செவ்வாய், 27 டிசம்பர், 2016

அதிமுக பொதுக்குழுவில் வெடிக்கும் பலப்பரீட்சை ... பன்னீர்செல்வம் சசிகலா கோஷ்டிகள்...


அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சசிகலாவை, பொதுச்செயலர் பதவிக்கு, தேர்வு செய்வதை விரும்பாத, அவரது எதிர்ப்பாளர்கள், கச்சை கட்ட தயாராகி வருகின்றனர். இதையறிந்ததும், போர்க்கொடி துாக்குவோரை, 'கழற்றி' விடும்படி, மாவட்ட செயலர்களுக்கு, போயஸ் கார்டனில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. ஜெயலலிதா இருந்தவரை, அ.தி.மு.க., பொதுச்செயலர் தேர்தல் நடக்கும் போது, அவர் மட்டுமே மனு தாக்கல் செய்வார். கட்சி நிர்வாகிகள் அனைவரும், ஜெ., கவனத்தை ஈர்க்க, அவரது பெயரில், மனு தாக்கல் செய்வர்.
இப்படி ஏழு முறை போட்டியின்றி, பொதுச்செயலராக, ஜெ., தேர்வு செய்யப்பட்டார். அவர் மறைவுக்கு பின், பொதுச்செயலர் பதவி காலியாக உள்ளது. கட்சியில் அனைத்து அதிகாரங்களும் உடைய பதவி; அப்பதவியில் அமருபவரே, முதல்வராக முடியும் என்பதால், அதை கைப்பற்ற சசிகலா முடிவு செய்துள்ளார்.


விசுவாசிகள் விரும்பவில்லை

ஜெயலலிதா இருந்தவரை, சசிகலாவை, எதிலும் முன்னிறுத்தவில்லை. அவரது குடும்பத்தினர் அனைவரையும், கட்சியை விட்டு நீக்கியதுடன், மீண்டும் அவர்களை சேர்க்கவில்லை. எனவே, அவர்கள் மீண்டும் கட்சிக்குள் வருவதை, ஜெயலலிதா விசுவாசிகள் விரும்பவில்லை.
பதவியை தக்கவைத்துக் கொள்ள, அமைச்சர்கள் உள்ளிட்டோர், சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சசிகலாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவிற்கு எதிராகவும், முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோருக்கு ஆதரவாகவும், 'பேனர்'கள்
வைத்து வருகின்றனர்.
சசிகலாவிற்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அ.தி.மு.க., பொதுக்குழு, 29ம் தேதி, சென்னை, வானகரத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கான
அழைப்பிதழ், மாவட்ட செயலர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது.
மாவட்ட செயலர்களிடம், சசிகலா தலைமையை ஆதரிக்கும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டும், அழைப்பிதழ் கொடுக்கும்படி கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்களை மட்டும், பொதுக்குழுவுக்கு அழைத்து வந்தால்
போதும் என, சசிகலா குடும்பத்தினர் உத்தரவிட்டுள்ளனர். இது, கட்சியினரிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.மாவட்ட செயலர்கள், அழைப்பிதழ் தராவிட்டாலும், பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற முறையில் சென்று, எதிர்ப்பை பதிவு செய்வது என, முடிவு செய்துள்ளனர். இதனால், பொதுக்குழு கூட்டத்தில், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:சசிகலா ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டும், அழைப்பிதழ் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்ப்பாளர்கள் வந்தால், பிரச்னை ஏற்படும் என்பதால், அவர்களை தவிர்க்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆதரவாளர்கள் எத்தனை பேர், எதிர்ப்பாளர்கள் எத்தனை பேர் என்ற பட்டியலை, இன்று மாலைக்குள் வழங்கும்படி, மாவட்ட செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பட்டியல் வந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க, சசிகலா தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எந்த இடம்?

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு, அ.தி.மு.க., தலைமை சார்பில், அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதத்தில், 'அ.தி.மு.க., அவசர பொதுக்குழு கூட்டம், வரும், 29ம் தேதி, காலை, 9:30 மணிக்கு, சென்னையில், அவைத் தலைவர், மதுசூதனன் தலைமையில் நடைபெற உள்ளது. தங்களுக்குரிய அழைப்பிதழோடு, பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அழைப்பு கடிதத்தில், யாருடைய கையெழுத்தும் இல்லை; எந்த இடம் என்பதும் குறிப்பிடப்படவில்லை.

சட்ட போராட்டம் எதிர்ப்பாளர்கள் திட்டம்


அ.தி.மு.க., விதிகளின்படி, சசிகலா பொதுச்செயலராக, தேர்வு செய்யப்படுவதை தடுக்க, அவரது அதிருப்தியாளர்கள், சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து, அதிருப்தியாளர்கள் சிலர் கூறியதாவது:கட்சி விதி, 43ன் படி, அ.தி.மு.க.,வில் உள்ள அடிப்படை விதிகளில், எப்போதும், யாராலும், எந்த மாற்றமும் கொண்டு வர முடியாது. கட்சி விதி, 305ன் படி, ஒரு உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இவற்றை மீறி, தங்களுக்கு சாதகமாக, பொதுக்குழுவை மாற்றி அமைத்து, சசிகலா பொதுச்செயலரானால், அது சட்டவிரோத செயலாகும்.
கடந்த, 2011 டிசம்பரில், சசிகலா, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 2012 மார்ச்சில் மன்னிப்பு கடிதம் வழங்கிய பின், மீண்டும் சேர்க்கப்பட்டார்; ஆனால், அவருக்கு உறுப்பினர் கார்டு வழங்கப்படவில்லை.ஆரம்பகால உறுப்பினர் அட்டை வைத்திருக்கிறேன் என்ற அடிப்படையில், பொதுச்செயலர் பதவிக்கு, சசிகலா போட்டியிட்டால், அவரது உறுப்பினர் அட்டையின் நம்பகத் தன்மையை, சி.பி.ஐ., சோதனை நடத்த வேண்டும் என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.
பொதுச்செயலர் தேர்தலில் போட்டியிட, வேட்பு மனு தாக்கல் செய்யவும், வாபஸ் பெறவும், கால அவகாசம் அளிக்கும் வகையில், தேர்தல் அட்டவணை வெளியிட வேண்டும். தேர்தல் நடைமுறையை கடைபிடிக்காமல், யாரையும் அனுமதிக்காமல் மிரட்டி, சசிகலா ஒருவரை மட்டும் மனு தாக்கல் செய்ய வைத்தால், அத்தகைய நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது என, தேர்தல் கமிஷனிடம், மனு அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். நமது சிறப்பு நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக