வெள்ளி, 23 டிசம்பர், 2016

இந்திய பூணூல் கம்யுனிஸ்டுகள் ..போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 4

சாதி – மத அமைப்பை உருவாக்குவதில் திட்டமிட்ட கொள்கையும் சூழ்ச்சியும் ஆரிய பார்ப்பனர்கள் பயன்படுத்தியதைப் போலவே இந்தப் இந்திய போலி மார்க்சிஸ்டுகள்
nambhuthiri
நால் வருணப் பாகுபாட்டைப் போலவே, மிகக் கொடிய சாதிய அமைப்பையும், சனாதன மதத்தையும் உருவாக்கியவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்தாம். இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த அமைப்புக்கும் அதை உருவாக்கிய ஆரியப் பார்ப்பனர்களுக்கும் எதிராக நியாயமான வெறுப்பும் ஆத்திரமும் கொண்டுள்ளார்கள். இந்த உணர்வுகளை மழுங்கடிக்கவும் திசை திருப்பவும் போலி மார்க்சிஸ்டுகளான சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் முயலுகிறார்கள். அதற்காக நால் வருணப் பாகுபாட்டைப் போலவே, சாதிய அமைப்பு சமூகப் பொருளாதார வளர்ச்சியில் தானே உருவானது அதை நியாயப்படுத்தும் நோக்கம், தத்துவத் தேவையை ஒட்டி உருவானதுதான் இந்துமதம் என்று காட்டமுயன்றுள்ளனர்.

ஆரிய பார்ப்பன சனாதன மதத்தையே வேதமதம், பிராமண மதம், இந்து மதம் என்று மூன்று வெவ்வேறு மதங்களாகப் பிரித்துச் சித்தரிக்கிறார்கள் போலி மார்க்சிஸ்டுகள்.
“இந்துமதம்” என்றொரு மதம் இந்த நாட்டில் எப்போதுமே இருந்தது கிடையாது. இங்கே ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக இருந்து வருவதெல்லாம் நால் வருண – சாதீய சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஆரிய பார்ப்பன சனாதன மதம் தான். இந்தச் சமூக அமைப்பை உருவாக்கிய மதம் இதுதான். இதை நியாயப்படுத்தி, பாதுகாத்துக் கொள்வதற்காக அவ்வப்போது பல தத்துவ விளக்கங்கள் வேத, வேதாந்த உபநிடத, புராண, இதிகாச கட்டுக்கதைகளைக் கற்பித்து, புதுப்புது வடிவங்களை எடுத்து வருகிறது. அந்த ஆரிய – பார்ப்பன சனாதன மதத்தின் இப்போதைய “அவதாரம்” தான் இந்து மதம்.
ஆனால் மார்க்சிய வரலாற்று ஆய்வு என்கிற பெயரில் ஆரிய பார்ப்பன சனாதன மதத்தையே வேதமதம், பிராமண மதம், இந்து மதம் என்று மூன்று வெவ்வேறு மதங்களாகப் பிரித்துச் சித்தரிக்கிறார்கள் போலி மார்க்சிஸ்டுகள். இதன் மூலம் இன்றைய கேடுகெட்ட சாதி, மத அமைப்புக்குக் காரணமானவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் அல்லவென்றும் அவர்கள் உருவாக்கிய சமூக, மத அமைப்பு எப்போதோ மறைந்து விட்டது என்றும் சாதித்து அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்கு எத்தணித்துள்ளனர்.
“பண்டைக்கால வருணாசிரம தர்மமும் அதில் இருந்த பிராமண ஆதிக்கமும் இன்றைக்கும் சமுதாய வாழ்க்கையில் இருப்பதாகக் கூறுவது உண்மையல்ல. பிராமண சாதி அந்தஸ்து இன்று மதிப்பையோ உரிமையையோ, சலுகைகளோ பெறுவதற்குப் பயன்படக் கூடியதல்ல. இன்று சாதீயமுறையில் ஆதிக்கம் செலுத்தும் நிலப்பிரபுக்களான இந்து உயர் சாதியினர்தான் சாதி ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்கள்தான் தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் நடத்துகின்றனர், ஆதிக்கம் செலுத்துகின்றனர். உண்மையில் இது நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் தான் வர்க்க முரண்பாடுதான்” (மார்க்சிஸ்ட் ஏப் 1994 பக்:42), என்கிறார்கள், போலி மார்க்சிஸ்டுகள்.
இப்போது மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பார்ப்பன ஆதிக்கம் மறைந்துவிட்டது என்று சாதிக்கும் இந்த நோக்கத்துக்காகவே பின்வருமாறு போலி மார்க்சிஸ்டுகள் வாதம் புரிகின்றனர்.
“இந்தியாவில் வருணாசிரம தர்ம முறையிலான அடிமைச் சமுதாயம் நீடித்து நிலைத்து இருக்கவில்லை. விவசாயமும் அதனுடன் இணைந்த கைத்தொழில்களும் வளர்ச்சியடைந்த போது, வருணாசிரம தர்மம் வீழ்ச்சி அடையும் நிலைமை ஏற்பட்டது. அதில் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்களுக்கெதிரான புத்த, சமண, அசீவக. சூத்திரசார்பு மதங்களின் எதிர்ப்பு இயக்கங்களின் விளைவாகவும் வருணாசிரம முறை அப்போதே நிலை குலையத் தொடங்கிவிட்டது…. சில இடங்களில் மன்னராட்சி முறை வலுவடைந்த போது சத்திரியர் கை மேலோங்கியது. பிராமணர்களின் மேலாதிக்கம் வீழ்ச்சியடைந்த போதிலும் பிராமணர்களின் செல்வாக்கு பொதுவாக நீடித்து வந்தது. இருப்பினும் நால் வருணமுறை சிதைந்தது. பொருளுற்பத்தியிலும், விவசாயம், பல்வேறு வகை கைத்தொழில்களிலும் கலையும் கலாச்சாரமும் வளர்ந்து சமுதாய வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. “தொழில்களின் பெருக்கத்திற்கேற்ப ஏராளமான சாதிகள் தோன்றின. பழைய நான்கு வருணத்தினர் எண்ணற்ற சாதியினராயினர். தொழில்கள் குலத்தொழிலாகியது. அதற்கேற்ப சாதிகள் உருவாயின. குலத்தொழிலும் சாதியும் மக்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்சங்களாயின. சாதிய முறையை எதிர்த்த பழைய மதங்கள், புத்த, சமண, அசீவக மதங்கள் புதிய நிலைமைக்குப் பொருந்தவில்லை. இந்நிலையில் சாதீயத்தை உட்கொள்ளக்கூடிய, அதனை நிரந்தரமானதும் தெய்வீகமானதும் என்று ஆக்குவதற்கான தத்துவங்களைக் கொண்ட மதமாக இந்துமதம் வளர்ந்து வந்தது. அது இந்திய மக்களின் பொருளியல்-கருத்தியல் வாழ்க்கையில் ஆழமான இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதன் தாக்கம் இன்றைக்கும் நீடிக்கிறது. இவ்வாறுதான் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் வரலாற்று வளர்ச்சியைப் புரிந்து கொள்கிறது” (1994 ஏப். மார்க்சிஸ்ட் பக்: 43-44).
ஆக, பொருளுற்பத்தி வளர்ச்சி காரணமாக ஒரே தொழில் செய்து வந்த மக்கள் தாமே ஒரு குலமாகி, ஒரு சாதியாகி விட்டனர். அல்லது வேலைப் பிரிவினை தவிர்க்க முடியாமல் சாதிகளை உருவாக்கிவிட்டது. அதுவும் சமூக முன்னேற்றத்துக்கு உதவியது. இதுதான் போலிக் கம்யூனிஸ்டுகளின் ஆய்வு முடிவு. இதையே மேலும் விரித்து, உறுதிப்படுத்தி பின்வருமாறும் எழுதியுள்ளனர்.
வேலைப் பிரிவினை தவிர்க்க முடியாமல் சாதிகளை உருவாக்கிவிட்டது. அதுவும் சமூக முன்னேற்றத்துக்கு உதவியது.
குஜராத் தலித் மக்கள்  மீதான தாக்குதல்: வேலைப் பிரிவினை தவிர்க்க முடியாமல் சாதிகளை உருவாக்கியதை மட்டும் சொல்லும் போலி மார்க்சிஸ்டுகள் ஆரிய நிறவெறிக்கும் வருண அமைப்புக்கும் உள்ள தொடர்ச்சியை மறைக்கிறார்கள்.
“பொருளுற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி எண்ணற்ற வேலைப் பிரிவினைகளை உருவாக்கிவிட்டது. ஒரு தொழில் செய்தோர் பரம்பரையாக அதே தொழில் – செய்தனர். அவர்கள் ஒரு சாதியினராயினர். தொழில் பிரிவினையின் அடிப்படையில் அமைந்த இந்த சாதிப் பாகுபாடு பொருளுற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் சமுதாயம் ஒட்டுமொத்தமாக முன்னேறவும் உதவியது. அன்று சமுதாயத்தில் ஆதிக்க நிலையில் இருந்தவர்களும் ஆட்சியாளர்களும் இதனை நிரந்தரமாக்கி விட்டனர். செய்யும் தொழிலுக்கேற்ப கீழ்சாதி – மேல்சாதி முறை அமைந்தது.” (1994 ஜன. மார்க்சிஸ்ட், பக்:31)
இன்னும் ஒருபடி மேலே போய் சாதிமுறை உருவானதற்கு மக்களையே காரணம் காட்டி பழிபோடுகின்றனர். அவர்கள் கொடுத்த வாய்ப்பை சுரண்டும் வர்க்கத்தினர் பயன்படுத்திக் கொண்டு கர்மபலன், தெய்வீகம் எனக் கற்பித்து நிரந்தரமாக்கிவிட்டனர் என்றும் போலி மார்க்சிஸ்டுகள் கூறுகின்றனர்.
”அதிகரித்த விவசாய உற்பத்தி, குடியிருப்புகள், நகரங்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய எண்ணற்ற தொழில் பிரிவுகள் தோன்றின. ஒரு தொழில் செய்தோர் – அதனைக் குலத் தொழிலாகக் கொண்டனர். குலத்தொழில் முறை தோன்றியது. இதனால் அவரவர் ஒரு தொழிலுக்கு உத்திரவாதம் பெற்றனர். ஒரு தொழில் தெரிந்தவனுக்கு வேறு தொழில் தெரியாது. ஆகவே அவர் அதே தொழிலைத் தான் செய்தாக வேண்டும். ஆகவே நிலப்பிரபுக்கள்- மேல்தட்டு வர்க்கத்தினர் – இவர்களின் உழைப்பைக் குறைந்த கூலிக்குப் பெறும் வாய்ப்புப் பெற்றனர். அவர்களின் தத்துவாசிரியர்கள் ஒரு தொழில் செய்வோர் ஒரு குறிப்பிட்ட சாதியினர் என்று வரையறுத்து அதனை நிரந்தரப்படுத்தினர். கீழ்ச்சாதியில் பிறப்பது முன்பிறப்பின் கர்மபலன் சாதிவேறுபாடு தெய்வீகமானது என்றனர். இந்த முறையில் மக்கள் கடுமையான சுரண்டலுக்கு இரையாகினர்” (1994 ஏப். மார்க்சிஸ்ட் பக்: 12-13).
இப்படி, வேலைப்பிரிவினை, குலத் தொழிலானது மற்றும் பொருளுற்பத்தித் தேவை ஆகியவை காரணமாக சாதிய அமைப்பு தோன்றியது வரலாற்று வளர்ச்சிப் போக்கில் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று போலி மார்க்சிஸ்டுகள் சாதிக்கின்றனர்.
போலி மார்க்சிஸ்டுகள் தமது மேற்கண்ட ஆய்வுகள், முடிவுகளுக்கு எவ்வித சான்றுகளும் தரவில்லை; அதற்குப் பதிலாக இவை ஏதோ மார்க்சிய இயக்கவியல் – வரலாற்றியல் பொருள் முதல்வாத அடிப்படையிலானவை என்று வாதிடுகின்றனர். “சாதிப் பாகுபாட்டிற்கு இந்துமதம் தான் காரணம். இந்துமதத்தை ஒழித்துவிட்டால் சாதியை ஒழித்து விடலாம் என்பது தவறு என்கின்றனர். இந்திய சமுதாயத்தில் நிலப்பிரபுத்துவ சமுதாயம் வலுவடைந்த போது, பிராமண மதமும், வருணாசிரமமும் வீழ்ச்சியடைந்த பிறகு சாதிகள் தோன்றின. நிலப் பிரபுத்துவத்தையும் சாதியத்தையும் அரவணைக்கக் கூடியதாகத்தான் இந்துமதம் உருவாகியது. இது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் யாராலும் நிறுவப்பட்ட மதமல்ல, நிலப்பிரபுத்துவ சாதீயவாழ்க்கை முறைக்குச் சாதகமாக பலரால் உருவாக்கப்பட்டவை தாம் இந்துமத தத்தவங்களாயின என்கின்றனர்.
“இந்துமதமும் சாதிகளும் தோன்றியதற்கான பொருளாயத, சமூகக் காரணங்களை புரிந்து கொள்ளாமல் அவை யாரோ சில சூழ்ச்சிக்காரர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறுவது என்ன பொருள் முதல்வாதம்? நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையும் சமுதாய வாழ்க்கை முறையும் தானே அதன் அடித்தளம். அதில்தானே சாதியும் இந்துமதமும் வேர் விட்டு வளர்ந்தது” (மேற்படி பக்:52) என வாதிடுகின்றனர்.
நால் வருண அமைப்பு முறையில் பிராமணர்களின் கட்டுங்கடங்காத அதிகாரத்திற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது.
நால் வருண அமைப்பு முறையில் பிராமணர்களின் கட்டுங்கடங்காத அதிகாரத்திற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது.
இவை உண்மையில் மார்க்சிய வரலாற்றியல் பொருள் முதல்வாத போர்வை போர்த்தியது. அத்தத்துவத்தைக் கொச்சைப்படுத்தி யந்திரமுறையில் பிரயோகித்து ஆரிய – பார்ப்பன நலன் காக்கப் புனையப்பட்ட ஆய்வுகளும் முடிவுகளும் ஆகும். இந்தியாவின் சாதி, மத அமைப்பு தனிச் சிறப்பான தன்மைகளைக் கொண்டது என்று ஒப்புக் கொள்ளும் இந்தப் போலி மார்க்சிஸ்டுகள் அதற்கான அடிப்படைகளைத் தேடும் ஆய்வில் இறங்க மறுத்து வெறும் சூத்திரங்களைச் சொல்லுகின்றனர்.
நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும் சமுதாய வாழ்க்கை முறையும் இந்தியச் சாதி, மத அமைப்பின் அடித்தளம் என்பது உண்மைதான். ஆனால் இந்தியாவில் அவற்றுக்கு முன்பு நிலவிய வருணாசிரம பாகுபாடும், ஆரியப் பார்ப்பன சனாதனமும் அடங்கிய ஆண்டான் – அடிமை சமூக அமைப்பு தகர்த்தெறியப்பட்டு ஒரு புதிய உற்பத்தி முறையையும் சமுதாய வாழ்க்கை முறையும் நிறுவப்படவில்லை. “வேதமதம்”, “பிராமண மதம்” என்று போலி மார்க்சிஸ்டுகளால் அழைக்கப்படும் ஆரிய – பார்ப்பன சனாதன மதத்தின் மறுபதிப்பாகத்தான் ”இந்து மதம்” உருவானது. வருணாசிரமப் பாகுபாட்டின் தொடர்ச்சிதான் சாதிய அமைப்பு. இவற்றை ஒப்புக் கொள்ளும் வகையில் போலி மார்க்சிஸ்டுகளே எழுதிய சான்றுகளையும் நாம் காட்ட முடியும்.
”நால் வருண அமைப்பு முறையில் பிராமணர்களின் கட்டுங்கடங்காத அதிகாரத்திற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. அதன் எதிரொலி தான் சாருவாக சிந்தனைகள், அசீவக, புத்த, சமண தத்துவங்களின் தோற்றம். வர்ணாசிரம தர்ம கட்டுக்கோப்புகளை மீறும் போக்குகள் வெடித்தன. அடிமை முறையில் சிதைவுகள் ஏற்படத்துவங்கின. நிலப்பிரபுத்துவ முறை வளரத் தொடங்கியது. இந்த வளர்ச்சிப் போக்கில் பிராமண மதமும் பிராமணிய ஆதிக்கமும் முன்புபோல் நீடிக்க முடியவில்லை. புதிதாக வளர்ந்து வந்த நிலப்பிரபுத்துவ முறைக்கு ஏற்ப சில மாறுதல்கள் ஏற்பட்டன. பிராமண மதம் புதிய வடிவத்தை மேற்கொண்டது. அதனுடைய பல அம்சங்கள் தான் இப்போதைய இந்து மதத்தின் தத்துவங்களாக, சடங்குகளாக சம்பிராதயங்களாக மாறியுள்ளன….”
“இந்திய உபகண்டத்தில் வருணாசிரம அடிமை முறையில் சிதைவு ஏற்பட்ட போது நிலப்பிரபுத்துவ முறை வளரத் தொடங்கியது. இத்துடன் விவசாயத்திற்கும் குடியிருப்புக்கும் தேவையான ஏராளமான கைத் தொழில்களும் வளர்ச்சியடைந்தன. இவைகளை நிரந்தரமாகப் பாதுகாக்கும் பணியினைத் தான் பழைய பிராமண மதத்தின் புதிய பதிப்பாகத் தோன்றிய இந்துமதம் நிலப்பிரபுத்துவ அமைப்பை நிரந்தரமாக்கத் தேவையான தத்துவங்களை அது போதித்தது. கைத் தொழில்களையெல்லாம் குலத் தொழில்களாக்கியது. குலத்தொழில் அடிப்படையில் சாதிகள் உருவாகின. மிகவும் கடினமான வேலைகளைச் செய்தவர்கள் மிகவும் கீழான சாதியினராக்கப்பட்டனர். அது கடவுளின் கட்டளை என்று கூறப்பட்டது. குலத் தொழிலைப் பரம்பரையாகக் கொண்ட சாதியினராக இந்திய சமுதாயம் பிரிந்தது. எண்ணற்ற சாதியினராக இந்திய மக்கள் பிரிந்தனர்.” (மார்க்சிஸ்ட் 1993 பிப். பக்:33)
இதிலிருந்து தெரிவது என்ன? பிராமண மதத்தின் மறுபதிப்பாகவே இந்து மதம் உருவானது. குலத்தொழிலாகவும் சாதிகளாகவும் பிரிவதற்கு இந்துமதம் காரணமாக இருந்தது. வருணமுறையின் தொடர்ச்சியாகவே சாதிகள் ஏற்பட்டன என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போலி மார்க்சிஸ்டுகளே ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது தானே. நான்காண்டுகளுக்கு முன்பு இன்னும் நேரடியாக பின்வருமாறு எழுதினர்.
“வைதீக மதத்திற்கெதிரான பிராமண ஆதிக்கத்திற்கெதிரான புத்த, ஜைன அசீவக மதத் தலைவர்களின் கருத்துப் போரும் வலுவடைந்தபோது, நான்கு வர்ண முறை முன்போல் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதில் சிதைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாயிற்று. அன்றைய சமுதாயத்தில் பொருளியில் கருத்தியல் துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியினால் இம்மாறுதல் ஏற்பட்டது.”
கர்ம மார்க்கம் பற்றிய தத்துவத்தை உருவாக்கியது பிராமண மதமா? இந்து மதமா? இரண்டுமா?
கர்ம மார்க்கம் பற்றிய தத்துவத்தை உருவாக்கியது பிராமண மதமா? இந்து மதமா? இரண்டுமா?
“நான்கு வருண முறையில் சில சிதைவுகள்தான் ஏற்பட்டன. அது மறையவில்லை. அதே நேரத்தில் இந்திய சமுதாய வாழ்க்கையின் – உற்பத்தி முறையின் அடிப்படையாக அமைந்திருந்த சாதீய அமைப்பில் எந்த சிதைவும் மாறுதலும் ஏற்படவில்லை. மாறாக சமுதாய வளர்ச்சியோடு சேர்ந்து, புதிய புதிய தொழில்கள் உருவானபோது, புதிய புதிய சாதிகள் தோன்றிக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் குலத் தொழில், பாரம்பரியத் தொழில், தொழில்களுக்கேற்ப வருமானத்தில் வேறுபாடு, வாழ்க்கை முறையில் வேறுபாடு, அவைகளின் சடங்கு சம்பிரதாயங்களில் வேறுபாடு, பிறப்பு முதல் இறுதி அடக்கம் வரை ஒவ்வொன்றிலும் இந்த வேறுபாடுகளைப் பார்க்கலாம். பிராமண மதத்தின் மறுமலர்ச்சியாக உருவான இந்துமதம் இச்சாதி வேறுபாடுகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் உட்கொண்டதாகப் பரிணமித்தது. தொடாமையும், தீண்டாமையும், உடன்கட்டை ஏறுதல் போன்ற அனைத்து சமூகக் கொடுமைகளும் இந்து மதத்தின் புனித தர்மங்களாக்கப்பட்டன. வாழ்க்கை முறையோடு இணைந்த ஒன்றாக ஆக்கப்பட்டது. சாதி இந்துமத ஆசாரத்தோடு இணைக்கப்பட்டது. பொருளியல் வாழ்க்கையினாலும் கருத்தியல் வாழ்க்கையினாலும் மக்கள் சாதியத்துடனும் மதத்துடனும் பின்னிப் பிணைக்கப்பட்டனர். பிராமண மதத்தின் தொடர்ச்சியான இந்து மதம் நிலப்பிரபுத்துவ காலத்தில் அதற்குப் பொருத்தமான அமைப்பாக விளங்கியது. (1990 நவ. மார்க்சிஸ்ட் பக்: 46 – 47)
இது நால் வருணமுறை சிதைந்து அதன் பின் சாதி முறை வந்தது என்றும் வேத – பிராமண – இந்து மதங்கள் ஒன்றின் மறைவுக்குப் பின் ஒன்றாகத் தோன்றியது என்றும் போலி மார்க்சிஸ்டுகள் வாதிடுவது பித்தாலட்டம் என்பதை நிருபிக்கும் வாக்கு மூலம். வருணமுறை முற்றாக சிதையாமல் அதோடு சாதி முறை தோன்றி வளர்ந்தது; “பிராமண மதத்தின் மறுவடிவமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் இந்து மதம் என்றும் அவர்களே நான்காண்டுகளுக்கு முன்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதற்கு மேலும் பல ஆதாரங்களை அவர்களே முன்பு அளித்துள்ளனர்.
(நால் வருணமுறை) “இதுதான் இந்தியாவின் முதல் சாதிய முறை அல்லது சாதீயத் திரை போர்த்தப்பட்ட அடிமை முறை (1993 ஜூலை மார்க்சிஸ்ட் பக்:33) நால்வருண முறையின் இந்திய அடிமை முறையின் தத்துவங்கள் தான் வேதங்களும் உபநிடதங்களும் பிராமண ஆதிக்கத்திலான சாதீய முறையின் தத்துவங்களும் இவைகள் தான்” (1993 அக். மார்க்சிஸ்ட் பக்::34). “ஆரியர்கள் திராவிட மக்கள் மீது வெற்றி கொண்ட பிறகு நால்வருண சமுதாய முறை உருவாகியது. அதில் ஆரியர்கள் ஆதிக்கம் பெற்றிருந்தனர். வேதங்கள் அதன் வழிகாட்டியாக இருந்தன. அந்த சமுதாய வளர்ச்சிப் போக்கு வெறுக்கத்தக்க சாதீய முறையைத் தோற்றுவித்தது” (மேற்படி பக்:42) ”நால்வருண முறையும் பிராமண ஆதிக்கத்திலான சாதிமுறையும் இந்திய சமுதாயத்தில் நீண்ட நெடுங்காலம் மிக வலுவாக இருந்தன. சில நூற்றாண்டுகளில் இந்த முறை சில மாறுதல்களுடன் இந்தியா முழுவதும் பரவியது” (மேற்படி பக்:31)
நால்வருண முறையின் தொடர்ச்சியாகவே சாதீய முறை வளர்ந்தது என்பதை போலி மார்க்சிஸ்டுகளின் தலைமை குரு சங்கரன் நம்பூதிரியே பின்வருமாறு ஒப்புக் கொண்டார். “சமூகப் பொருளாதார முறை மிகவும் சிக்கலான போது பிராமணர்களும் ஷத்திரியர்களும் வைசியர்களுமாக பகிர்ந்து கொள்ளக்கூடிய உபரி அதிகரித்து வருவதும் அதை உற்பத்தி செய்கின்ற சூத்திர சாதியினரின் உழைப்பு மேலும் பல பிரிவுகளைக் கொண்டதாகவும் ஆனபோது, சாதிகளின் எண்ணிக்கையும் அவைகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்தன”. இப்படிச் சொல்லும் நம்பூதிரி, சாதி என்பதை வருணத்திற்கு இணையான மாற்றுச் சொல்லாகவும் பல இடங்களில் பயன்படுத்துகிறார். (ஆதாரம் இ.எம்.எஸ் எழுதிய இந்திய வரலாறு மார்க்சிய கண்ணோட்டம்) அவரது சீடர் பி.ஆர்.பி. பின்வருமாறு எழுதியுள்ளார். “நால் வருணமுறையிலேயே சாதிப் பாகுபாடு முளைவிடத் தொடங்கியது. இந்திய சமுதாயத்தில் நிலப்பிரபுத்துவம் வலுவடையத் தொடங்கிய 14-ம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் அது சமூகம் முழுவதையும் பற்றிக் கொண்டது.” (1993 ஜன மார்க்சிஸ்ட் பக்: 31)
ஆக, நால் வருணமுறையும் சாதீய முறையும் ஒரே சமயத்தில் நிலவியதையும், வேத – உபநிட தத்தத்துவங்களே சாதி முறைக்கான தத்துவங்களாக உள்ளதையும் போலி மார்க்சிஸ்டுகள் ஒப்புக் கொள்கின்றனர். சாதீய முறையும், இந்து மதமும் எப்படித் தோன்றின என்பதில் மட்டுமல்ல, எப்போது தோன்றின என்பதிலும் இவர்கள் முன்னுக்குப்பின் முரணாக எழுதிப் பித்தாலட்டம் செய்கின்றனர்.
caste1
நால் வருணத்தினருக்கு தொண்டூழியம் புரியும் மக்கள் தீண்டப்படாத சண்டாளர்கள் – தாழ்த்தப்பட்ட மக்கள்……..
“பிராமண மதமும் இந்து மதமும் ஒன்றுதான் என்றோ அல்லது அதிலிருந்து தோன்றியதுதான் இந்துமதம் என்றோ கூறுவது உண்மையல்ல. பிராமண மதம் நால் வருணமுறையின் மதம்; கி.மு. ஆயிரம் ஆண்டு காலத்தின் மதம். நிலப்பிரபுத்துவம் வலுவடையாத காலத்தின் மதம். நிலப்பிரபுத்துவம் வலுவடைந்த காலத்தில் மன்னர்களின் ஆதரவுடன் தோன்றி வளர்ந்ததுதான் இந்து மதம், இந்தியாவின் மத்திய காலமான கி.பி. 320-க்குப் பின் தோன்றிய மதம் இந்துமதம் “…………… “இவை இரண்டும் மாறுபட்ட காலங்களிலும் சமூகப் பின்னணியிலும் தோன்றிய மதங்கள். இரண்டு மதங்களுக்கும் சுமார் 2500 ஆண்டு கால இடைவெளி கொண்டது “.
“இந்து மதம் இந்திய சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. பெரும்பான்மையான மக்களைக் கவர்ந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகளாக அது நிலை பெற்றுள்ளது” (1994 ஜன மார்க்சிஸ்ட் பக்:54)
பிராமண மதத்தின் மறுபதிப்பாக மறுமலர்ச்சியடைந்தது, அதன் புது வடிவம் தான் இந்து மதம் என்று முன்பு கூறி விட்டு ஓராண்டுக்குள் இரண்டும் ஒன்றல்ல, அதிலிருந்து இது தோன்றியதல்ல என்று பித்தாலட்டம் செய்வது இருக்கட்டும். இதில் குறிப்பிடும் காலங்களை கணக்கிட்டுப் பாருங்கள். கி.பி. 320-க்குப் பின் தோன்றியதாகக் கூறப்படும் இந்து மதம் இந்தியாவில் நிலைபெற்று 2000 ஆண்டுகளாகி விட்டதாகக் கூறுவது பித்தாலாட்டம் இல்லையா? இப்போது என்ன கி.பி.2320-லேயா வாழ்கிறோம்? அதிருக்கட்டும். பிராமண மதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடைவெளி 2500 ஆண்டுகள் என்று இன்னொரு பித்தாலாட்டம். கி.பி. 320-க்குப் பின் இந்து மதம் தோன்றியது என்கிறார்கள். அதில் இருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிராமண மதம் தோன்றியது என்றால், கி.மு. 2180-இல் என்றாகிறது. ஆனால் சில வரிகளுக்கு முன்புதான் பிராமண மதம் கி.மு. ஆயிரம் ஆண்டு மதம் என்று எழுதியுள்ளனர். அதற்குச் சில வரிகளுக்கு முன்பு, ”இந்திய நாட்டில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகளில் தோன்றிய மெளரிய ஆட்சிக் காலத்திலேயே நிலப்பிரபுத்துவ முறை தோன்றியது” என்று எழுதியுள்ளனர். இதன்படியும் நிலப்பிரபுத்துவம் வலுவடைந்த பின் அதாவது கி.பி.320-க்குப் பின் தோன்றியது இந்து மதம் என்ற படியும் பார்த்தால் மேலும் குழப்பம் ஏற்படுகிறது. அதாவது நிலப்பிரபுத்துவம் தோன்றிய பிறகு அது வலுவடைய 3320 ஆண்டுகள் பிடித்தன என்றாகிறது. இதோடு பிராமண மதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடைவெளி 2500 ஆண்டுகள் என்பதையும் ஒப்பிட்டுப்பார்த்தால் பிராமண மதம் தோன்றுவதற்கு முன்பே நிலப் பிரபுத்துவம் தோன்றி விட்டது என்றாகிறது. இன்னுமொரு வேடிக்கை ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியதாக இந்தப் போலி மார்க்சிஸ்டுகள் கூறுவது 3500 ஆண்டுகள் என்பதோடு ஒப்பிட்டால் ஆரியர்களின் வருகைக்கு முன்பே பிராமண மதமும், அதற்கு முன்பே வேதமதமும் இந்தியாவில் இருந்ததாகிறது!
அது மட்டுமல்ல. 1993 ஜனவரியில் இப்போலிகளின் தத்துவ ஏடு, 14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் இந்திய சமுதாயத்தில் நிலப்பிரபுத்துவம் வலுவடைந்தது. சாதிய அமைப்பு சமூகம் முழுவதையும் பற்றிக் கொண்டது என்று எழுதியது. இது மேலும் மேலும் முரண்பாடானது. இதன் படி இதற்குப் பிறகு தான் இந்து மதம் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் இந்து மதம் 2000 ஆண்டுகளாக நிலை பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள். அப்படியானால் கி.பி. 3400-லேயா நாம் வாழ்கிறோம்? கி.மு. 3000-த்தில் தோன்றி கி.பி. 14-ம் நூற்றாண்டில் தான் நிலப்பிரபுத்துவம் வலுவடைந்தது என்றால் அதன் வளர்ச்சி 4400 ஆண்டுகாலம் பிடித்ததா? நிலப் பிரபுத்துவமும், சாதி அமைப்பும் வலுவடைந்து, சமூகம் முழுவதும் பரவி 600 ஆண்டுகள் தானாகிறதா? இவையெல்லாம் எண்ணிக்கை தெரியாத குற்றமா? வேண்டுமென்றே செய்யும் பித்தலாட்டமா?
ஏற்கனவே எடுத்துக் காட்டியவாறு, பிராமண மதம், பிராமண ஆதிக்கம், நால் வருணமுறை ஆகியவற்றை எதிர்த்துப் புத்த, அசீவக சமண மதங்கள் போராடி, அவற்றை வீழ்த்திய பிறகு தான் சாதீய அமைப்பு தோன்றியது என்பதுதான் போலி மார்க்சிஸ்டுகளின் இப்போதைய நிலைப்பாடு. ஆனால் இப்படிச் சொல்வதற்கு சில மாதங்கள் முன்பு வரை, புத்த, சமண ஆசீவக மதங்கள் தோன்றுவதற்கு முன்பே சாதிய முறை இருந்ததாகவும். நால் வருணமுறையோடு சாதீய முறையையும் இம்மதங்கள் எதிர்த்ததாகவும், இந்து மதத்திற்கு முன்பாக பிராமண மதமே கர்மபலன் கற்பித்து சாதிமுறையை நியாயப்படுத்தியதாகவும் இவர்களே எழுதி வந்தனர்.
“சூத்திரர்கள் கீழ் சாதியினராயினர். அவர்கள் மோட்சம் அடைய பிராமண மதம் வழிகாட்டியது. கரும மார்க்கம் – மேல் வருணத்தினரின் நல்வாழ்வுக்காக சூத்திரர்கள் – கீழ்சாதியினர் அவரவர் குலத்தொழிலைப் பிரதிபலன் பாராமல் நியாயமான ஊதியம் கேட்காமல் செய்வது. இதன் மூலம் மேல் சாதியினருக்கும் சேவகம் புரிவது- இதுதான் மோட்சத்தை அடையும் கரும மார்க்கம். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய உபகண்டத்தில் உருவான சமுதாய வாழ்க்கை முறை இது” (1993 ஜூலை மார்க்சிஸ்ட் பக்: 37).
“நால் வருணத்தினருக்கு தொண்டூழியம் புரியும் மக்கள் தீண்டப்படாத சண்டாளர்கள் – தாழ்த்தப்பட்ட மக்கள்…….. இவர்கள் மோட்சத்தை அடைய கர்ம மார்க்கம் – கடமையாற்றுவது, மேல் சாதியினர் இடும்பணிகளைச் செய்வது இது ஒன்றுதான் மார்க்கம் – இவ்வாறு தான் அடைய வழிகாட்டியது இந்துமதம் (1994 ஜன. மார்க்சிஸ்ட் பக்: 48).
ஆறு மாதத்தில் புரட்டிப் புரட்டிப் போலி மார்க்சிஸ்டுகள் கூறுவதில் எது உண்மை? கர்ம மார்க்கம் பற்றிய தத்துவத்தை உருவாக்கியது பிராமண மதமா? இந்து மதமா? இரண்டுமா? அது மட்டுமல்ல பிராமண மத, பிராமண ஆதிக்க வீழ்ச்சிக்கு பின்பு சாதிமுறை உருவாகவில்லை. அவற்றின் காலத்திலேயே நிலவி இருக்கிறது என்பதை இதன்மூலம் ஒப்புக் கொள்கின்றனர்.
“புத்த ஜைன மதங்களும் பிராமண மதத்தையும் பிராமண ஆதிக்கத்தையும் வருண, சாதிப் பாகுபாட்டையும் எதிர்த்துத் தோன்றிய மதங்கள்” “பிராமண மதத்தையும். பிராமண ஆதிக்கத்தையும் சாதி முறைகளையும் இவர்கள் (அசீவகர்கள்) கடுமையாக எதிர்த்தனர். கருமவினை பற்றிய பிராமணர்களின் தத்துவ விளக்கங்களை இவர்கள் மறுத்தனர்” (1993 டிசம் மார்க்சிஸ்ட் பக்: 36-37) என்கின்றனர்.
இதன் மூலம், சாதிப் பாகுபாடு, புத்த, ஜைன, அசீவக மதங்களின் தோற்றத்துக்கு முன்பே நிலவின. அம்மதங்கள் தோன்றிய பிறகு உருவானதல்ல என்பதை போலி மார்க்சிஸ்டுகளே ஒப்புக் கொள்கின்றனர். இறுதியாக இவர்களின் இன்னொரு பழைய வாக்குமூலத்தைப் பாருங்கள்.
(கி.மு. மூன்றாவது நூற்றாண்டாகிய) “இக்காலத்தில் தான் பல மதங்களின் வரலாறு ஆரம்பமாகிறது. இது வரை பல்வேறு கால கட்டங்களில் வேத மதம், வைதீக மதம், வருணாசிரம தர்மம், ஆரிய தர்மம், சனாதன தர்மம் என்று வெவ்வேறு பெயர்களில் அறியப்பட்டாலும் சாராம்சத்தில் அவை அனைத்தும் ஒன்று தான். கி.மு. முதலாவது ஆயிரம் ஆண்டில் அது சகல வருண – சாதி முறைகளையும் சடங்குகளையும் அனுஷ்டிக்கிற பிராமண மதமாயிற்று” (1990 நவ மார்க்சிஸ்ட் பக்: 46).
ஆக, சாதி – மத அமைப்பை உருவாக்குவதில் திட்டமிட்ட கொள்கையும் சூழ்ச்சியும் ஆரிய பார்ப்பனர்கள் பயன்படுத்தியதைப் போலவே இந்தப் போலி மார்க்சிஸ்டுகள் செய்கின்றனர் என்பது தெரிகிறது.
– தொடரும்
புதிய கலாச்சாரம், ஜனவரி 1995.
மேலும் படிக்க :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக