வியாழன், 15 டிசம்பர், 2016

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு .. வலுக்கும் சந்தேகங்கள் .. கோரிக்கை!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலவிதமான கேள்விகள் சமூக வலைதளங்களிலும் அதிமுக தொண்டர்களிடமும் கேள்விகள் எழுந்தநிலையில், சசிகலா அதிமுக-வின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக-வின் மூத்த நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்கும்விதமாக அதிமுக-வின் அவை விதிகள் மாற்றப்படும் என்று பொன்னையன் தெரிவித்தநிலையில், அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்களை கிளப்பி வருகிறார்கள். இது தொடர்பாக, பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக-வைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பலரும் என்னைத் தொடர்புகொண்டு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஐயம் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்ததில் தொடங்கி இன்று வரை பொது இடங்களில் என்னைச் சந்திக்கும் அதிமுக தொண்டர்களும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணைக்கு ஆணையிடக் கோரும்படி கோரிக்கை விடுத்தனர். அதிமுக-வினர் தெரிவித்த ஐயங்களும் கோரிக்கைகளும் ஒதுக்கித் தள்ளிவிடக் கூடியதாக இல்லை. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இரவில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் திசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவில் அவர் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டது வரையிலான 75 நாட்களிலும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வெளிப்படையானதாக இல்லை. அந்த தகவல்கள் அனைத்தும் கடமைக்கு வெளியிடப்பட்டவையாகவே அமைந்திருந்தன. 1984ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை. மாறாக, அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் எச்.வி.ஹாண்டேதான் முதலமைச்சரின் உடல்நிலை குறித்த சீரான இடைவெளியில் வெளியிட்டு வந்தார். அவை நம்பத்தகுந்தவையாக இருந்தன. ஆனால் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த விவரங்களை மருத்துவமனை நிர்வாகமே வெளியிட்டது. அதுமட்டுமின்றி, முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்றுவிட்டதாகவும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்ட பிறகும்கூட அவரைச் சந்தித்து நலம் விசாரிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட காலத்தில் தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் நலம் விசாரிக்க வந்தபோதும்கூட அவர்கள் ஜெயலலிதாவை சந்திப்பது மிக கவனமாக தவிர்க்கப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், முதலமைச்சரின் பொறுப்புகளைக் கவனித்த மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவமனையில் தங்கியிருந்தபோதிலும்கூட, அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. ஒரு மாநில முதலமைச்சர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை முதலமைச்சரின் பொறுப்புகளை கவனித்துக்கொள்ளும் மூத்த அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் கவனித்துக் கொள்வதுதான் மரபாகும். 2009ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, பிரதமரின் பொறுப்புகளை கவனித்துக்கொண்ட மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாசும்தான் உடனிருந்து சிகிச்சையை கவனித்தனர். பிரதமருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவர் அன்புமணிதான் வெளியிட்டார். ஆனால் தமிழகத்தில் முதலமைச்சர் பொறுப்பை கவனித்துக்கொண்ட, மூத்த அமைச்சரும் சுகாதார அமைச்சரும் பெயரளவுக்கு மட்டுமே மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டனர். சிகிச்சை தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ள முடியாமல் அவர்கள் இருட்டிலேயே வைக்கப்பட்டிருந்தனர். இவர்களைத் தாண்டி முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை தீர்மானிக்கும் சக்தியாக வேறுசிலர் இருந்தனர். முதலமைச்சர் என்றமுறையில் அரசு சார்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், அரசு நிர்வாகத்தின் உயர் பதவிகளில் இருந்தவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அனைத்துவகையான முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் எந்த அடிப்படையில் அந்த சிலருக்கு வழங்கப்பட்டது? என்பதுதான் அதிமுக-வினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் எழுந்துள்ள வினாவாகும். இந்த வினாவை எழுப்ப அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு; அதற்கு பதிலளிக்கும் கடமை அரசுக்கு உள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கு அடுத்த நாளே அவர் குணமடைந்துவிட்டதாகவும், அடுத்த சில நாட்களில் இல்லம் திரும்புவார் என்றும் மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதை உறுதிசெய்யும்வகையில் காவிரி பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் எப்போதும் இல்லாதவகையில் தீபஒளி திருநாளுக்கான போனசை ஒரு மாதத்துக்குமுன்பே அறிவித்ததாகவும் திட்டமிட்டு செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்திகள் வெளியான சில நாட்களில் முதலமைச்சருக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதால் அவர் நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியானது. இடையில் நடந்தவை என்ன? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். 75 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழுமையாக உடல்நலம் தேறிவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அறிவித்ததன் பின்னணியில் பெரும் மர்மம் இருப்பதாக அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கருதுகின்றனர். அவர்களின் இந்த ஐயம் தீர்க்கப்பட வேண்டும். ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தபோது பதப்படுத்தப்பட்டிருந்ததாக புகார்கள் எழுந்துள்ளநிலையில் அவற்றுக்கு பதிலளிக்கப்பட வேண்டும். ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட சோகத்திலிருந்து அதிமுக-வின் தொண்டர்கள் இன்னும் மீளாதநிலையில், அக்கட்சியில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியும், இதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நடந்துகொள்ளும்விதமும் தொண்டர்களின் வேதனையை அதிகப்படுத்தியுள்ளன. அதிமுக-வின் அனைத்து வெற்றிக்கும் ஜெயலலிதா மட்டுமே காரணம் என்று கூறிவந்த மூத்த தலைவர்கள், இப்போது, ‘அதிமுக-வின் வெற்றிக்கு ஜெயலலிதா காரணமல்ல... இரட்டை இலைச் சின்னம்தான் காரணம்’ என்று கூறத் தொடங்கியிருப்பதிலிருந்து அவர்கள் யார்? அவர்கள் யாருக்கு துரோகம் செய்கிறார்கள்? யாருக்கு விசுவாசமாக இருப்பதுபோல நடிக்கிறார்கள் என்பதை தொண்டர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்த விஷயத்தில் உண்மையை உலகுக்குணர்ந்த வேண்டிய ஊடகங்கள், யாருக்கோ அதிகாரத்தை பெற்றுத்தர நடத்தப்படும் நாடகத்தின் கதாபாத்திரங்களாக மாறியிருப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடகங்கள் தங்கள் கடமையை உணர்ந்து உண்மையாக நடக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதாமீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அவரது கட்சியினருக்கு அவர் எப்போதும் போற்றுதலுக்குரியவராகவே இருந்தார். ஜெயலிலதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் அவரது மரணம் குறித்தும், அதிமுக-வினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஆயிரமாயிரம் ஐயங்கள் நிலவும் நிலையில், அவற்றைப் போக்கும்வகையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.” என்று, அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ராமதாஸின் அறிக்கை பல கேள்விகளை எழுப்பிய நிலையில், திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் பேசும்போது, ‘ஜெயலலிதாவின் மரணத்தை அரசியலாக்க திமுக விரும்பவில்லை. ஆனால் ஜெயலலிதா சிகிச்சை குறித்து உரிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனவே பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியதைப்போல் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.” என்று நிருபர்களிடம் கூறினார். ராமதாஸ், ஸ்டாலின் போன்றவர்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பேசும்போது, ‘சசிகலா செல்வாக்குப் பெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் சசிகலாவை சின்னம்மா என்று அழைப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் அவர்மீது வீண் பழி சுமத்துகிறார்கள். மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டவர் சசிகலா. கட்சியில் ஏதேனும் முக்கியமான விஷயங்கள் பேச வேண்டும் என்றால்கூட, எங்களிடம் ஜெயலலிதாவே சொல்வார் ‘சசிகலாவிடம் பேசுங்கள்’ என்று. அந்தளவுக்கு சசிகலாவுக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுத்தார்.’ என்று செய்தியாளர்களிடம் கூறினார்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக