சனி, 5 நவம்பர், 2016

அழகிரி மீண்டும் கலைஞரை சந்தித்தார் .. மூன்றாவது முறையாக...

இன்றும் கருணாநிதியைச் சந்தித்த அழகிரி: ஸ்டாலின் ஷாக்! ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஓய்விலிருக்கும் திமுக தலைவர் மு.கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு இன்று மூன்றாவது முறையாக நேரில் வந்து சந்தித்துப் பேசினார், முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி. இந்த சந்திப்பினால் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஷாக் அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி, வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் ஒன்று ஒவ்வாமை ஏற்படுத்தியதால், உடலில் சிவப்புநிறக் கொப்புளங்கள் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கோபாலபுரம் வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்தார் கருணாநிதி. அதனால், யாரையும் சந்திப்பதை தவிர்த்திருந்தார்.
இந்நிலையில், இதனையறிந்து கடந்த வாரமே கோபாலபுரம் வந்த அழகிரி, கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் குறித்து உருக்கமாக விசாரித்துவிட்டுச் சென்றார். நேற்று, மறுபடியும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த அழகிரி, கருணாநிதியைச் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கருணாநிதியின் உடல்நிலை குறித்து அக்கறையோடு விசாரித்த அழகிரி, அரசியல் மற்றும் குடும்ப விவகாரங்கள் குறித்தும் நீண்டநேரம் கலந்தாலோசித்து பேசியிருக்கிறார்.

இன்று காலை மீண்டும் கோபாலபுரம் வந்த அழகிரி, மறுபடியும் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து நெகிழ்வோடு விசாரித்து, இன்றும் அரசியல் மற்றும் குடும்ப விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து பேசியிருக்கிறார்.
இந்நிலையில், அழகிரி தனது தாயார் தயாளு அம்மாளுடன் அவரது தம்பி மு.க.தமிழரசுவின் இல்லத்துக்குச் சென்றார். கடந்த ஆண்டு தமிழரசுவின் மகன் நடிகர் அருள்நிதிக்கும் நீதிபதி என்.கண்ணதாசனின் மகள் கீர்த்தனாவுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளதால் அந்த குழந்தையைப் பார்ப்பதற்காகத்தான் தாயார் தயாளு அம்மாளுடன் தமிழரசுவின் இல்லத்துக்குச் சென்றார் அழகிரி.
அங்கு நடிகர் அருள்நிதியின் குழந்தையை கொஞ்சி வாழ்த்திவிட்டு, குடும்பத்தினரோடு பேசிவிட்டு வந்திருக்கிறார் அழகிரி.
மு.க.அழகிரி, கருணாநிதியை தொடர்ந்து சந்தித்து நலன் விசாரித்ததும் குடும்ப உறுப்பினர்களோடு கலந்துபேசிச் சென்றதும் மு.க.ஸ்டாலினுக்கு ஷாக் ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக