வெள்ளி, 16 டிசம்பர், 2016

போலி நாட்டு பற்றாளர்களின் கடைசி புகலிடம் சினிமா தியேட்டர்கள்


thetimestamil: அருண் நெடுஞ்செழியன் :"அன்னியமாக்கப்பட்ட நாட்டுப்பற்று ஆளும்வர்க்கத்தின் இறுதிப் புகலிடம்.. அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டுமென்றும்,மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாடுமுழுவதும் உள்ள திரையங்குகள் அமல்படுத்திவருகின்றன. பொழுதுபோக்கிற்காக திரையங்கிற்கு செல்கிற மக்களிடத்தில் நாட்டுப்பற்றை வலிந்து திணிப்பதை புறக்கணித்து எதிர்ப்பது என்ற எதிர்ப்பரசியலின் வெளிப்பாடாக கடந்த வாரம் ரெசிஸ்ட் தோழர்கள், சென்னை காசி திரையரங்கிற்கு சென்று தேசிய கீதம் இசைத்தபோது எழுந்து நிற்காமல் எதிர்ப்பை பதிவு செய்தனர்.அதன் தொடர்ச்சியாக சிறு கும்பல் ரெசிஸ்ட் தோழர்களிடம் மல்லுக்கு நின்றதும்,பின்னர் தோழர்கள் மீது தேசியச்சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தின்படி (1971) வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

வழக்கம்போல நடுத்தர வர்க்கப்பிரிவனர் இத்“தேசத் துரோக”செயல் மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.தேசிய கீதம் இசைக்கப்படுகிற 52 வினாடி கூட நிற்க முடியாதா என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புகின்றனர்.போலீஸ் நிலையத்திலும் இதுதான் மைய அறியுரையாக இருந்தன.நல்லது.நாம் ஏன் இதை எதிர்க்க வேண்டும்?சற்று நெருங்கிப் பார்ப்போம்.

1
நாட்டுப்பற்றும் மானுட மாண்பும்:
எனதருமை நடுத்தர வர்க்கப் பிரிவினரே,பிரச்சனை எழுந்து நிற்பதிலேயே இல்லை.தேசப்பற்று, நாட்டுப் பற்று என்பது,இந்நாட்டு மக்களை,மண்ணை நேசிக்கிற இயல்பான எண்ணத்தின்பாற்பட்டது.மாறாக தேசப் பற்று,நாட்டுப் பற்று என்ற பெயரில் மக்களை சுரண்டுவதற்கும்,வலிந்து செயற்கையாக வலுக்கட்டாயமாக திணிப்பதற்குமான அரசியலில் தான் கோளாறு உள்ளது.
அவ்வளவு ஏன்,ஜன கன மன என்ற இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதிய ரபிந்திரநாத் தாகூர் தேசியவாதம்,தேசப்பற்று குறித்து சொன்னதை மேற்கோள்காட்டுவதென்றால்”தேசப்பற்றானது மனிதர்களின் மீது வெற்றிக்களியாட்டம் செய்வதை நான் வாழ்கிற வரையிலும் அனுமதிக்க மாட்டேன்”என 105 ஆண்டுகளுக்கு முன்பாக தனது நண்பர் ஏ.சி போசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.இக்கருத்திற்காக தாகூரையே ஆர் எஸ் எஸ்-பாசக கும்பல் தேச விரோதி என முத்திரை குத்தினாலும் ஆச்சரியப் படுவத்திற்கில்லை!
மனிதகுலத்தின் மாண்புகள், அது கடந்த காலங்களிலிருந்து திரட்டிய நாகரிகத்தின் மீது பெரும் போர் தொடுத்த ஹிட்லரும் முசோலோனியும் நாட்டுப்பற்று என்ற பெயரில் தான் கொத்து கொத்தாக மனிதர்களை கொன்று குவித்தார்கள். தேசப்பற்றின் பெயராலேயே,மானுட வரலாற்றின் கருப்புப் பக்கங்களை தங்களது ரத்தம்தோய்ந்த மையால் இட்டு நிரப்பினார்கள்.நவீன கால மானுட குல வரலாற்றில்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது அரசியல் மேலாதிக்கத்தை தற்காத்துக் கொள்ளவும்,தங்களது அதிகாரத்தை காத்துக் கொள்வதற்கும்,பரவலாக்குவதற்குமான முதலாளித்துவ வர்க்கத்தின் கருத்தியல் கருவியாக தேசப்பற்றை மிகச்சரியாக “தவறான வழியில்” பயன்படுத்தி வருகின்றனர்.தங்களது மோசடிகளை மறைக்கிற இறுதிப் புகலிடமாக வெற்றிகரமாக பயன்படுத்துகிறார்கள்.
உதாரணமாக,காஷ்மீர்,மணிப்பூர் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டத்தை தேசப்பற்று என்ற பெயரில் தான் இந்த அரசு ஒடுக்குகிறது,சட்டீஸ்கர்,ஓடிஸா,ஜார்கண்ட் மாநிலங்களின் காடுகளை கார்ப்பரேட் நிறுவனகளுக்கு கையளிக்க தடையாக நிற்கிற மாவோயிச அரசியல் சக்திகளை தேசப்பற்று,நாட்டுக்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் தான் ஒடுக்குகிறது.பழங்குடிகளை கொன்று போடுகிறது.
நாடு என்றால் என்ன?பல மைல் சதுர பரப்பளவில் பல்லாயிரம் கிராமங்களிலும்,பலநூறு நகரங்களிலும் காடுகளிலும் வாழ்கின்ற பல கோடி உழைக்கும் வர்க்கத்தினரின் புகலிடம் தானே நாடு?இம்மக்கள் வாழ்வதற்கு வளங்களை வழங்குகிற மண்ணும் அணி நிழற் காடுகளும் மலைகளும் அருவிகளும் தானே நாடு?
இந்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுகிற,நகரங்களில் கால் வயிற்றிக்கும் அரை வயிற்றிற்கும் உதிரி பாட்டாளி வர்க்கத்தை அலைந்து திரிய வைக்கிற,இந்நாட்டின் வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கையளிக்கிற இந்த அரசிற்குத்தான் நாட்டுப் பற்றை பற்றி பேச அருகதை உண்டா?ஆளும்வர்க்கத்தின் வர்க்க நலனின் பாற்பட்ட பலகோடி உழைக்கும் மக்களிடம் இருந்து “அன்னியமாக்கப்பட்ட தேசப்பற்று”தான் எவ்வளவு மோசமான சுரண்டலுக்கும் ஏமாற்று பித்தலாட்டத்திற்கும் வித்திடுகிறது என சிந்திக்க வேண்டாமா?
2
எழுச்சிபெறும் வலது பாப்புலிசம்:
உலகளவில்,இனவாத அரசியல் கருத்தியலை அடித்தளமாகக் கொண்ட தேசியவாத முழக்கத்தை முன்னிறுத்துகிற பாசிசமாக “வலது பாப்புலிச அரசியலானது” வேகமாக எழுச்சி பெற்று வருகிறது.யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் ஜெர்மன் இனவாத அரசியல் எவ்வாறு பாசிசத்திற்கு வித்திட்டது என்ற படிப்பனையை வரலாறு வழங்குகிறது.மண்ணின் மைந்தர்களை இன ரீதியாக உசுப்பிவிடுகிற வகையிலான தேசியவாத பாப்புலிச அரசியல் இன்று நவ பாசிசமாக கருக்கொண்டு வருகிறது.
1930 களில் நாசிக்களின் கட்டுப்பாட்டில் ஜெர்மனி சென்றது போல தற்போது பிரான்சு உருவாகக்கூடும் என பிரான்சு நாட்டின் வலது பாப்புலிச கட்சியான லா பென்னின் தேசிய முன்னணிக் கட்சியின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டுவருகிறது.அமெரிக்காவின் அதிபர் தேர்தல் பிரச்சாரங்களில் புலம் பெயர் மெக்சிக்கோ நாட்டு மக்களுக்கு எதிரான,இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவாத அரசியலே அமெரிக்க தேசியவாதமாக முன்வைக்கப்பட்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
நவதாராளவாத சந்தைப் பொருளாதாரத்தின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான போராட்ட அலையானது கடந்த பத்து ஆண்டுகளின் உலகின் பல பகுதிகளில் சிறியதும் பெரியதுமாக சுழன்றடித்துவருகிறது.அதை தேசிய வாத வெறியூட்டல் கும்பலே வெற்றிகரமாக கைப்பற்றியும்வருகிறது.இது மானுடகுலத்திற்கு நல்லதல்ல!
3
இந்தியாவில் முதலாளியமயப்படுத்தப்பட்ட பாட்டாளி வர்க்கத்தினரும் தேசப் பற்றும்:
கடந்த கால் நூற்றாண்டு காலமாக இந்தியாவில் நடைமுறையில் உள்ள தாராளமய முதலாளித்துவ கட்டத்தில்,பெரு நகரை மையமிட்ட தொழிற்துறை முதலீடுகளும்,கணினி சேவைத் துறை முதலீடுகளும் அதிவேகமாக பெருக்கியது.படித்த இளைஞர்களுக்கு இவ்வாய்ப்புகள் சொல்லும்படியான வாழ்க்கைத் தரத்தை வழங்கின.குறிப்பாக கணினித்துறை போன்ற சேவைத் துறையிலும்,இதர பன்னாட்டு நிறுவனங்களிலும் பணி செய்கிற இந்த இடைத்தட்டு நடுத்தர வர்க்கத்தினர்,வீடு வசதி என்ற வளமான வாழ்க்கைத்தரத்தால் முதலாளியமயப்படுத்தப்பட்ட பாட்டாளி வர்க்கத்தினராக பெரும் எண்ணிக்கையில் சென்னை,மும்பை,பெங்களூர் போன்ற நகரங்களில் திரண்டுள்ளனர்.
நிலவுகிற தாராளமய முதலாளித்துவ கட்டத்தால் பயனடைந்த இந்த வர்க்கத்திற்கு,அதே தாராளமய முதலாளித்துவ கொள்கையால் தற்கொலை செய்துகொள்கிற விவசாயி வர்க்கத்தினர் குறித்தோ,நிரந்தர தொழிலாளர் துறையில் இருந்து ஒப்பந்த தொழிலுக்கு மாற்றம் செய்து தொழிலாளர்களின் நலச் சட்டத்தை பறிக்கிற நடவடிக்கைகள் குறித்து மேலோட்டமான அரசியல் பார்வைக்கும் கூட வருவதில்லை.
மாறாக ராணுவம்,போலீஸ்,இந்தியப் பெரு முதலாளிகளுக்குப் பின்,இந்த முதலாளியமயப்படுத்தப்பட்ட பாட்டாளி வர்க்கத்தினரே அன்னியமாக்கப்பட்ட தேசிய வாதத்தின் காவலர்களாக தங்களை வரித்துக்கொள்கின்றனர்.இது பெரும் ஆபத்தான் போக்கு.பாசிச பாஜக அரசை பெரும்பான்மையுடன் அமர வைதத்ததும் இந்த நடுத்தர இடைத்தட்டு வர்க்கம் தான்.
அரசியலின் வர்க்கப் பார்வை குறித்து அறிந்துகொள்கிற வகையில் மக்கள் முட்டாளாகவே இருப்பர்.ஆளும்வர்க்கத்தின் அன்னியமாக்கப்பட்ட தேசியவாத கோஷத்திற்கு சேவை செய்வர்.அவ்வகையில், இந்தியாவும் இந்துத்துவ பாப்புலிச அரசியலும் பிரிக்க முடியாத வகையில் இன்று இரண்டறக் கலந்துள்ளது.ஆகவே ஆளும்வர்க்கத்தின் போலி தேசிய வெறியூட்டலை முறியடிப்பதற்கு சமூகத்தின் அனைத்து ஜனநாயக ஆற்றல்களும் ஒன்றிணைந்து எதிர்ப்பரசியலை மேற்கொள்ளவேண்டும்.
 அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக