வெள்ளி, 30 டிசம்பர், 2016

சசிகலா கடக்க வேண்டியது பெருந்தூரம்!

அதிமுகவின் இன்றைய பிரமுகர்களுக்கும், தலைவர்களுக்கும் சின்னம்மா என்ற பெயர் புதிதல்ல. போயஸ் கார்டனுக்கு சென்று வரும் எவர் ஒருவருக்குமே ஜெயலலிதாவின் நிழலாகத் தொடர்ந்து அவருக்கு அடுத்த நிலையில் செல்வாக்கோடு இருந்த சசிகலாவைத்தான் சின்னமா என்று தெரியும்.
ஜெயலலிதா இறந்து அவர் எம்.ஜி.ஆர் சமாதியில் புதைக்கப்படும் வரை அவரோடு 33 ஆண்டுகள் உடன் இருந்தவர். அந்த ஒரு அந்தஸ்துதான் வி.கே. சசிகலாவை இந்தப் பதவிக்கு கொண்டு வந்திருக்கிறது.

சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டது முதல் அவருடைய ஆளுமை குறித்து பல்வேறு தளங்களில் பல்வேறு கோணங்களில் அலசப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு சசிகலா 33 ஆண்டுகளுக்கும் மேல் இருந்திருக்கலாம். கட்சிப் பணிகளில் ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக செயலாற்றியிருக்கலாம். கட்சி நிர்வாகிகளோடு நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கலாம். ஆனால் ஒரு கட்சிக்கு தலைமை ஏற்பது என்பது கட்சிப் பணி மற்றும் நிர்வாகிகளோடு முடிந்துவிடுவதில்லை. அவரது பணி மக்களோடு தொடர்புகொள்ளும் இடத்தில்தான் முக்கியத்துவம் பெறுகிறது. அரசியலுக்கு சாதுர்யம் மற்றும் சாணக்கியத்தனம் மட்டும் போதாது. துடிப்பு மிகுந்த பேச்சு அரசியலில் அவசியமாகிறது. ஆனால் இதுவரை சசிகலா உரையாற்றி மக்கள் கேட்டதில்லை. அரசியலில் உரைவீச்சிற்கு பலமான சக்தி உண்டு. உலகத்தில் பல வெற்றிகரமான அரசியல்வாதிகள் தங்கள் உரைகளின் மூலமே மக்களின் மனதில் இடம்பிடித்தனர். அந்த ஆளுமை சசிகலாவிற்கு கைவரப்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சசிகலா இருக்கும் இடம் தேடி வந்தது பொதுச் செயலாளர் பொறுப்பு. ஆனால் அப்போது கூட சசிகலா வாய் திறந்து பேசாமல் மௌனம் காத்து வருகிறார்.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் அவர்களால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர் என்றாலும் கூட அவர் பிளவு பட்ட அதிமுகவை ஒன்றுபடுத்தி தொண்டர்களின் ஆதரவோடு அசைக்க முடியாத பொதுச்செயலாளராகவும், அதிமுகவை ஆளும் கட்சியாக்கி 6 முறை முதல்வராகவும் இருந்தவர்.இன்று அதிமுக என்கிற கட்சியில் சசிகலாவை ஆதரிக்கும் அத்தனை பேருமே ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்கள், அவரது தலைமையின் கீழ் பயிற்சி பெற்றவர்கள். அவர்களுக்குத் தெரிந்த சின்னம்மாவை, அதிமுகவை வழி நடத்த பொதுச் செயலாளராக்கியிருக்கிறார்கள். ஆனால் அதிமுக நிர்வாகிகளுக்கு அப்பால் தொண்டர்கள் மன நிலை வேறு மாதிரி இருக்கிறது. அவர்கள் பார்த்த ’அம்மா’ ஜெயலலிதாவின் மரணத்தையே அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அந்த இடத்தில் வேறு எவரையும் வைத்துப் பார்க்கவும் முடியவில்லை. அதுதான் சசிகலா மீதான எதிர்ப்பாக கோபமாக ஆங்காங்கே வெடிக்கிறது.
நேற்று வானகரத்தில் கூட சில தொண்டர்கள் கூச்சலிட்டிருக்கிறார்கள். வேலூர் உள்ளிட்ட சில இடங்களில் சசிகலாவைக் கண்டித்து மறியல் நடந்திருக்கிறது. நிர்வாகிகளின் மன நிலையும் தொண்டர்களின் மன நிலையும் வேறு வேறாக இருக்கும் நிலையில் பிரமுகர்கள் அதிருபதியாளர்களை ஆஃப் செய்கிறார்கள். ஆனால் இது எத்தனை நாளைக்கு. ஆளும் கட்சியான அதிமுகவில் அனுகூலங்களை அனுபவிக்கும் பிரமுகர்களுக்குள்ளே சிறு பூசல் உருவாகி அது பூதாகரமாய் வெடிக்கும் சூழல் உருவாகும்போதுதான் பிளவு உருவாகும். ஆகவே தலைவர்களின் ஆதரவைப் பெற்ற சசிகலா அதிமுகவின் லட்சக்கணக்கானத் தொண்டர்களின் மனங்களை வெல்ல வேண்டும். அதுவரை அதிமுக என்னும் பெருங்கடலில் அவர் கடக்க வேண்டிய தூரம் பெருந்தூரம்தான்  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக