சனி, 24 டிசம்பர், 2016

ரெயிட் ! தூக்கம் தொலைத்த அதிமுகவும் பாஜகவும் .. ஏவி விட்டவர்களே மாட்டுப்படும் அசம்பாவிதம்?


முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்' என வருமான வரித்துறை வட்டாரத்தில் இருந்தே தகவல் வெளிவருகிறது. ' அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்படாமல் இருப்பதற்காக கார்டன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 
தமிழக அரசின் துறைகளை நோக்கி வருமான வரித்துறையின் பார்வை தீவிரமடைந்து வருகிறது. சேலம், கடலூரில் உள்ள மாநில கூட்டுறவு வங்கிகளைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. " ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக்
ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் கோட்டையில் உள்ள அதிகாரிகள்.
சேகர் ரெட்டியின் நட்போடு ஆந்திரா, கர்நாடகாவில் தொடங்கப்பட்ட தொழில்கள், பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. விரைவில் சி.பி.ஐ கஸ்டடிக்கு ராம மோகன ராவ் செல்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன" என விவரித்த தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்,
" சேகர் ரெட்டி வளைக்கப்பட்ட தினத்தில் இருந்தே தூக்கமில்லாமல் தவித்து வந்தார் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ். இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, டெல்லி வரையில் சென்று சில லாபிக்களை செய்து பார்த்தார். அவரிடம் பேசுவதற்குக்கூட டெல்லியில் உள்ள அவருடைய ஐ.ஏ.எஸ் நண்பர்கள் பயந்தார்கள். ' எங்கள் கைகளில் எதுவும் இல்லை. பிரதமர் நேரடியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்' எனப் பதில் சொல்லி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து இருண்ட முகத்தோடுதான் சென்னை வந்தார். 21-ம் தேதி காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வருவதை அறிந்து, கார்டன் வட்டாரத்தின் 'சூத்ரதாரி' எனச் சொல்லப்படுபவரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ' நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்' எனச் சொல்லிவிட்டு,
மத்திய இணை அமைச்சர் ஒருவரைத் தொடர்பு கொண்டார் சூத்ரதாரி. போன் எடுத்துப் பேசத் தொடங்கியதுமே, ' ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். நான் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் மரியாதை கொடுக்க முடியும். இந்த மாதிரியான விவகாரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்' எனக் கோபத்துடன் கூறிவிட்டார்.
அடுத்ததாக, பா.ஜ.கவின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் இன்னொரு சூத்ரதாரியைத் தொடர்பு கொண்டு பேசினார். ' நான் என்ன பண்ண முடியும்னு நினைக்கறேள். எல்லாம் அவர் பார்த்துண்டு இருக்கார்' எனச் சொல்லி தொடர்பைத் துண்டித்தார். இறுதி முயற்சியாக, நிதித்துறை அமைச்சகத்தின் சீனியர் அதிகாரியைத் தொடர்பு கொண்டு பேசினார். ' ரெய்டில் கிடைத்த துல்லியமான தகவல்களைக் கொண்டுதான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நீங்கள் தொடர்பில் வந்தது தெரிந்தாலே, மத்தியில் உள்ளவர்கள் கொந்தளித்துவிடுவார்கள்' எனச் சொல்லிவிட்டார்.

இதன்பிறகு யாரைத் தொடர்பு கொள்வது என நொந்தபடியே விவாதித்துக் கொண்டிருந்தார் சூத்ரதாரி. 'சென்னையில் இருந்தால் தேவையில்லாமல் தன்னையும் வம்புக்கு இழுப்பார்கள்' என்பதால், நீலாங்கரையில் உள்ள 'கரன்' வீட்டில் அமர்ந்து கொண்டே ஆலோசனைகளைத் தொடர்கிறார். ராமமோகன ராவ் கைது செய்யப்பட்டால், அடுத்த குறி கார்டனை நோக்கித்தான் இருக்கும் எனவும் அச்சத்தில் இருக்கிறார். காங்கிரஸ் முகாமில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டும் அறிவுரைகளைக் கேட்டு வருகிறார். மிக ரகசியமாகவே அனைத்து நடவடிக்கைகளும் இருப்பதால், பிரதமரை எந்த வகையில் சந்திப்பது என்ற ஆலோசனைதான் தீவிரமாக இருக்கிறது" என்றார் விரிவாக.
" சென்னை துறைமுகத்தின் மூலம் மொலாசஸ்  ஏற்றுமதியை ராம மோகன ராவுக்கு வேண்டப்பட்டவர்கள் நடத்தி வருகிறார்கள்.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாகவே கவனித்து வந்தார் தலைமைச் செயலாளர். கரும்பு விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்யும் கரும்பில் இருந்து மொலாசஸ் பிரித்தெடுக்கப்படுகிறது. இதை வாங்கி லண்டனுக்கு விற்பதில் ராம மோகன ராவுக்குக் கிடைக்கும் லாபம், கணக்கில் அடங்காதது. ' புதிதாக வந்த ஒரு கம்பெனிக்கு துறைமுகத்தில் எப்படி இடம் கொடுக்கலாம்' என கப்பல் துறையில் உள்ள முக்கியமானவரிடம், துறைமுக அதிகாரிகள் சண்டைக்குப் போன சம்பவமும் நடந்தது. 'கரும்பு மொலாசஸ் பின்னணியை வருமான வரித்துறை ஆராய வேண்டும்' என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. கார்டனின் அனைத்து பரிவர்த்தனைகளையும் அறிந்தவர் ராமமோகன ராவ். அதை வைத்தே, தனக்கென்று பிரமாண்ட வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். அவர் மீது கைது நடவடிக்கை பாய்வது என்பது சசிகலா வகையறாக்களை நேரடியாக வளைக்கும் முயற்சியாகத்தான் பார்க்கிறார்கள். அதோடு நான்கு அமைச்சர்களின் பரிவர்த்தனைகளையும் தோண்டி எடுத்துவிட்டார்கள். அமைச்சர்கள் பிளஸ் அதிகாரிகள் என கார்டனை நோக்கியே மத்திய அரசின் கரங்கள் நீள்கின்றன" என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக