ஞாயிறு, 18 டிசம்பர், 2016

அரசியல் கட்சிகளின் 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு வரிவிலக்கு.. எவ்வளவும் டெபாசிட் செய்யலாம் ... மம்தா.. கேஜ்ரிவால்

மம்தா, கேஜ்ரிவால் | கோப்புப் படம்: ஆர்.வி.மூர்த்தி. மம்தா, கேஜ்ரிவால் | கோப்புப் படம்: ஆர்.வி.மூர்த்தி. "அரசியல் கட்சிகள் டெபாசிட் செய்யும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு வரிவிலக்கு என்று இப்போது மத்திய அரசு அறிவித்துள்ளதில் உள்நோக்கம் உள்ளது" என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மோடி - ராகுல் சந்திப்பை மேற்கோள் காட்டி, இதே பிரச்சினையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் சந்தேகம் எழுப்பியுள்ளார். மத்திய அரசின் புதிய அறிவிப்பு குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா சனிக்கிழமை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட கருத்துகள்: "அரசியல் கட்சிகள் டெபாசிட் செய்யும் 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு வரிவிலக்கு என்று மத்திய அரசு இப்போது அறிவித்துள்ளதில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளனர். அப்படி இருக்கும் போது சாதாரண மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் வேறுபாடுகளை மத்திய அரசு எப்படி வேறுபடுத்தி காட்ட முயற்சிக்கிறது.
அதிலும் இந்த அறிவிப்பு வெளியிட்ட நேரத்தில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியினருக்கு மறைமுக செய்தியை தெரிவிக்க முயற்சி நடக்கிறதா? ஏன் இந்த குழப்பமான அறிவிப்புகள்? இதுகுறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்" என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கேஜ்ரிவாலும் சந்தேகம்
இது குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, "அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்து நிதி வந்தது என்பதை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். பிரதமர் மோடியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, அரசியல் கட்சிகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்தால் வரிவிலக்கு என்று மத்திய அரசு அறிவித்தது.
இரு கட்சிகளும் பேசிக்கொண்டதன் விளைவாகவே இந்த அறிவிப்பு வெளியானதாக தெரிகிறது. சாதாரண மக்கள் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் சாதாரண மக்கள் டெபாசிட் செய்தால் விசாரணை நடத்தப்படும். ஆனால், மத்திய அரசின் அறிவிப்பால் அரசியல் கட்சிகள் ரூ.2,500 கோடியை டெபாசிட் செய்தாலும் விசாரணை கிடையாது. இது மிகப்பெரிய தவறு.
எனவே, கடந்த 5 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் வங்கிகளில் டொபசிட் செய்த பணம் எவ்வளவு, அதற்கான ஆதாரங்கள் என்ன போன்றவற்றை கண்டறிய சுதந்திரமான விசாரணை கமிஷனை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது முதல் இன்று வரை கட்சி நிதி பற்றி விசாரிக்கின்றனர். அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் நாங்கள் சமர்ப்பிக்கிறோம். நாங்கள் பயப்படவில்லை. ஆனால், பாஜக நிலை என்ன? பாஜக.வின் நிதி ஆதாரங்கள் குறித்து ஏன் விசாரிக்கப்படவில்லை" என்று கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
முன்னதாக, மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா வெள்ளிக்கிழமை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "அரசியல் கட்சிகள் வங்கிகளில் டெபாசிட் செய்யும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். எனினும், தனிநபர் ஒருவரிடம் கட்சி நன்கொடையாக ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பணமாக பெற்றிருக்க கூடாது. மேலும், நன்கொடை அளிப்பவரின் முழு விவரங்களும் ஆவணப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக