசிகலாவை சந்திக்கவில்லை. அதைத் தொடர்ந்தே ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இது, எல்லாம் சசிகலாவுக்கு டெல்லி கொடுத்த அழுத்தங்கள்.
பதுங்கிப் பாய்ந்த சசிகலா! 
மத்திய அரசுடன் சுமுகமாகப் போகவே சசிகலா விரும்பினார். அதற்காகச் சில விஷயங்களையும்... அவர், மத்திய  அரசுக்கு செய்துகொடுத்தார். ‘‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம், தேசிய அளவிலான தகுதி நுழைவுத் தேர்வு திட்டம் (நீட்), அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர வழிவகுக்கும் 4 அடுக்கு வரிமுறையான விற்பனை வரி முறை (ஜி.எஸ்.டி.) உள்ளிட்ட திட்டங்களை ஆதரிக்காது’’ என்று ஜெயலலிதா கூறிவந்த நிலையில், அந்தத் திட்டங்களுக்கு எல்லாம் அ.தி.மு.க ஆதரித்துக் கையெழுத்துப் போடவைத்தது; ஜெயலலிதா  எதிர்த்த பறக்கும் சாலை திட்டத்துக்கு அனுமதி வழங்கியது; ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்ததற்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியது என்று பல்வேறு சமாதான முயற்சிகளை எடுத்தாலும் எதற்கும் மசியவில்லை, மத்திய அரசு.
அதற்காகச் சும்மாவும் இருக்கவில்லை சசிகலா. ஒருபக்கம், சமாதான முயற்சி செய்துகொண்டு இருந்தாலும்...  மறுபக்கம், தனக்கான வேலைகளைச் செய்துகொண்டு இருந்தார் சசிகலா. அடக்கம் செய்த மறுநாள், ‘துக்ளக்’ ஆசிரியர் சோ மரணத்துக்கு அஞ்சலி செலுத்த சசிகலா சென்றபோது, அவர்தான் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படுவார் என்று மறைமுகமாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, போயஸ் கார்டன் வீட்டில் தினமும் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காலையில், கட்சிக்காரர்களைச் சந்திப்பதும்... மதியத்துக்கு மேல், அமைச்சர்களைச் சந்திப்பதும் என்று பரபரப்புக் காட்டினார். இதற்கிடையில் சசிகலா பொதுச் செயலாளராக வந்தால்... கட்சிக்குள் செங்கோட்டையன், மதுசூதனன், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் போன்றவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வளைக்க தி.மு.க ஒருபக்கம் முயற்சி செய்யும் என்ற பேச்சும் பரவலாக இருந்தது. ஆனால், இந்தச் சந்தேகங்கள் அத்தனையும் மன்னார்குடி குடும்பத்தின் வியூகத்தில் காலியாகின. போயஸ் கார்டன் வீட்டு வாசலில் சசிகலாவுக்கு முன், செங்கோட்டையனும் மதுசூதனனும் கைகட்டி நின்றார்கள். ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் தலைமையை எதிர்த்த சைதை துரைசாமி, “சின்ன அம்மாவால்தான் அ.தி.மு.க-வைக் காப்பாற்ற முடியும். எனவே, அவர்தான் பொதுச்செயலாளர் பதவிக்கு வரவேண்டும்” என்று பேட்டி கொடுத்தார். தமிழகத்தின் அரசியல் சூழலை கொஞ்சமும் உள்வாங்கிக் கொள்ளாத பி.ஜே.பி., புறவாசல் வழியாக அ.தி.மு.க அரசாங்கத்தையும் கட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று நினைத்து, காய்களை நகர்த்தியது. ஆனால், சசிகலா அசைந்து கொடுக்கவில்லை. ரெய்டுகள் சென்னை முழுவதும் பறந்தன. சேகர் ரெட்டி தொடங்கி, தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டுக்குள் நுழைந்த வருமானவரித் துறை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள்ளும் நுழைந்தது. ஆனால், அப்போதும் சசிகலா அசராமல் இருந்தார்.
அத்துடன் 29-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு என்று அறிவிக்கவைத்து... அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரையும் கார்டனுக்கு வரவழைத்து... தன்னை, பொதுச்செயலாளர் பதவிக்கு நியமனம் செய்யும்படி கேட்க  வைத்தார். தொடர்ந்து மீடியா அதிபர்களைச் சந்தித்து அவர்கள் ஆதரவு தனக்குத்தான் என உணர்த்தினார். உச்சபட்சமாக பச்சமுத்து கைதுக்குப் பிறகு, கோபத்தில் இருந்த அவரது மகன்களே வந்து சசிகலாவைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருந்தனர். ‘சசிகலா தரப்பினர் - துணைவேந்தர்கள் சந்திப்பு’ என  நீண்டுகொண்டு இருந்த இந்தக் கதைக்கு... ஓ.பி.எஸ்., டெல்லி சென்ற அன்று... அமைச்சர் உதயகுமார், ‘‘சசிகலா, முதலமைச்சராக... பன்னீர்செல்வம் வழிவிட வேண்டும்’’ என பேட்டி கொடுக்கும் அளவுக்குக் கட்சியினர்  சசிகலாவுக்கு விசுவாசத்தைக் காட்ட ஆரம்பித்தனர்.
அனைத்துக்கும் பின்னால் நடராஜன்! 
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது... காங்கிரஸ்காரர்களுக்குக்கூடத் தெரியாமல் ராகுலை  அப்போலோவில் இறக்கிய நாளில் இருந்து ஆரம்பித்தது நடராஜனின் ஆபரேஷன். டெல்லியின் அத்தனை  நெருக்குதல்களுக்கும் புதுப்புது வியூகங்கள் மூலம் அணை கட்டினார் நடராஜன். தொல்.திருமாவளவன் முதல் ஸ்டாலின் வரை அப்போலோ வாசலுக்கு வரவழைத்தார். ஒவ்வொரு முறை மத்திய அரசு நெருக்கும்போதெல்லாம் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளைவைத்து அதைத் திசை திருப்பினார். ஜெயலலிதா, மறைவுக்குப் பின்பு அவரின்  பெசன்ட் நகர் இல்லம் அடுத்த போயஸ் கார்டனாகியது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்த கட்சி நிர்வாகிகள், வேதா இல்லம் நோக்கித் திரும்பினர். எல்லோருக்கும் பின்னணியில் பேச்சுவார்த்தைகள்  நடத்தப்பட்டன. அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. எதிர்த்த  செங்கோட்டையன்கூட இறங்கிவந்தார். இதையடுத்து கட்சி நடவடிக்கைகளைக் கண்காணிக்கக் குடும்ப உறுப்பினர்களைத் தேர்வு செய்தார். அதன்படி கட்சி நிர்வாகிகளைப் பார்த்துக்கொள்ள டி.டி.வி.தினகரனையும், அலுவலக வேலைகளைக் கவனித்துக்கொள்ள வெங்கடேசையும் நியமித்தார் நடராஜன். இவர்கள் ஏற்படுத்திய பாதையில் எந்த மாற்றமும் இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது பொதுக் குழு.
பொதுக்குழுவுக்குப் பிறகு...! 
நேற்று காலை முதலே பரபரப்புடன் இயங்கிவந்தது போயஸ் கார்டன். முன்பே திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வு முடித்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டதுபோல் இருந்தது கார்டன் நிகழ்வுகள். காலை 9 மணிக்கு முன்பே நடராஜன் உட்பட குடும்ப உறவுகள் அனைவரும் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆஜர் ஆகிவிட்டனர். பொதுக் குழு நடந்துகொண்டு இருக்கும்போதே பூச்செண்டுகளும்... மாலைகளும்... கோயில் பிரசாதங்களும் வேதா இல்ல வாசலுக்கு வரத் தொடங்கிவிட்டன. சரியாக 9.45 மணிக்கு வந்த பன்னீர்செல்வம்  உள்ளிட்ட நிர்வாகிகள் நேராக பொதுக்குழு தீர்மானத்தைக் கொடுத்துத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். இதன்பிறகு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். இன்று, போயஸ் கார்டன் நடவடிக்கைகள் எல்லாமே வழக்கத்தைவிட மாறியுள்ளதாகக் கட்சி நிர்வாகிகள்  தெரிவித்தனர். போயஸ் கார்டன் முகப்பிலே தடுப்புகள் போட்டு யாரையும் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு  ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு என்னென்ன வழிமுறைகள் உண்டோ... அதேபோல இன்று சசிகலாவைச் சந்திக்க வந்தவர்களுக்கும் பின்பற்றப்பட்டது. ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு முன்பு எப்படிப் பேசவேண்டும், எப்படி நிற்க வேண்டும் என்று எல்லாம் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுப்பது உண்டு. அதேபோன்று, இன்று சந்திக்க வந்தவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இளவரசி மகன் விவேக் மட்டும், போவதும் வருவதுமாக இருந்தார். மற்றபடி உறவுகள் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை.  பிரம்மா     விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக