செவ்வாய், 13 டிசம்பர், 2016

சசிகலாவை பொதுசெயலாளர் ஆக்க தொடரும் கையெழுத்து வேட்டை!

அதிமுக பொதுச் செயலாளராக மறைந்த தமிழக முதலமைச்சரின் தோழி சசிகலாவை நியமிக்க அதிமுக அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என பல தரப்பிலும் ஆதரவு தெரிவித்து வருவதையோட்டி, அவர் விரைவில் அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்கவுள்ளார். இதுகுறித்து, நமது மின்னம்பலம் அரசியல் செய்தியில் ஏற்கனவே பதிவுசெய்திருந்த நிலையில், அதிமுக அமைச்சர்கள் மூலமாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு வருவது குறித்து நேற்று பதிவு செய்திருந்தோம்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல் நலமின்றி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சுமார் 75 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில், திடீரென கடந்த 5ஆம் தேதி உயரிழந்தார். அதையடுத்து, அதிமுக-வில் அடுத்தடுத்த மாற்றங்கள் மிக விரைவில் நடைபெற்று வருகின்றன.
தமிழக முதலமைச்சராக, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
அதையடுத்து, அதிமுக-வில் மிகவும் அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவிக்கு, ஜெயலலிதாவுடன் கடந்த 33 ஆண்டுகளாக உடனிருந்த வி.கே.சசிகலாவை நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட அதிமுக-வில் உள்ள அனைத்து அமைச்சர்களும், எம்.பி.க்களும், மாநில நிர்வாகிகளும் கருத்துத் தெரிவித்தனர்.
அதன் காரணமாக, அதிமுக-வில் பொதுச் செயலாளராக வருவதற்கு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும், செயற்குழு உறுப்பினர்களும் முழு ஆதரவு தெரிவிக்கும்வகையில், தங்கள் ஆதரவை தெரிவித்து கையொப்பமிட்ட படிவத்தைப் பெறும்வகையில், அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமனம் செய்திடும்வகையில் அனைத்து அமைச்சர்களையும் சென்னையிலேயே இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களின் மூலமாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும்படியாக கையொப்பம் பெறப்பட்டு வருகிறது.
இன்று, தர்மபுரி மாவட்டச் செயலாளராகவும், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கும் கே.பி.அன்பழகன், தனது மச்சான் மூலமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரச் செயலாளர்கள், ஒன்றிய பொதுச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை தர்மபுரி அரசு மருத்துவமனை எதிரேயுள்ளே கட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களிடம் வி.கே.சசிகலாவை பொதுச் செயலாளராக ஆக்குவதற்கு கையொப்பம் பெறும்படி உத்தரவிட்டுள்ளார். அதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய அதிமுக பிரமுகர்களிடம் வி.கே.சசிகலாவுக்கு ஆதரவு பெறும் வேலையை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னையில் இருந்தபடி கவனித்து வருகிறார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் பழனியப்பன் தனது ஆதரவாளர்களுடன் 16 கார்களில் கூட்டத்திற்கு வந்து சசிகலா பொதுச்செயலாளர் நியமனம் செய்யும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட வைத்து தன் செல்வாக்கைக் காட்டினார்.அதிமுக-வின் அடுத்த பொதுச் செயலாளராக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அறிக்கை மற்றும் ஆதரவுக் கடிதங்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இன்றும் பல மாவட்டங்களில் ஆதரவு தெரிவிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக