திங்கள், 26 டிசம்பர், 2016

வி.கே.சசிகலா எனும் நான்... நாள் குறித்த நடராஜன்! ஜனவரி 12 ?

மின்னம்பலம் : மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். ''முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடர்பான மெசேஜ்கள் வாட்ஸ் அப்பில் ஏராளமாக வலம் வருகின்றன. என்ன உண்மை? யார் விளக்கம் தரப்போகிறார்கள்?” என்று பதிவிட்டிருந்தது ஃபேஸ்புக்.
சற்று நேரத்துக்குப்பிறகு ஆன்லைனில் வந்த வாட்ஸ் அப், அதற்கான பதிலை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது.
‘‘என் வழியாக சில தகவல்கள் பரவி வருவது உண்மைதான். அந்தத் தகவல்கள் என்னவென்பதை முதலில் சொல்கிறேன். சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்க விருப்பமில்லாத சிலர்தான் பன்னீர்செல்வத்தை உசுப்பேற்றி இருக்கிறார்கள். ‘பன்னீர் தலைமையில் தனி அணி ஏற்போம். அதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். இதற்காக முன்னாள் அமைச்சர்கள் சிலர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னீரை ரகசியமாக சந்தித்திருக்கிறார்கள். அவரிடம், ‘அம்மா இருந்த இடத்துல சசிகலாவை வெச்சுப் பாக்குறதுக்கு எங்க மனசு ஏத்துக்கல. அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு? நீங்க ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக இருந்தீங்க. அம்மாவால் நியமிக்கப்பட்ட முதல்வர். அதனால, ஒருவேளை பொதுக்குழுவில், சசிகலாவுக்கு எதிராக நாங்கள் பேசுறோம்.
உங்கள் பக்கம் நாங்கள் நிற்கிறோம். நீங்களும் எங்களுக்காக வரணும். நாம சேர்ந்து கட்சியை மீட்போம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட பன்னீர், ‘உங்க அன்புக்கு நன்றி. அம்மா இறந்து ஒரு மாதம்கூட ஆகாத சூழ்நிலையில் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது நல்லது இல்லை. நல்லதோ, கெட்டதோ எல்லோருமே சின்னம்மாவை ஏத்துக்கிட்டாங்க. அவங்களும் நம்ம அம்மாவோடு 30 வருஷத்துக்குமேல கூட இருந்திருக்காங்க. நல்லது கெட்டது எதுன்னு அவங்களுக்கும் தெரியும். அதனால, அவங்களுக்கு எதிராகச் செயல்படுற எண்ணம் எனக்குக் கிடையாது. நாம எல்லோரும் சேர்ந்துதான் கட்சியை காப்பாற்றணும். நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. எப்படி இருந்தாலும் இது, தலைவர் ஆரம்பிச்ச கட்சி. அம்மா வளர்த்த கட்சி. நம்மால இந்தக் கட்சி உடைஞ்சு போச்சுன்னு இருக்க வேண்டாம். இருக்கவும் கூடாது. நீங்க எல்லோரும் எப்பவும் என்னோடு ஒன்றாக இருக்கணும். உங்களுக்கு என்ன வேணுமோ அதை நிச்சயம் செஞ்சு கொடுக்கச் சொல்றேன்’ என்று சொல்லியிருக்கிறார். பன்னீரிடம் பஞ்சாயத்து பேசப் போனவர்கள் பதில் எதுவும் சொல்லாமல் திரும்பி வந்துவிட்டார்களாம்! நான் விசாரித்த வரை இதுதான் நடந்திருக்கிறது.” என்று முடிந்த அந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
‘சசிகலா என்ன திட்டத்தில் இருக்கிறார்?’ என்ற கேள்வி ஃபேஸ்புக்கில் இருந்து வந்து விழுந்தது. தொடர்ந்து, பதிலை அடுத்த மெசேஜில் போட்டது வாட்ஸ் அப். “பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் அல்லது தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. அதில், எந்த மாற்றமும் இல்லை. கார்டனில் நடக்கும் அப்டேட்டுகள் எல்லாம் உடனுக்குடன் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சொல்லப்படுகிறது. அவரது வழிகாட்டுதல்படிதான் எல்லா நிகழ்வுகளுமே கார்டனில் அரங்கேறுகின்றன. சசிகலா, போயஸ் கார்டனில் எம்.ஜி.ஆர். படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தியதுகூட நடராஜன் ஐடியாதான். எம்.ஜி.ஆர். சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தத்தான் சசிகலா முதலில் திட்டமிட்டிருந்தாராம். அவர் எம்.ஜி.ஆர். சமாதிக்கு வந்தால், எதிர்ப்பைக் காட்டுவதற்காக சிலர் தயாராக இருந்தார்களாம். இந்தத் தகவல் தெரிந்துதான், அங்கே போக வேண்டாம் என நடராஜன் சொன்னதாகச் சொல்கிறார்கள். சசிகலா, கணவன் சொல்லே மந்திரம் என்று செயல்படுகிறார். 29ஆம் தேதி பொதுக்குழுவில் எடுக்கப்போகும் முடிவின்படி, ஜனவரி 12ஆம் தேதி தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்பார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். நாள் குறித்துக் கொடுத்ததும் சசிகலாவின் கணவர் நடராஜன்தான். நாட்களை தள்ளிப்போட வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார் நடராஜன். எப்படியும் பொதுக்குழுவில் சில எதிர்ப்புகள் கிளம்பும் என்பது சசிகலாவுக்குத் தெரியும். அதை எப்படிச் சமாளிப்பது என்ற யோசனையில் இருக்கிறார் சசிகலா” என்று முடிந்தது மெசேஜ்.
‘‘எல்லாவற்றையும் திட்டமிட்டு நடத்தும் நடராஜனுக்கு, சசிகலாவுக்கு வரும் எதிர்ப்பை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமலா போய்விடும்!’’ என்று கமெண்ட் அடித்துவிட்டு, சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக