செவ்வாய், 20 டிசம்பர், 2016

ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50க்கு ‘மாற்றுப்பணம்’..! சுங்கச்சாவடிகளில் ‘பிரிண்ட்’..! இனி அனைத்து மாநிலங்களும் தங்களுக்கு தேவையான மாற்று பணங்களை தாங்களே அச்சடித்து கொள்ளலாம்?



நாடுமுழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 பழைய நோட்டுக்கள் செல்லாது என கடந்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, அந்த நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் நாள் முழுவதும் காத்துக்கிடந்து வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். புதிய ரூபாய் நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.2,000 மாற்றிக்கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2,000 மட்டுமே அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதனால், நாடுமுழுவதும் அத்தியாவசிய செலவுக்குக்கூட சில்லரை மாற்ற முடியாமல் போராடி வருகின்றனர். மேலும், சுங்கச்சாவடிகளில் புதிய நோட்டுகளை கொடுத்து சில்லரையை வாங்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றன்றனர். இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் நிலவும் தட்டுப்பாட்டை போக்க தற்போது ரூ.5 வடிவிலான ரூபாய் நோட்டைப்போன்ற டோக்கன் சிஸ்டத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, சுங்கவரி வசூலிக்கும் போது சில்லறைக்கு பதிலாக ரூ.5 மதிப்புடைய கூப்பன்கள் மீதி சில்லறையாக வழங்கப்படுகிறது. அந்த கூப்பன்களில் 4 வழிச்சாலை வரைபடமும் பார்கோடும் ரூபாய் நோட்டுகளில் உள்ளது போல வரிசை எண்களும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (என்எச்ஏஐ) என்றும், இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இக்கூப்பன் செல்லுபடியாகும் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதேபோல் குறைந்த அளவு மதிப்பு கொண்ட ரூ.10, ரூ.20, ரூ.50 மதிப்பில் கூப்பன்கள் தயாராகி வருவதாகவும் விரைவில் அவைகள் சுங்கவரி கட்டணத்திற்கு மீதி சில்லறை பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளில் பெறப்படும் கூப்பன்களை மற்ற சுங்கச்சாவடிகளிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வாகன ஓட்டிகளிடம் கூறி வழங்கப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடிகளில் இந்த கூப்பன் வழக்கம் தொடருமானால், பின்வரும் நாட்களில், முதலில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள தேநீர் கடைகளில் டீ, வடை உள்ளிட்ட உணவு பொருள்களுக்கு பணத்திற்கு பதிலாக இந்தக் கூப்பன் ஏற்றுக்கொள்ளப்படும். இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள உணவகங்கள் என பிற கடைகளில் சில்லறைத் தட்டுப்பாட்டிற்கு மாற்றாக இந்தக் கூப்பன்கள் பணமாக புழங்கத் துவங்கும் என்பது நிதர்சனமான உண்மை. ‘கேஷ்லெஸ் எக்கனாமி’ என்பது மாறி ‘கூப்பன் எக்கனாமி’யாக மாறும் சூழல் உருவாகிவிடும். மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டை மீறி வெளியே மாற்றுப் பணம் உருவாகுவது நம் தேசத்திற்கு நல்லதல்ல. சில்லறை தட்டுப்பாட்டுக்கு ரூ.5 கூப்பன் வழங்கும் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளின் நடவடிக்கை ரிசர்வ் வங்கிக்கு எதிரானதாகும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக