செவ்வாய், 6 டிசம்பர், 2016

அதிமுகவின் வெள்ளந்தியான தொண்டர்களை ஏமாற்ற வேண்டாம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக, அவரோடு கூடவே இருந்து பணிவிடைகள் செய்து வாழ்ந்து வந்த பெண்ணாக சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கும், சடங்குகள் செய்யவும், எல்லாவிதமான உரிமைகளும் இருக்கிறது, செல்லுமிடங்களுக்கு எல்லாம் (சிறை உட்பட) இணைபிரியாது சென்று வந்தவர். ஆக, ஜெயலலிதாவின் குருதி சார் உறவுகளைவிட சசிகலாவுக்கு இந்த நேரத்தில் (நல்லடக்க காலம் வரை) அதிக உரிமைகளும், அதிகாரமும் கொடுக்கப்படலாம்.
நிற்க, ஜெயலலிதாவின் நல்லடக்கம் முடிவு பெறுவதோடு சசிகலாவின் பங்களிப்பு நிறைவு பெறுகிறது, ஒரு உற்ற தோழியாக அவருக்கான பங்களிப்பும், அதிகாரமும் அவ்வளவுதான்.எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா என்கிற இருபெரும் தலைவர்களால் கட்டமைக்கப்பட்ட இந்தக் கட்சிக்கு கோட்பாட்டு உரமிட்டு வளர்க்க அநேகமாக வேறு யாரும் இல்லாத ஒரு சூழல் தான் நிலவியது, கடந்த 20 ஆண்டுகளில் வெற்றிகளுக்கும், தோல்விகளுக்கும், ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றுக்கும் தனி ஒரு மனிதராக ஜெயலலிதாவே பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவுக்குக் கூடை தூக்கிச் சென்றதாலேயே சசிகலாவோ அவர்களின் குடும்பத்தாரோ அரசியல் அதிகாரத்தைக் குறுக்கு வழியில் அடைய முற்படுவது, ஜெயலலிதாவின் அரசியல் உழைப்புக்குச் செய்கிற துரோகம், சசிகலாவோ, அவரது உற்றார் உறவினர்களோ அதிமுகவின் அதிகார மையமாக உருவெடுக்க வேண்டுமென்றால், அடிப்படையில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற உறுப்பினர்களாகி, கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற்றுப் பின்பு பொதுக்குழு செயற்குழு என்று பயணித்தே வர இயலும், வர வேண்டும்.
அ.தி.மு.க வின் எளிய வெள்ளந்தியான உறுப்பினர்கள் “எம்.ஜி.ஆர்” என்கிற ஒரு மக்கள் தலைவருக்குப் பிறகு “அம்மா” என்கிற ஒற்றைச் சொல்லையே நம்பி வாக்களித்தார்கள், வேறு யாருடைய நிழலும் அங்கே படிந்த வரலாறே இல்லை. இடைக்கால அல்லது தற்காலிக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிற மாண்புமிகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முதலில் செய்யவேண்டிய மிகப்பெரிய பணி கடந்த மூன்று ஆண்டு காலமாக முடங்கிக் கிடந்த அரசு எந்திரத்தை முடுக்கி தொய்வடைந்து போயிருக்கிற நம்பிக்கையை வளர்ப்பதும், தேவையற்ற அதிகார மையங்கள் உருவாகாமல் தடுப்பதுமேயாகும்.
“திராவிட அரசியல் இயக்க வரலாற்றில் வெற்றிடம் உருவாகி விட்டது, இனி தேசியக் கட்சிகள் பங்காற்ற வேண்டிய நேரம்” என்றெல்லாம் குறி சொல்லியபடி நடுச்சாம உடுக்கை அடிக்கும் காவிக் கூட்டத்தின் கனவுகள் ஜெயலலிதாவின் அடக்கம் செய்யப்பட்ட உடல் ஈரம் காய்வதற்கு முன்பாக உயிர்த்து எழுந்து வருவதை நம்மால் உணர முடிகிறது.
ஜெயாவின் மரணம் திராவிட இயக்கத்தின் வெற்றிடம் என்று மணல் கயிறு திரிக்கும் ஒரு பார்ப்பனீய லாபி இனி வரும் காலங்களில் தீவிரமாக கூடுதல் நேரப் பணியாற்றும், அவர்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும், வலிமையான எதிர்க்கட்சியாக இங்கே இன்னொரு திராவிடக் கட்சியை அதற்காகவே மக்கள் அமர வைத்திருக்கிறார்கள், தேவைப்பட்டால் அ.தி.மு.க வின் மக்களாட்சி வேர்களையும், திராவிடக் கோட்பாட்டு மாண்புகளையும் மீட்டெடுத்து மதம் மற்றும் பிரிவினைவாதப் பார்ப்பனீய லாபியை இங்கிருந்து விரட்ட திமுக எப்போதும் துணை நிற்கும்.
இன்னும் 6 மாதங்களுக்கான தமிழக அரசியல் மிகக் கடுமையான அழுத்தங்களையும், மாற்றங்களையும் கொண்டதாகவே இருக்கும், மாண்புமிகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பின்னின்று ஜெயலலிதாவின் அரசியல் கனவுகளை மண்மூடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு அதிமுகவின் தொண்டனுக்கும் இருக்கிறது, அதேபோலக் காவி நரிகளின் குறுக்கு வழி அரசியல் அதிகாரப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வரவும், மதவாத, சாதியவாத பாரதீய ஜனதாவை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கவும் எதிர்க்கட்சியாகவும், திராவிட இயக்க அரசியலின் அடுத்த பரிணாமமாகவும் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் கடுமையாகப் பணியாற்ற வேண்டிய காலமும் இதுவே.
இறுதி ஊர்வலத்தோடு உங்கள் அரசியல் பங்களிப்பு முடிந்து விட்டது திருமதி. சசிகலா நடராஜன் அவர்களே, இனி நீங்கள் நன்கு ஓய்வெடுக்கலாம்.
அறிவழகன் கைவல்யம், பத்தியாளர்; திராவிட அரசியல் பற்றாளர். thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக