செவ்வாய், 20 டிசம்பர், 2016

சசிகலாதான் முதல்வர்! - மோடியிடம் சொன்ன பன்னீர்!

அலுவலகத்தின் உள்ளே இருந்தபோது நெட் கட்டாகிக்கொண்டே இருந்தது. வெளியே வந்து சற்றுதூரம் நடந்தபிறகு மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ்அப் மெசேஜ் வந்து விழுந்தது.
‘‘வர்தா புயல் பாதிப்பால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்யவும், மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.22 ஆயிரத்து 573 கோடி நிவாரண நிதி கேட்டு பிரதமர் மோடியைச் சந்திக்க
டெல்லி போயிருந்தார் தமிழக முதல்வரான பன்னீர்செல்வம். திங்கள்கிழமை மாலை 5.10 மணிக்கு இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. வர்தா புயல் பாதிப்பு தொடர்பாக, கையோடு கொண்டுபோயிருந்த மனுவை பிரதமரிடம் கொடுத்தார் முதல்வர்.

அதன்பிறகு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றிய பேச்சு வந்திருக்கிறது. ‘ஜெயலலிதா மேடத்தின் மறைவு தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே பெரிய இழப்பு. ஒரு நல்ல நண்பரை நானும் இழந்துவிட்டேன்’ என்று, பன்னீர் கைகளை பற்றிக்கொண்டு பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. அதன்பிறகு பேசிய பன்னீர்செல்வம், ‘அம்மா இறந்த அந்த இக்கட்டான சமயத்தில், யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. சின்னம்மாதான் உடனடியாக ஆலோசனை நடத்தி என்னை முதல்வராக இருக்கச் சொன்னார்கள். அம்மாவுக்கு சில சிக்கல்கள் வந்தபோது, என்னை அவர்கள் முதல்வராக நியமித்தார்கள். இப்போதும் அப்படியான ஒரு சிக்கல்தான் வந்திருக்கிறது. நீங்கள்தான் முதல்வராக இருக்க வேண்டும் என சின்னம்மா சொன்னாங்க. நான் இப்போதைக்கு முதல்வராக இருக்கிறேன். கட்சி நிர்வாகிகள் எல்லோருடைய விருப்பமும் சின்னம்மா முதல்வராக வேண்டும். கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும் என்பதுதான். வரும் 29ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்தவிருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் ஒருமனதாக சின்னம்மாவை கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கவும், முதல்வராக முன்னிறுத்தவும் முடிவுசெய்துள்ளோம். இதெல்லாம் சின்னம்மாவிடமும் பேசிவிட்டோம். தினமும் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து சின்னம்மாவை பார்த்துவிட்டுப் போகிறார்கள். எல்லோரும், சின்னம்மாதான் முதல்வராக வேண்டும் என விரும்புகிறார்கள். முதலில், முதல்வராக அறிவித்து அவர்களை பதவியேற்க வைத்து விடுகிறோம். அதன்பிறகு ஏதாவது ஒரு தொகுதியில் நின்று ஜெயித்துவிடுவார்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதைக்கேட்ட பிரதமர் மோடி, ‘உங்களுக்குள், எல்லோரும் இப்படி ஒற்றுமையாக இருப்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. இது, ஜெயலலிதா வளர்த்த கட்சி. எந்தக் காரணத்துக்காகவும் யாரும் பிரிஞ்சுடாதீங்க. அதை ஜெயலலிதாவின் ஆன்மாகூட மன்னிக்காது! நீங்கள் எந்த முடிவுகள் எடுத்தாலும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்’ என்று சொன்னாராம்.” என்ற மெசேஜ்தான் அது.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்திருந்தது ஃபேஸ்புக். அதுமட்டுமல்ல; ஸ்டேட்டஸ் ஒன்றும் அப்டேட் செய்திருந்தது ஃபேஸ்புக்.
‘‘பொங்கலுக்குப் பிறகு அதாவது, மார்கழி முடிந்தபிறகு ஒரு நல்ல நாள் பார்த்துதான் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என சசிகலா நினைத்திருக்கிறார். அதற்காக, சில ஜோதிடர்களிடமும் ஆலோசனை கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் சசிகலாவின் கணவர் நடராஜன், ‘நல்ல நாள் பார்க்கிறது, ஜாதகம் பார்க்கிறதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இங்கே, கட்சிக்குள் இருக்கும் சிலர் ஏதோ பேசிக்கிட்டு இருக்காங்க. இப்போ, பெரும்பான்மையானவர்களின் ஆதரவு இருக்கு. யாரு எந்தநேரத்துல, எப்படி மாறுவாங்கன்னு தெரியாது. அதனால, உடனடியாக முதல்வராக பதவியேற்பதுதான் நல்லது. மார்கழியாக இருந்தால் என்ன? பொதுக்குழு முடிந்தவுடனே பதவியேற்பு விழா நடத்துங்க’ என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார். சசிகலாவும், தன் கணவர் நடராஜன் கொடுத்த அட்வைஸை ஏற்று, அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டாராம். அதாவது, டிசம்பர் 29ஆம் தேதி பொதுக்குழு முடிந்தவுடனே சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் பதவியேற்றுக் கொள்வார் என்று சொல்கிறார்கள். அதன்பிறகு, ஆறு மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று ஜெயித்தால்போதும். அதற்கான தொகுதிகள்கூட முடிவாகிவிட்டதாம். ஆர்.கே.நகர் அல்லது ஆண்டிபட்டி. இந்த இரண்டு தொகுதிகளின் பெயரை சசிகலா சொல்லியிருக்கிறாராம். இந்த இரண்டில் ஒன்றில் சசிகலா களமிறங்குவாராம்!” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். minnambalam,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக