ஞாயிறு, 18 டிசம்பர், 2016

பன்னீர் - சசிகலா போஸ்டர் யுத்தம் .. பன்னீர் பதவி சுகம் கண்டுவிட்டார் இனி விட்டு தரமாட்டார்?

OPS supporters protest against Sasikalaசென்னை: சசிகலாவே முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்மாவட்டங்களில் சசிகலா ஆதரவு போஸ்டர்கள், பேனர்களை கிழித்து அதிருப்தியை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்போது ஆர்கே நகரில் போட்டியிட்டு வென்று முதல்வர் பதவியையும் சசிகலா ஏற்க வேண்டும் எனவும் அதிமுகவினர் வலியுறுத்துகின்றனர்.


தென்மாவட்டங்களில் எதிர்ப்பு
சசிகலா பொதுச்செயலராவதற்கே அதிமுக தொண்டர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். சென்னை, தேனி, கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் சசிகலா போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருந்தன. தற்போது முதல்வர் பதவியையும் சசிகலா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையால் தென்மாவட்டங்களில் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.
போஸ்டர்கள் மீது சாணம் வீச்சு
கம்பம் - குமுளி சாலையில் சசிகலாவுக்கு ஆதரவாக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களில் சசிகலா படத்தின் மீது சாணத்தை சிலர் வீசிவிட்டு தப்பி ஓடினர். இதனால் அதிர்ச்சியடைந்த சசிகலா ஆதரவாளர்கள் தண்ணீர் ஊற்றி சாணத்தை அகற்றினர்.
போஸ்டர்கள் கிழிப்பு
இதேபோல் திண்டுக்கல் நகரிலும் பல இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. சசிகலா சார்ந்த தேவர் சமூகத்தினர் அதிகம் உள்ள தென்மாவட்டங்களிலேயே இப்படி கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது சசிகலா தரப்பை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பு
தென்மாவட்ட தேவர் சமூகத்தினர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்தான் அதிமுகவின் பொதுச்செயலராகவும் வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து முதல்வர் பதவியையே பறிக்கவும் முயற்சிகள் நடப்பதால் கடுமையான கொந்தளிப்பில் உள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக