செவ்வாய், 20 டிசம்பர், 2016

திருநாவுகரசர் ஆதங்கம் ? அதிமுக-வில் இருந்திருந்தால் இந்நேரம் முதலமைச்சராக.... காய்ச்சிய இளங்கோவன் !

காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்துகொண்டு, ‘அதிமுக-வில் தான் இருந்திருந்தால் முதல்வர்ஆகியிருப்பேன்’ என்று நினைப்பதுதான் திடமான மனநிலையா? என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திருநாவுக்கரசருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை கேட்டதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஜெயலலிதா மீண்டும் உயிரோடு வருவாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். திருநாவுக்கரசரின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதில் தெரிவித்துக் கூறுகையில் அது, திருநாவுக்கரசர் தனது சொந்தக் கருத்தை கூறியுள்ளார் என்று கூறினார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பதிலுக்கு, வெள்ளை அறிக்கை விவகாரத்தை ராஜீவ் காந்தி கொலையோடு ஒப்பிடுபவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று, திருநாவுக்கரசர் திருப்பிக் கூறினார். இந்நிலையில், திருநாவுக்கரசரின் கருத்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருகிறது. இந்நிலையில், அவரது மருத்துவ சிகிச்சை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்கள் வெள்ளை அறிக்கை வேண்டும் என்று கூறியிருந்தனர். அதற்கு எதிர்வினையாக அதிமுக-வினரை முந்திக்கொண்டு திருநாவுக்கரசர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி வெள்ளை அறிக்கையும் தேவையில்லை, கறுப்பு அறிக்கையும் தேவையில்லை-அப்படி வெளியிட்டால் மறைந்த ஜெயலலிதா திரும்ப வந்துவிடுவாரா? என பேட்டியளித்துள்ளார். அவரது இந்தப் பேட்டி தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, அதிமுக-வின் விசுவாசமிக்க தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
இதுகுறித்து எனது கருத்தை நான் பத்திரிகையாளர்களிடம் கூறியபோது, ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை தேவை எனக் கூறினேன். இதற்கு, என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று திருநாவுக்கரசர் சாடியிருக்கிறார். அவர் மனநிலை பாதிக்கப்படாமல் திட மனதோடு இருப்பது சரியானால் ஏன், எல்லா இடங்களிலும் தான் அதிமுக-வில் இருந்திருந்தால் முதலமைச்சராக இருந்திருப்பேன் எனக் கூறிவருகிறார். நேற்று முன்தினம்கூட ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் இந்தக் கருத்தை பதிவு செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்துகொண்டு ‘அதிமுக-வில் தான் இருந்திருந்தால் முதலமைச்சர் ஆகியிருப்பேன்’ என சிந்திப்பதுதான் திடமான மனநிலையா?. வெள்ளை அறிக்கை வேண்டாம் என, தான் சொன்னது சொந்தக் கருத்து அல்ல. காங்கிரஸ் கட்சியின் கருத்து என்றும் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் கருத்து என்றால், அதுகுறித்து செயற்குழுவைக் கூட்டி முடிவெடுத்தாரா? அல்லது காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுத்தாரா? அல்லது மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்நிக்கிடம் கலந்து பேசி அறிவித்தாரா? இதுகுறித்து அவர் தெளிவுபடுத்தினால் அவரது கருத்தை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்.
மேலும் ஜெயலலிதாவோடு தான் பணியாற்றிய காரணத்தால், அவரது மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டாம் எனச் சொன்னதாக கூறியிருக்கிறார். இதேபோல், பிரதமர் மோடியோடு பிஜேபி-யில் சேர்ந்து பணியாற்றிய காரணத்தால் அவர் கொண்டுவந்த 5௦௦, 1௦௦௦ ருபாய் நோட்டுகள் செல்லாது என்ற திட்டத்தால் வங்கிகளின் முன்னால் வரிசையில் நாள்கணக்கில் மக்கள் அவதியுறுவதைக் கண்டும் அத்திட்டத்தை ஆதரித்தும் இதுவும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என திருநாவுக்கரசர் கூறப்போகிறாரா? என்று அவர் கூறியுள்ளார்.மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக