செவ்வாய், 6 டிசம்பர், 2016

மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே ஜெயலலிதா உடல் நல்லடக்கம்

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்கு நடந்தது. பின்னர் செவ்வாய்க்கிழமை காலை ராஜாஜி அரங்குக்கு ஜெயலலிதாவின் உடல் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜெ.வின் உடலுக்கு அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பிரனாயி விஜயன், கேரள ஆளுநர் சதாசிவம், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், திமுக பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக எம்பி அன்புமணி, த.மா.கா. ஜி.கே.வாசன், தேமுதிக விஜயகாந்த், காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் உள்பட தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடல் இறுதி ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டது. அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பங்கேற்றனர்& அம்மா போயிட்டாங்க!” -ஊர் தோறும் சோகம்! (படங்கள்) 5-ஆம் தேதி நள்ளிரவுக்கு முன், வதந்தியா? உண்மையா? என்ற தவிப்பிலேயே பலரும் உறங்கிவிட்டார்கள். ‘ஜெ.வுக்கு எதுவும் ஆகியிருக்குமோ?’ என்னும் நினைப்பிலேயே, டி.வி. ரிமோட்டோடு படுக்கையில் புரண்டவர்கள், இரவு 12 மணிக்கு மேலே ‘ஆன்’ செய்து பார்த்தபோது, ‘ஆம்.. அது நடந்தே விட்டது’ என்பதை தெரிந்துகொண்டு கண் கலங்கினார்கள். ‘எது நடந்தாலும் காலையில் தெரிந்துவிடும்’ என்று வழக்கம் போல தூங்கியவர்கள் கண் விழித்தபோது, ஜெ. மறைவுச் செய்தி அவர்களை உலுக்கியது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலை நல்லடக்கம் செய்யவிருக்கின்ற இந்நாளில், மக்களின் உணர்வுகளை பதிவு செய்வதற்காக கிளம்பினோம்.
நாம் கிளிக்கிய காட்சிகளும் அதன் பின்னணியும் இதோ – அதிகாலையிலேயே, வீதிகளிலும் சாலையோரத்திலும் ஜெயலலிதா போட்டோவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபடி இருந்தனர். டூ விலரிலும் கூட, அதிமுக தொண்டர் ஒருவர் ஜெ. படத்தை ஒட்டி, அதற்கு மாலை அணிவித்திருந்தார். “அம்மா போயிட்டாங்களே!” என்று புலம்பினார். பள்ளிக்கூடம் ஒன்றில், தமிழக அரசு அறிவித்துவிட்ட நிலையிலும், பள்ளி வரும் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், 3 நாட்கள் விடுமுறை என்பதை கரும்பலகையில் எழுதி வைத்திருந்தனர். ஏனோ அந்தப் பள்ளி விடுமுறைக்கான காரணத்தை அதில் சொல்லவில்லை. பேருந்து நிலையம், முக்கிய வீதிகள் என ஊரே வெறிச்சோடிக் கிடந்தது. பெட்ரோல் பங்க், தியேட்டர்களெல்லாம் இயங்கவில்லை. கோவில்களில் பக்தர்கள் யாரும் தென்படவில்லை.
பூ வாங்கிட பெண்கள் யாரும் ஆர்வம் காட்டாததால், விற்பனையாகாத கவலையில் கன்னத்தில் கை வைத்தபடி இருந்தார் ஒரு பூக்காரப் பெண். ஒரு இடத்தில் டீ கடை திறந்திருந்தது. அங்கு ஓரளவுக்கு கூட்டம். கடையை மூடிவிட்டு, நாளிதழ்களை வெளியில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார் ஒரு கடைக்காரர். செய்தி படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வாங்கிச் சென்றபடி இருந்தனர். ரயில்கள் ஓடியது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. பயணத்துக்காக காத்திருந்தார்கள் சிலர். இந்த நாளிலும் அந்த ஏ.டி.எம். திறந்திருந்தது அதிசயம்தான். அங்கு பணம் எடுப்பதற்கு நீண்ட கியூவில் நின்றார்கள் மக்கள். அவர்களின் முகத்தில் கவலை இழையோடியது. விடுமுறையால், கடையடைப்பால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை துளியும் பொருட்படுத்தாமல், வீட்டை விட்டு வெளியே வராமல், தொலைக்காட்சி பெட்டிகளுக்கு முன் அமர்ந்து, ஜெ. இறுதி மரியாதை காட்சிகளை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனேகம் பேர். அமரராகிவிட்ட ஜெயலலிதாவுக்கு, ஏதோ ஒரு விதத்தில், தமிழக மக்களில் பலரும் இறுதி மரியாதை செலுத்திய வண்ணம் இருக்கின்றனர். -சி.என்.இராமகிருஷ்ணன்   நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக