வெள்ளி, 16 டிசம்பர், 2016

திரைப்பட முன்னோடி, கோவை “வெரைட்டி ஹால் டாக்கீஸ்”ன் வரலாறு.. வின்சன்ட் சாமிகண்ணு என்ற ஒரு இளைஞன் ..

கோவை நகரிலுள பி-1 காவல்நிலையம் என்பதை வெரைட்டி ஹால் ரோடு காவல்நிலையம் என்றுதான் கூறுவார்கள். அந்த “வெரைட்டி ஹால்” என்பது என்னவென்று இப்போது, கோவையிலுள்ள பலருக்கும் தெரியாது. இந்திய திரைப்படங்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்ததுதான் இந்த “வெரைட்டி ஹால்” என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். 1896-ஆண்டில், இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட “இயேசுவின் வாழ்க்கை” Life of Jesus” என்ற வசனமில்லாத ஒரு சிறிய திரைப்படத்தை (பயாஸ்கோப் படம்) “டூபாண்டு” என்ற ஆங்கிலேயர் இந்தியாவுக்கு கொண்டு வந்தார். மும்பை, புனே, சென்னை போன்ற ஊர்களிலெல்லாம் அந்த படத்தை இந்திய கலா இரசிகர்களுக்கு போட்டுக்காட்டிவிட்டு கடைசியில் திருச்சிராப்பள்ளிக்கு வந்த அவர் சிங்காரத்தோப்பு பகுதியில் இருந்த ஒரு சத்திரத்தில் தங்கிக்கொண்டு அங்கிருந்த மக்களுக்கும் இந்த திரைப்படத்தை போட்டுக்காட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது, இப்படத்தை பார்க்க திருச்சி இரயில்வே தொழிலாளர்கள் ஏராளமானோர் வந்து சென்றனர். அதில், ஒருவரான 21-வயதே நிரம்பிய  சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர், அந்த வசனமில்லாத திரைப்படத்தை பார்த்து இரசித்ததோடு மட்டுமில்லாமல், தன்னுடைய ஊரிலும் அந்த படத்தை கொண்டுபோய் மக்களுக்கு போட்டுக்காட்டவேண்டும் என்ற ஆர்வத்தில், டூபாண்டு வைத்திருந்த அந்த திரைப்படத்தின் பிரதியை 2.250,-ரூபாய் விலை கொடுத்து வாங்கிக்கொண்டார்.
அதற்கு பிறகு, ”டூபாண்டு” அவர்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்த பல திரைப்படங்களையும் வாங்கி ஒவ்வொரு ஊராக சென்று பொதுமக்களுக்கு படம் போட்டு காண்பித்து கொண்டிருந்தார் சாமிக்கண்ணு வின்சென்ட். இவர் சிங்கப்பூர் ,மலேசியா, சிலோன், பெஷாவர், மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பிரிட்டிஷாரின் ஆட்சியிலிருந்த பகுதிகளுக்கும் பயணம் செய்து தான் வாங்கிய திரைப்படங்களை திரையிட்டு வந்துள்ளார்.
போகப்போக திரைப்படங்கள் கொஞ்சம் நீளமாக வரத்துவங்கியதும், பார்வையாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து படம் பார்ப்பதற்கு வசதியாகவும், பெரிய அளவிலான இயந்திரங்களின் உதவியுடன் திரைப்படம் ஓட்டுவதற்கு அரங்குகள் அமைக்கப்பட்டது.
அப்படி, 1914-ஆம் ஆண்டு, சென்னை மாகாணத்திலேயே முதன்முதலாக அமைக்கப்பட்ட திரையரங்கம் தான் இந்த “வெரைட்டிஹால் டாக்கீஸ்” என்ற சினிமா  தியேட்டர். இந்த அரங்கத்தை அமைப்பதற்காக சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்கள் தனது சொத்து முழுவதையும் விற்றார் என்கிறார்கள் தமிழ் திரைப்பட வாலாற்றை பற்றிய ஆய்வாளர்கள்
கோவையிலுள்ள அந்த “வெரைட்டிஹால் டாக்கீஸ்” இப்போது, எங்கு உள்ளது என்று கோவையை சார்ந்த பலரிடமும் கேட்டோம், பெரும்பாலோனோருக்கு அதற்கான பதில் தெரியவில்லை. கோவையின் வரலாற்றை ஆர்வமுடன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவரான, தி.மு.க வை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற, சட்டமேலவை, நடாளமன்ற  உறுப்பினராக இருந்த கோவை மு.இராமநாதன் கூறியதகவல்கள் ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது.
“சாமிக்கண்ணு வின்சென்ட் கட்டிய வெரைட்டிஹால் டாக்கீஸ் என்ற அந்த தியேட்டர்,  இன்றும் டிலைட் தியேட்டர் என்ற பெயரில் இயங்குகிறது. இப்போதும், அந்த டாக்கீஸ் இருந்த ரோட்டின் பெயர் வெரைட்டிஹால் ரோடு என்றுதான் அழைக்கப்படுகிறது. இந்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் கொங்கு மண்டலத்துக்கு ஒரு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
இவர் திரைப்படத்தை  மட்டும் கொண்டு வந்து திரையிடவில்லை, கோவைக்கு முதன்முதலில் பவர் ஜெனடேடரை கொண்டுவந்து மின்சாரத்தின் மூலம் விளக்குகளை எரித்து காட்டியவர். அவர் முதன்முதலில் ஜெனரேட்டர் வைத்து மின்சாரம் தயாரித்து விளக்கு எரிந்த இடம் தான் கென்னடி தியேட்டர் அருகே உள்ள “லைட் ஹவுஸ்” என்ற இடம்.
கோவைக்கு இவ்வளவு தொழிற்சாலைகள் வருவதற்கு முக்கியமான காரணம் அந்த ஜெரேட்டர்தான். 1919-இல் மின்சாரத்தில் இயங்கக்ககூடிய “அரிசி மற்றும் தானியங்களை அரைக்க ஒரு தானிய அரவை மில்லையும் கொண்டு வந்ததார்.
வின்சென்ட் சினிமா என்ற பெயரில் திருச்சி ரோட்டில் ஒரு டூரிங் டாகீஸ் கட்டி அதில், பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் ஆங்கில படம் பார்பதற்கான வசதிகளை உருவாக்கி கொடுத்துள்ளார். சாமிக்கண்ணு வின்சென்ட், இறுதியாக, கோவையில் அவர் 12-திரையரங்குகளை கட்டினார் என் தெரிகிறது. கோவையின் வளர்சிக்கு காரணமாக இருந்த சாமிக்கண்ணு வின்சென்ட் பெயரில் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து, கோட்டைமேடு வழியாக ,  இரயில் நிலையம் வரும் சாலைக்கு வின்சென்ட் ரோடு என்று கோவை மாநகராட்சி பெயர் சூட்டியுள்ளது.
அப்போதைய வெரைட்டி ஹால்டாக்கீஸ் வடக்கு பார்த்து இருந்தது, அதை, கட்டிய பிறகு, அதற்கு நேர் எதிரில், எடிசன் என்ற ஒரு தியேட்டரையும், தெற்கு பார்த்தபடி சாமிக்கண்ணு கட்டினார். பிறகு, பேலஸ், ரெயின்போ, என்று நான்கு தியேட்டர்களை வைத்து திரைப்படங்களை கொண்டுவந்து ஓட்டிக்கொண்டிருந்தார்.
அவரது காலத்துக்கு பிறகு, அவரது பேரன், பால் வின்சன்ட் என்பவர் ஆர்.எஸ்.புரத்தில் வின்சென்ட் லைட் ஹவுஸ் என்ற பெயரில் ஒரு தியேட்டரை கட்டினார். அந்த தியேட்டரும் நல்ல முறையில் இயங்கி வந்தது. அந்த தியேட்டரில் தான் அன்னபூர்ண குழுமத்தினர் முதன் முதலாக சிற்றுண்டி கடைய துவங்கி நடத்தினார்கள் என்ற தகவலும் உண்டு.
காலப்போக்கில் பெரிதாக வளர்ந்திருந்த அந்த குடும்பம் கோவையின் வளர்ச்சிக்கு பலவகையிலும் சேவை செய்து வந்தது. 1975-ஆம், ஆண்டு வாக்கில், ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கிய அந்த குடும்பத்தினர் பெரிய அளவில் கடன் பட்டுவிட்டார்கள். அந்த குடும்பத்தினரின் சொத்துகள் பலதும் ஏலத்துக்கு வந்தது. முடிந்த அளவுக்கு சொத்துகளை விற்று கடனை கட்டினார்கள். சிலநாட்களுக்கு பிறகு, நாங்களும் மிசாவில் சிறைக்கு சென்றுவிட்டோம், அதற்கு பிறகு, ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பொருளாதார மாற்றங்களுக்கு இடையில் எனக்கும் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் நேரடியான தொடர்பு ஏற்ப்படவில்லை. இப்போது, அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் யாருமே கோவையில் இருப்பதாக தெரிவில்லை.” என்று வேதனையோடு சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்களின் குடும்ப கதையை சொல்லி முடித்தார்.

கூடுதல் தகவல்கள்;-

கோவை நகரில் ஆங்கில படங்களை திரையிடுவதற்கு ரெயின்போ தியேட்டரை திறந்தார் “வெரைட்டிஹால் டாக்கீஸ்”. திலிப் குமாரின் பல ஹந்தி படங்களை திரையிட்டன அவை மிகப்பெரிய வெற்றி பெற்றன. 1933-ஆம் ஆண்டு Pioneer Film Company, மற்றும் Calcutta கம்பெனியுடன் இணைந்து சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்கள் “வள்ளி” என்ற தமிழ் படத்தை தயாரித்தார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மேலும் Calcutta நிறுவனம் தயாரித்த “வள்ளி திருமணம்” என்ற படத்தை அவரின் திரையரங்குளில் வெளியிட்டார் அந்த படம் வசூலில் வரலாற்று சாதனை பெற்றது.
அந்த வெற்றியை தொடர்ந்து சம்பூர்ண ஹரிசந்திரா என்ற படத்தை தயாரித்தார். 1935-ஆம் ஆண்டு “சுபத்ர பரிணயம்” என்ற படத்தை தன்னுடைய “வெரைட்டிஹால் டாக்கீஸ்” என்ற பெயரில் தயாரித்தார். அந்த படமும் சக்கை போடு போட்டது. அதற்கு பின்னர்  இராமகிருஷ்ணன், வேங்கடபதி நாய்டு, பீமா செட்டி, ஸ்ரீராமுலு மற்றும் ராசு ஆகியோர் இணைத்து சென்றல் ஸ்டுடியோவை அமைத்தனர். பின்னர், ஸ்ரீராமுலு நாயுடு பஷிராஜா ஸ்டுடியோவை நிறுவினார். அது தென்னிந்திய சினிமாவின் மகுடமாக விளங்கியது (தற்போது அது கல்யாண மண்டபமாக இயங்குகிறது). பஷிராஜா ஸ்டுடியோவில் இருந்து தயாரிக்கப்பட்ட “மலைக்கள்ளன்” மிகப் பெரிய வெற்றி பெற்றது. இப்படம் அந்த காலத்திலேயே ஆறு மொழியில் எடுக்கப்பட்டது.
சாமிக்கண்ணு அவர்களின் காலம்-(18 April 1883 to 22 April 1942.)
பெ. சிவசுப்ரமணியன்
nakkeeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக