சனி, 5 நவம்பர், 2016

NDTV தடை ..கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்! - தலைவர்கள் அறிக்கை!

மின்னம்பலம்.காம்: என்.டி.டிவி ஒளிபரப்புக்கு பாஜக அரசு ஒருநாள் தடை விதித்ததைக் கண்டித்து
திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் செய்தி வெளியிட்டதற்காக தடை விதிக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பரப்பியபோது என்.டி.டிவி-க்கு மட்டும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடைக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது, நெருக்கடி நிலை காலத்தில் முரசொலி நாளிதழுக்கும் அதில் நான் எழுதிய கட்டுரைகளுக்கும் விதிக்கப்பட்ட தடையுத்தரவுதான் நினைவுக்கு வருகிறது. மத்திய பாஜக அரசின் செயல்பாடு கருத்துச் சுதந்திர விதிமுறை மீறலாகும்.
மத்திய அரசு தொடர்ந்து இந்த நடைமுறைகளைத் தொடருமானால், அது இரண்டாவது நெருக்கடி நிலைக்குத்தான் வழிவகுக்கும். எனவே, பிரதமர் மோடி இந்தப் பிரச்னையில் நேரடியாகத் தலையிட்டு, ஜனநாயக உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் இனி எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை வெளியிட முன்வர வேண்டும். இல்லாவிடில், மத்திய பாஜக அரசு, சர்வாதிகாரத்தையே நடைமுறைப்படுத்துகிறது என்று நாடெங்கிலும் எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்.
மனித உரிமை மீறல் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர், ராம் கிஷன் கிரேவால் தற்கொலை செய்துகொண்டார். அவர் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும் தற்கொலைக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றதற்காகவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்களில், மூன்று முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மத்திய அமைச்சர் ஒருவர் இந்தப் போராட்டத்தை அரசியல் நாடகம் என்று வர்ணித்திருக்கிறார். இரங்கல் தெரிவிப்பதும் போராட்டத்தை ஆதரிப்பதும் தனி மனித சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைக்கு அப்பாற்பட்டவை. கைது செய்வதன்மூலம் அதைத்தடுக்க நினைப்பது மனித உரிமை மீறலாகும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, அனைவராலும் வரவேற்கப்பட்டு, ஆதரிக்கப்பட்டு வரும் திட்டம். அந்த திட்டத்தின் குறைகளை நீக்கி நிறைவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்த பாஜக அரசு முன்வர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பஞ்சாப் மாநிலம் பதான்கோட் ராணுவ முகாம் மீது ஜனவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான செய்திகளை என்.டி.டிவி. தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பாதுகாப்பு தொடர்பான தகவல்களையும் அரசின் ரகசியமான ராணுவ முக்கியத்துவம்வாய்ந்த செய்திகளையும் பகிரங்கமாக ஒளிபரப்பியதாக குற்றம்சாட்டி, மத்திய அமைச்சர்கள் குழு அளித்துள்ள பரிந்துரையை ஏற்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நவம்பர் 9ஆம் தேதி ஒரு நாள், என்.டி.டிவி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதித்திருக்கிறது.
இது தொலைக்காட்சி ஊடகங்கள்மீது மட்டும் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் அல்ல, ஒட்டுமொத்த ஜனநாயகத்தின்மீது தொடுத்துள்ள தாக்குதல் ஆகும். நெருக்கடி கால இருண்ட வரலாற்றை மீண்டும் நினைவூட்டுவது போன்ற மோடி அரசின் இந்நடவடிக்கை கடுமையான கண்டனத்துக்கு உரியது ஆகும். மோடி அரசின் செயல்பாடுகள் அனைத்தும் நாட்டை சர்வாதிகாரப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய வகையில்தான் இருக்கின்றன.
நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும்வகையில் பத்திரிகை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டால் அவற்றின்மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் பாஜக அரசு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களை அச்சுறுத்தி பணியவைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது அரசியல் சட்டம் வழங்குகிற கருத்துரிமையைப் பறிக்கும் செயல் ஆகும். மோடி அரசு இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதைப் பார்த்தால், இந்தியா ஜனநாயகப் பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறதா? என்ற சந்தேகம் வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக