ஞாயிறு, 25 டிசம்பர், 2016

எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி சரவணன் மரணத்துக்கு நீதி – பெற்றோர் கண்ணீர்!

எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்த மாணவன் சரவணன் இறப்பில் மர்மம் உள்ளது என அவரது பெற்றோர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனாலும் தகுந்த நியாயம் அவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் டாக்டர் சரவணன். இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல்படிப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தெரியவந்ததும் அவரது உறவினர்கள் டெல்லிக்கு சென்றனர். அப்போது அவர்களிடம் டாக்டர் சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.ஆனால் குடும்பத்தினர் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, சரவணனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் வி‌ஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் டாக்டர் சரவணன் கொலை செய்யப்பட்டு 5 மாதம் ஆகியும் இதுவரையும் டெல்லி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்யவில்லை என்று சரவணனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
டாக்டர் சரவணனின் தந்தை கணேசன், தாய் யுவராணி ஆகியோர் கோவையில் இன்று கண்ணீர் மல்க பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:எங்களது மகன் இறந்த தகவல் கிடைத்ததும் நாங்கள் உடனடியாக டெல்லி சென்றோம். ஆனால், சரவணனின் உடலை பார்க்கவிடாமல் எங்களைத் தடுத்தனர். எங்களிடம் சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக டாக்டர்கள், போலீசார் தெரிவித்தனர். ஆனால் பிரேத பரிசோதனையில் வி‌ஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
அதன்படி கடந்த நவம்பர் மாதம் நீதி மன்றத்தில் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், இதுவரை டெல்லி போலீசார் எங்களது மகன் சாவை கொலை வழக்காக பதிவு செய்யவில்லை. எங்களை டெல்லி போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வருகிற 10-ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம். ஏற்கனவே சரவணன் கொலை குறித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பினோம். பிரதமர் அலுவலகத்தில் இருந்து அந்த கடிதம் தமிழக தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று கூறினர்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக