புதன், 14 டிசம்பர், 2016

கரை திரும்பாத மீனவர்கள் : காசிமேடு நேரடி ரிப்போர்ட்

வினவு.காம் :நாங்க உயிருடன் வருவோம் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. அவ்வளவுதான் செத்துவிடுவொம் என்று முடிவு செய்துவிட்டோம். படகில் அனைவரும் அழ ஆரம்பித்துவிட்டோம். கரையில் எல்லாரையும் பார்த்தபிறகு தான் உயிரே வந்தது.
ர்தா புயலால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் மீனவர்கள். புயலின் பாதிப்புகளை அறிந்து வர வினவு செய்தியாளர் குழுவினர் காசிமேடு மீன் பிடி துறைமுகத்தை அடைந்திருந்தோம். கடந்த 2015 டிசம்பர் மாதம் சென்னை மழை வெள்ளத்தின் போது மக்களை காப்பாற்ற ஓடோடி வந்த மீனவர்களும், அவர்களின் சேதமான படகுகளும் இன்று கேட்பாரற்று கிடக்கின்றார்கள்.
காசிமேடு பகுதியில் தினசரி கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் ஃபைபர் எனப்படும் நாட்டுப் படகுகளும், கடலில் பல நாட்கள் தங்கி மீன்பிடிக்கும் லாஞ்ச் எனப்படும் விசைப்படகுகளும் மீனவர்களால் பயன்படுத்தப்படுகின்றது. புயல் சின்னம் அறிவிக்கப்பட்ட பிறகு தினசரி மீன்பிடிப்பவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. ஆனால் விசைப்படகில் நாட்கணக்கில் தங்கி மீன்பிடிப்பவர்கள் உடனடியாக திரும்ப வாய்ப்பில்லை. வயர்லெஸ் மூலம் தகவல் தரப்பட்டுள்ளது. ஆயினும் பல மைல் தொலைவில் இருப்பபவர்கள் திரும்ப வருவதற்குள் புயல் அவர்களை அடைந்துவிட்டது. கடலுக்கு சென்ற பல விசைப்படகுகளில் நிலை என்னவென்பது இப்போது வரை தெரியவில்லை.
இன்னும் சொல்லப்போனால் எத்தனை விசைப்படகுகள் இன்னும் திரும்பவில்லை என்ற சரியான எண்ணிக்கை கூட அவர்களிடம் இல்லை.
IMG_20161213_124514
புயலில் சிக்கி மீண்டும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்குள் நுழையும் ஒரு விசைப்படகு.
படகுகளில் சேதம் குறித்து மீனவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு விசைப்படகு கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. அதின் முனைப்பகுதியில் ஒருவர் கையை வானைத்தை நோக்கி குவித்தும், கைகளை விரித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் நின்றுகொண்டிருந்தார். அருகில் இருந்த மீனவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து இங்கிருந்து ஆரவாரத்துடன் எதிர் கொண்டார்கள்.
“புயல்ல சிக்கி இப்பதான் கரைக்கு வராங்க” புரியாமல் பார்த்த நம்மிடம் அருகில் இருந்த மீனவர் விளக்கமளித்தார். அப்பபடகு கரைக்கு வந்ததும் படகில் ஏறிக்கொண்டோம்.
படகில் ஓட்டுநர் உள்ளிட்டு மொத்தம் 11 தொழிலாளிகள் இருந்தார்கள். ஓட்டுநர் தவிர மற்ற கூலித்தொழிலாளிகள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். அனைவரின் முகத்திலும் தளர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒருங்கே குடிகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
படகின் முன் கைகளை குவித்து கத்தியவாறே வந்த தொழிலாளியின் பெயர் ரமேஷ். அவரிடம் பேசினோம்.
“நீங்க தான் முன்னாடி கத்திட்டே வந்தீங்க”
varda-cyclone-kasimedu-report-1 (3)
விசைப்படகு ஓட்டுநர் லோகிதாஸ் மற்றும் தொழிலாளர்கள்
“ ஆமா சார். நாங்க உயிருடன் வருவோம் என்ற நம்பிக்கையே இல்லை. அவ்வளவுதான் செத்துருவொம் என்று முடிவு செய்துவிட்டோம். படகில் அனைவரும் அழ ஆரம்பித்துவிட்டோம். கரையில் எல்லாரையும் பார்த்த பிறகு தான் உயிரே வந்தது. நீங்க யாரு என்னனு எனக்கு தெரியாது ஆனா கரையில் உங்களையெல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது. நாங்க தப்பிச்சி உயிரோடு வந்ததற்கு காரணம் கடவுளும் எங்க டிரைவரும் தான் காரணம். டிரைவர் எங்களுக்கு தெய்வம் சார்” என்று வானத்தை நோக்கி கைகளை குவித்து நன்றி தெரிவிக்கிறார்.
படகில் டிரைவர் லோகிதாஸிடம் பேசினோம்.
“நாங்க ஒரு 20 படகுகங்க ஒன்னா தான் தொழில் பண்ணிட்டு இருந்தோம். வலை எல்லாம் கட்டிவிட்டோம். . புயல் வருதுனு எல்லாத்தையும் கெளப்பினு வந்தோம். ”
“தகவல் கிடைத்த உடனே கிளம்பிவிட்டீர்களா?”
“வலை ஒரு முறை போட்டா அதை எடுக்க 6 மணி நேரம் ஆகும். அங்கிருந்து வர 15 மணி நேரம் ஆகும். நாங்க வலையை எடுத்துட்டு கெளம்பிட்டோம். வயர்லெஸ்சில் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தோம். புயல்காற்று அதிகமாக அதிகமாக ஒவ்வொரு படகா பிரிய ஆரம்பித்தோம். சென்னை ஹார்பர் அருகில் ஒரு 8 போட்டுகள் உள்ளே நுழைந்துவிட்டார்கள். நாங்க ஒரு 3 படகுகளால் உள்ளே நுழைய முடியவில்லை. 6 பாயிண்ட் வரை வந்துவிட்டோம். உள்ள பூர முடியல. அப்படியே ரிவர்ஸ்ல போகுது. கண்ட்ரோல் கிடைக்கவில்லை. அவ்வளவு காத்து. நாங்க செத்துட்டோம்னு தான் நினைச்சோம். கரையிலிருந்து இந்த பக்கம் வராதீங்க பாண்டிச்சேரி மரக்காணம் பக்கம் போயிருங்க என்று தகவல் தருகிறார்கள். எங்களிடம் இருந்த ஜி.பி.எஸ் புயல் காற்றில் அடிச்சி வேலை செய்யல. அதனால் எங்களுக்கு எந்த பக்கம் போவது என்று தெரியவில்லை” படகில் சேதமான ஜி.பி.எஸ் கருவியை காட்டுகிறார்கள்.
IMG_20161213_131441
செயலிழந்த ஜி.பி.எஸ் கருவி (இடது). தொழிலாளிகள் பயன்படுத்திய காம்பஸ்(வலது)
“எந்த பக்கம் போனாலும் தண்ணி மொண்டுக்குது. ரெண்டு பக்கமும் தண்ணி மொண்டுக்குது. ஹாங்கர் (நங்கூரம்) போட்டோம். அதுவும் தண்ணியோட ஆடுது. அதனால அதை எடுத்துட்டு படகை அப்படியே அலைய விட்டுடோம். அலையவிட்ட ஆபத்து கம்மியா இருக்குது. அலை எந்த பக்கமிருந்து வருகிறது என்றும் தெரியவில்லை. ஓட்டவும் முடியவில்லை.ஆண்டவன் தான் எங்களை காப்பாற்றினான். “ என்கிறார் லோகிதாஸ்.
எதுவும் பயனளிக்காத நிலையில் படகை காற்றின் போக்கிற்கே விட்டுவிட்டார்கள். காற்றின் சுழற்சியில் படகு அடித்து செல்லப்பட்டிருக்கிறது. அப்போது எந்த பகுதில் இருக்கிறோம் என்பதைக்கூட ஒரு அனுபவத்தின் அடிப்படையில் தான் கணித்திருக்கிறார்கள்.
“எங்களை சுற்றி எதுவும் தெரியவில்லை. கண்ணாடியில் அலை அடித்தது. வேறு எதையும் பார்க்கமுடியவில்லை. எனக்கு உள்ளுக்குள் பயம். ஆனாலும் இவங்களிடம் ஒன்னும் ஆகாது. நம்ம படகு வலுவானது. அப்படி இப்படி என நம்பிக்கை சொல்லிட்டு இருந்தேன். ஆனா உள்ளுக்குள்ள அவ்வளவு தான் முடிஞ்சது தான் நினைச்சிட்டு இருந்தேன்” என்கிறார் லோகிதாஸ்.
சேதமடைந்த வலையை பிரிக்க முயற்சித்துக்கொண்டிருந்த தொழிலாளிகளும் நம்முடன் சேர்ந்து கொண்டார்கள்
“சாப்பாட்டுக்கு என்ன பண்ணீங்க”
“ரெண்டு நாள் சாப்பிடல. படகில் (நடுவில் இருக்கும் கண்ணாடி அறைக்கு) வெளியில் இருந்த உணவுப் பொருட்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கிறது. யூரின் போகக்கூட வெளிய போக முடியல. வெளியேலாம் யாரும் நிக்க முடியாது. இதுக்குள்ள தான் (நடுவில் இருக்கும் கண்ணாடி அறை) 11 பேரும் இருந்தோம்” என்று கண்ணாடி கூண்டை காட்டுகிறார்கள். “அவ்வளவு காத்து. இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு அதை ஒருவர் பிடித்திருக்க படகில் ஓரத்தில் தான் மலம் போனோம். மழை தண்ணியிலயே கழுவிக் கொண்டோம்.”
தாங்கள் பத்திரமாக திரும்பிவிட்டோம் என்பதை ஆந்திராவிலிருக்கும் குடும்பத்தினருக்கு தெரிவிக்ககூட முடியாமல் தவிக்கிறார்கள் தொழிலாளிகள்.
varda-cyclone-kasimedu-report-1 (4)
நாங்க உயிருடன் வருவோம் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. கரையில் எல்லாரையும் பார்த்தப்பிறகு தான் உயிரே வந்தது. – தொழிலாளி ரமேஷ்
“செல்போன் சிக்னல் எதுவும் கெடக்கல. வீட்டிலிருந்து கம்பெனிக்கு போன் பண்னிருப்பாங்க. தகவல் சொல்லனும்” என்று வெறுமையாக சொல்கிறார்கள்.
“உங்க ஊரிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் எல்லாம் திரும்பிவிட்டீர்களா”?
“தெரியல. ஊருக்கு போனா தான் தெரியும்.”
“இப்படி உயிரை பணயம் வெச்சி வேலை செய்யூறீங்களா? உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?”
“ அது மீன் கெடைக்குறதை பொறுத்து. சில சமயம் 5000 ரூபா வரும், 8000 ரூபா வரும். அது நிக்காது. திரும்பியும் வரனும் திரும்பியும் கஷ்டப்படனும்”. மாதத்திற்கு பத்தாயிரம் கிடைத்தால் பெரிது.
“இன்னிக்கு மீன் இல்லாம தான் திரும்பியிருக்கீங்க. அப்போ சம்பளம் கிடையாதா?”
“கிடையாது. மீன் இருந்தாதான்.” என்கிறார்கள் தொழிலாளிகள். இப்படி உயிரை பணயம் வைத்து அவர்கள் வந்த படகின் உரிமையாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.பி சாமி என்கிறார்கள் அப்பகுதி தொழிலாளிகள்.
“உங்களுடன் வந்த மற்ற படகுகள் திரும்பி விட்டார்களா?”
“காணாமல் போன நவீனா என்ற படகை தேடி மீனவர்களின் ஒரு படகு சென்றிருக்கிறது. இன்னும் தகவல் வரவில்லை. எனக்கு தெரிந்தே 7 படகுகள் இன்னும் வரவில்லை. இன்னும் எவ்வள்வு இருக்கும் என்று தெரியவில்லை. அமைச்சர் குப்பனுக்குரிய படகிலிருந்து இன்னும் தகவல் வரவில்லை” என்கிறார்கள். இப்படகு அமைச்சர் குப்பனுடையாதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
புயலில் சிக்கியபோது ஒரு படகை ஓட்டமுடியவில்லை என்றார்கள். “அதை காப்பாற்ற சென்ற மற்றொரு படகினாலும் அதை இழுக்க முடியவில்லை. பிறகு அதை அப்படியே விட்டுவிட்டொம். அந்த படகு என்ன ஆனது என்று இன்னும் தெரியவில்லை. இன்னும் லைன் கிடைக்கவில்லை.” என்கிறார் லோகிதாஸ்.
“புயல் மீட்பு நடவடிக்கைக்காக கடற்படையிலிருந்து 4 கப்பல் நிறுத்தப்பட்டிருப்பதாக சொல்கிறார்களே அவர்களை தொடர்புகொண்டீர்காளா?.”
“எங்க கம்பெனி படகிலிருந்து தொடர்பு கொண்டோம். நாங்க பெரிய கப்பல். சின்ன கடற்படை படகுகளை அனுப்புகிறோம் என்றார்கள். அதன் பிறகு எங்களுக்கு தொலை தொடர்பு அற்று போனது. யாரும் வரவில்லை.”
ஆண்டுக்கு ஒரு முறை கடலோர சாகசங்கள் என்ற பெயரில் வித்தை காட்டுவதை தவிர மீனவர்களை காப்பாற்ற ஆபத்து நேரத்தில் கடலோர பாதுகாப்பு படை வருவதில்லை. அதிகார வர்க்கத்தின் கேளிக்கை சுற்றுலாவுக்கு பயன்படுவதைத் தவிர கடலோர காவற்படைக்கு வேறு வேலையில்லை. மீனவர்களின் கடல் வாழ்க்கை, மீன்பிடி அனுபவம், கால மாற்றங்கள், என்று எதுவுமே கடலோர காவற்படைக்கு தெரியாது.
நாம் மீனவர்களிடம் பேசியதிலிருந்து அரசு தங்களை காப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூட அவர்களுக்கு இல்லை. தங்கள் அனுபவத்திலிருந்து நமது பிரச்சனைக்கு அரசு வராது தாங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறார்கள். நிவாரணம் என்ற அம்சத்தை தவிர அரசிடமிருந்து வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
மீனவர் உயிரழப்பு?
varda-cyclone-kasimedu-report-1 (17)
காணாமல் போன தொழிலாளி மணி
புயலின் போது ஒரு படகு விபத்துகுள்ளாகி மணி(50) என்ற தொழிலாளி உயிரிழந்திருக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆந்திரம் மாநிலம் கிருஷ்ணாம்பட்டினம் பகுதியில் மீன்பிடித்து திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள் மீனவர்கள் சிலர். காற்றின் வேகத்தில் கரைக்கருகே படகு விபத்துக்குள்ளாகும் சமயத்தில் தொழிலாளிகள் 5 பேரும் கடலில் குதித்திருக்கிறார்கள்.
இதில் 4 பேர் மட்டுமே கரைக்கு திரும்பியிருக்கிறார்கள். ஒருவர் திரும்பவில்லை. 24 மணி நேரத்திற்கு பிறகும் அவர் திரும்பாதாததால் அவர் உயிரிழந்திருக்ககூடும். அவரைத்தேடி மீனவர்கள் படகுகளில் சென்றிருக்கிறார்கள். நாம் சென்ற போது அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை என்ற தகவல் அப்பகுதியில் பரவியிருந்தது.
காணமல் போன மீனவரின் பெயர் மணி. இவர் காசிமேடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர். நாம் அங்கு செல்லும் போது மணியின் வீட்டில் சோகம் குடிகொண்டிருந்தது. ஒரு சிறிய அறையில் பெண்கள் அழுதுகொண்டிருந்தார்கள்.அப்பகுதி மீனவர்களிடம் பேசியதிலிருந்து மணி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்கள்.
மணியின் மூத்த மகன் மகேஷ்குமார் நம்மிடம் பேசினார்.
“போன வாரம் ஞாயிற்றுக்கிழமை 4-ம் தேதி அப்பா கிளம்பினார். தங்கி மீன் பிடித்து திரும்பி வரும் வழியில் நேற்று (12-12-2016) எண்ணூர் அருகே காற்று அதிகமாகி விபத்துக்குள்ளகியிருக்கிறது. அப்பாவும் அவருடன் வந்தவர்களும் குதித்ததில் அப்பா மட்டும் திரும்பவில்லையாம். அப்பாவுடன் சென்றவர்கள் திரும்பிவந்து கூறிய பிறகுதான் எங்களுக்கு தெரியும். அப்பாவை தேடி மீனவர்கள் தான் போயிருக்கிறார்கள். வேறு இதுவரை யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை.
varda-cyclone-kasimedu-report-1 (15)
தொழிலாளி மணியின் குடும்பத்தினர்
மகேஷ்குமாருக்கு சில மாதங்களுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டு காலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால அவரது தந்தை வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நாம் அப்பகுதியிலிருந்து கிளம்பும்வரை பத்திரிகை மற்றும் அரசு தரப்பில் யாரும் இப்பகுதிக்கு வரவில்லை. மீனவர்களுக்கு என்னவாயிற்று என்பது குறித்து எவ்வித அக்கறையும் அரசுக்கு இல்லை. சென்னை நகரின் மையப்பகுதியில் வீழ்ந்துகிடக்கும் மரங்களுக்கு மத்தியில் நின்று கொண்டு பத்திரிகைகளில் நேரடி வர்ணனை வழங்குபவர்கள் எவரும் இங்கு வரவில்லை.
கடந்த மழை வெள்ளத்தின்போது இவர்கள் தான் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி முதன்முதலாக ஓடோடி வந்து மக்களை காப்பாற்றியவர்கள்.
படகுகள் சேதம்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சிறிய ரக ஃபைபர் படகுகள் முதல் விசைப்படகுகள் வரை பலத்த தேசத்திற்குள்ளாகியிருக்கிறன. பல படகுகள் தலைக்குப்புற மூழ்கி கிடக்கின்றது. அப்படி மூழ்கியிருக்கும் படகுகளுக்கு அடியிலும் பல படகுகள் மூழ்கியிருப்பதை பார்க்க முடிகிறது. காற்றின் வேகத்தில் ஒன்றன் மீது மற்றொன்று மோதி பல ஃபைபர் படகுகள் சேதமாகியிருக்கின்றன.
கடலில் குதித்து மூழ்கியிருக்கும் படகின் இன்ஜின்களை கழற்றி வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள் தொழிலாளிகள். கடலில் மூழ்கி வெளியேறிய தொழிலாளி இளவரசனிடம் பேசினோம்.
“உள்ளே ரொம்ப படகுகள் இருக்கு. படகுமட்டுமில்ல வலை, கச்சானு ரொம்ப இருக்கு. உள்ளே மூழ்கும்போது வலையில கால் மாட்டுச்சினா அவ்வளவுதான். வெளியே எதாவது எஸ்கார்டு இருந்தா பயமில்லாம உள்ளே போகலாம். இப்போ இன்ஜினை மட்டும் கழட்டி வெளிய் எடுத்திருக்கிறோம். இதை சரி செய்ய 10,000 முதல் 15,000 வரை ஆகும் என்றார். சுனாமியப்ப படகை அப்படியே தூக்கிட்டு போய் வேர இடத்துல வெச்சிருச்சி. இப்போ காத்து சுத்தி அடிச்சதுல ஒன்னொன்னு மோதி உடைஞ்சிருக்குது.
மெக்கானிக் ஒருவர் கரையில் இவ்வின்ஜினை சரி செய்துகொண்டிருந்தார்.
“ சார் பாருங்க எல்லாம் உப்பா இருக்கு. இதை சரி செய்யுறது கஷ்டம். உப்பு படிஞ்சிருக்குறதால இப்போ டீசல் ஊத்திருக்கோம். பாப்போம்.”
மூழ்கியிருக்கும் படகுகளை கிரேன் வைத்து தூக்கிக்கொண்டிருந்தார்கள் சில மீனவர்கள். கடலுக்கு அடியில் ஒன்றன் மீது மற்றொன்று சிக்குண்டு கிடப்பதால் எளிதில் தூக்கவும் முடியவில்லை.
இப்படி ஒன்று இரண்டல்ல, பல படகுகள் சேசமாதியுள்ளன.
நாம் சந்தித்த விசைப்படகு உரிமையாளர் ஒருவர் தனது படகை சரி செய்ய எப்படியும் 1 லட்சத்திற்கும் மேல் ஆகும் என்று தெரிவித்தார்.
தனது படகில் ஏற்பட்டிருக்கும் விரிசலை காண்பித்தவர், கரையோரத்தில வைத்து சரி செய்தால் ஒரு லட்சத்திற்கும் மேல் ஆகும் என்றும் , மாறாக கரைக்கு கொண்டு செல்ல வேண்டு மென்றால் ஏற்றி இறக்க மட்டும் ரூ.30,000 மேல் செலவு ஆகும் என்று தெரிவித்தார்.
ஓரிரு விசைப்படகு மட்டும் வைத்து தொழில் நடத்தும் சிறு முதலாளிகளுக்கு இவ்விழப்பு என்பது மிக அதிகமாகும்.மேலும் நாம் சென்ற இடங்த்தில் ஐஸ் உடைக்கும் இயந்திரம் ஒன்றும் புயலினால் பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.
இப்பகுதியில் பல மீனவ சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்றான சென்னை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர் சங்க செயலாளர் விஜேஷ்-டம் பேசியதிலிருந்து “காசிமேடு பகுதியில் பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள் சுமார் 870-க்கும் மேற்பட்டவை இருக்கின்றன. பதிவு செய்யப்படாதவை சுமார் 150-க்கும் மேற்பட்டவை இருக்கின்றன.
varda-cyclone-kasimedu-report (1)
சென்னை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர் சங்க செயலாளர் விஜேஷ்
வத்ரா புயலில் சுமார் 30 முதல் 40 படகுகள் வரை மூழ்கியிருக்கின்றன. 400 முதல் 500 படகுகள் சேதமாகியிருக்கின்றன.
இதற்கு நிவாரணம் கோரி மீன் வளத்துறையிடம் தொடர்பு கொண்டுள்ளோம்.அது வரை தொழிலுக்கு செல்வதில்லை என்று முடிவெடுத்துள்ளோம். கடலுக்கு சென்ற 2 படகுகளுடன் இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை.
அது விபத்துள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். காற்று வாட்டத்திற்கு அடித்து செல்லப்பட்டிருக்கும். கிருஷ்ணாபட்டினத்திற்கு மீன்பிடிக்க சென்ற படகுகள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து ஏதேனும் புகார் அளித்திருக்கிறீர்களா?
“இன்னும் முழுமையான விவரங்கள் எங்களுக்கே தெரியவில்லை. அநேகமாக இன்றைக்குள்(13-12-2016)க்குள் தெரிந்துவிடும். பின்னர்தான் முறைப்படி புகார் செய்ய முடியும்.”
வர்தா புயல் மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் சேதம் மிக அதிகம். அப்பகுதியில் குடிதண்ணீர் மின்சாரம் இன்றி வீடுகளின் கூரைகள் உடைந்து தண்ணீர் சிந்த மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். ஆத்திரமுற்ற மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திவருகிறார்கள். நாம் செல்லும் போது காசிமேடு சந்திப்பில் 13.12.2016 செவ்வாய் அன்று மக்கள் சுமார் 2 மணிநேரமாக சாலை மறியல நடத்தினார்கள்.
சென்னையில் வர்தா புயல் ஏற்படுத்திய அழிவில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் மீனவ மக்கள். ஆனால் ஊடகங்களும், அரசும் மேட்டுக்குடி பகுதிகளில் முறிந்து கிடக்கும் மரங்களை அகற்றி மின் விநியோகம் செய்வதையே சுற்றி சுற்றி வருகின்றன. உயிரையும், உடமையையும் இழந்து வாழும் மீனவ மக்கள் அனாதைகள் போல அவதிப்படுகிறார்கள். இவையெல்லாம் தமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத கணங்கள் என்றே அவர்கள் அதை சகஜமாக கடந்து செல்கிறார்கள்.
எல்லையிலே குளிரில் வாடும் வீரர்களை முன்வைத்து தேசபக்தி சாமியாடும் மத்திய அரசுக்கு இங்கே அன்றாடம் கடலிலே சாகசப் பயணம் சென்று வரும் மீனவ மக்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. காசி மேடு பகுதியில் மறியல் செய்த மக்கள் தன்னெழுச்சியாக போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை கலைப்பதிலும் விரட்டுவதிலும் குறியாக இருந்த போலீஸ் மற்றும் அதிகார வர்க்கம் அந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து எதையும் செய்யவில்லை.
நிவாரண முகாம், உணவு, குடி நீர் பொட்டலக் கணக்குகள் எவையும் இத்தகைய பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையவில்லை. கடலில் காணாமல் போய் விரைவில் இறந்து போனவர்களின் பட்டியலில் சேரவிருக்கும் மீனவர்களுக்காக ஆங்காங்கே அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
– செய்தி, படங்கள்: வினவு செய்தியாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக