வியாழன், 8 டிசம்பர், 2016

ஜெ’ இல்லம் நினைவிடம் ஆக்க வேண்டும்: சசிகலா புஷ்பா!

கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தைத் தழுவ, அக்கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இதற்கு துணிச்சலாக பதில் கூறியிருக்கிறார் சசிகலா புஷ்பா. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“ஜெயலலிதாவின் மறைவு எனக்கு அரசியல்ரீதியாக பேரிழப்பாகும். என்னை அரசியலில் உருவாக்கிவிட்ட ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றபோது போலீஸ் நடத்திய விதம் வேதனையளித்தது. ஒரு எம்.பி. என்றும் பாராமல் என்னை போலீஸார் கீழே பிடித்து தள்ளினர். அத்தனை தடைகளையும் மீறி என் தாயை தரிசித்துவிட்டு வந்தேன்.
சிந்திக்க வேண்டும்

ஜெயலலிதாவின் சிகிச்சை முறை குறித்தும் அவரோடு இருப்பவர்கள் குறித்தும் நான் ஆரம்பம் முதலே சந்தேகம் எழுப்பி வந்தேன். நாடாளுமன்றத்தில் "Save Our Amma" என்ற பதாகையை காண்பித்தேன். இருப்பினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணியளவில், ஜெயலலிதா காலமானதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அதற்கு முன்பாகவே அதிமுக எம்.எல்.ஏக்கள் கூடி, புதிய முதல்வரை தேர்ந்தெடுத்தனர். ஜெயலலிதா உயிர் பிரிவதற்கு முன்பாக முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏன்? தனது கணவனை பழிவாங்கி விட்டார் என்பதற்காக ஜெயலலிதாவை சசிகலா பாடாய் படுத்திவிட்டார். ஜெயலலிதாவை ஏன் இழந்தோம் என்பது குறித்து அதிமுக தொண்டர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மேலும் ஜெயலலிதா உடல்நலம் ஏன் திடீரென்று குன்றியது என்பதையும் யோசிக்க வேண்டும். சசிகலா கும்பலின் ஆட்டத்தால்தான் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அடுத்த பொதுச்செயலாளர்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அவரது நினைவிடமாக்க வேண்டும். அதை அரசாங்க சொத்தாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை ஒரு முன் மாதிரியாக இருக்கும். அதிமுக-வின் பொதுச்செயலாளராக ஆகிவிடலாம் என்று சசிகலா கனவு காணக்கூடாது. சசிகலாவை ஒருநாளும் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே அனுபவமும் அரசியல் சாதுர்யமும் நிறைந்த ஒருவரே அந்தப் பதவிக்கு வர வேண்டும். பி.ஹெச். பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் பொதுச்செயலாளர் பொறுப்புக்குத் தகுதியானவர்கள். அதே போல், நத்தம் விஸ்வநாதன், மதுசூதனன், கே.வி.முனுசாமி, கண்ணப்பன் ஆகியோர் நல்ல அனுபவம் பெற்றவர்கள். இவர்களில் ஒருவரை பொதுச்செயலாளராக அறிவிக்கலாம்” என்று கூறியிருக்கிறார் சசிகலா புஷ்பா.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக