திங்கள், 26 டிசம்பர், 2016

எக்ஸ் ஆளுநர் ரோசையா மீது விசாரணை .. ராம் மோகன ராவை ஜெயலலிதாவுக்கு சிபார்சு செய்ததே இந்த எக்ஸ்தான்!

சென்னை: தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யாவிடம் விசாரணை நடத்த மத்திய புலனாய்வு ஏஜென்சிகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், ஊழல் கறை படிந்த ராமமோகன ராவை தலைமைச் செயலாளராக நியமிக்கலாம் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பரிந்துரை செய்ததே ரோசய்யாதான் என்று கூறப்படுவதால். விரைவில் ரோசய்யாவுக்கு சம்மன் அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தேவைப்பட்டால் அவரது வீட்டையும் சோதனையிட வருமான வரித்துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனராம். ரோசய்யாவிடம் விசாரணை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் முடுக்கி விட்டுள்ளதாக தெரிகிறது. ரோசய்யாவிடம் எந்த அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.


அதேசமயம், அவருக்கும் ராவுக்கும் ஏதாவது தொழில் ரீதியிலான தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து முக்கியமாக விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது. சேகர் ரெட்டியுடன் இணைந்து பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக சிக்கி ரெய்டுக்குள்ளாகி தற்போது பதவியை இழந்து கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் ராமமோகன ராவ். அவரிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை காத்துள்ளன. ஆனால் நெஞ்சு வலி என்று கூறி அரசியல்வாதிகள் பாணியில் மருத்துவமனையில் போய்ப் படுத்து விட்டார் ராவ்.

ஆனால் அவரது உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லை என்று உளவுப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து விரைவில் அவரை விசாரணைக்கு உட்படுத்த அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் ஆளுநர் ரோசய்யா சீனுக்கு வந்துள்ளார். தமிழக ஆளுநராக இருந்தவர் ரோசய்யா. ஜெயலலிதாவிடம் நல்ல மதிப்புடன் இருந்தவர். இவர்தான் ராவை, தலைமைச் செயலாளர் பதவியில் நியமிக்கலாம் என்று ஜெயலலிதாவுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. எனவே ரோசய்யாவையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர விசாரணை அமைப்புகள் யோசிக்கின்றனவாம்.

இதுதொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகளை அவை மேற்கொண்டுள்ளன. ரோசய்யா விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டால் அவரிடம் ராவின் சட்டவிரோத செயல்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா என்பது குறித்து விசாரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரோசய்யாவுக்கும், ராவுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக