சனி, 12 நவம்பர், 2016

செல்வாக்கான வணிகர்கள் வங்கிகளில் பின்வழியாக பணத்தை மொத்தமாக பெற்று செல்கின்றனர் .


பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூபாய் தாள்களை வரிசையில் நின்று வாங்காமல், வங்கியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி பெரிய வணிக நிறுவனங்கள் பின்வழியாக மொத்தமாக வாங்கிச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் மணிக்கணக்கில் மக்கள் தவம் கிடக்கின்றனர். ஒரு நபருக்கு 4000 ரூபாய் வரை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. அதுவும் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேசன் கார்டு, பார்ஸ்போர்ட், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அடையாள அட்டை மற்றும் அரசு ஊழியர்களின் அடையாள அட்டை போன்ற ஏதேனும் ஒன்றின் ஒரிஜினலை வங்கி கேஷியரிடம் காண்பித்த பிறகே, புதிய ரூபாய் தாள்கள் வழங்கப்படுகின்றன. குடும்ப செலவுக்கும், அன்றாட தேவைகளுக்காகவும் கையிலிருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.

பொது மக்கள் கொடுக்கும் அடையாள அட்டைகளின் நம்பர்களை குறித்துக் கொள்ளும் வங்கி கேஷியர், அதன்பிறகு புதிய ரூபாய் நோட்டுகளை வழங்குகிறார். தற்போது பெரும்பாலான நகரங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதனால் 4 ஆயிரம் ரூபாயில், 2000 புதிய ரூபாய் ஒரு தாளும், மீதத்தொகைக்கு 100, 50, 20, 10 ஆகிய ரூபாய் நோட்டுகளும் கொடுக்கப்படுகின்றன. அதே சமயம் இன்று செயல்படத் தொடங்கிய ஏ.டி.எம் மையங்களிலும் புதிய ரூபாய் நோட்டுகளை எடுக்க முடியவில்லை.
இந்நிலையில் ஒரு நபருக்கு 4 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே என்பது  சாதாரண மக்களுக்கு மட்டும்தான். வங்கியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு எந்தவித விதிமுறைகளும் இல்லை. அவர்கள் கொடுக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு 2000 ரூபாய் புதிய நோட்டுக்களை தாராளமாக சில வங்கிகள் கொடுக்கின்றன. நேற்று பொது மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற காத்திருக்கும் நேரத்தில், சென்னை அண்ணாசாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளைக்கு அரசு அடையாள அட்டையுடன் வந்தார் டிப்டாப் ஆசாமி ஒருவர். அவரது கையில் 500, 1000 ரூபாய் கட்டுக்கள் இருந்தன. அவரை வங்கி ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்துக்குப் பிறகு முகமலர்ச்சியுடன் வந்த அவரது பையில் புத்தம் புதிய 2000 ரூபாய் கரன்சிகள் இருந்தன. எல்லோருக்கும் 4000 வரை என்ற நிர்ணயம் இருக்கும் சமயத்தில், அந்த டிப்டாப் ஆசாமிக்கு மட்டும் எப்படி இவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்று விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறுகையில், “500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களிடம், அறிவிக்கப்பட்ட ஒரிஜினல் அடையாள அட்டை மற்றும் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் இருந்தால் மட்டுமே ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கிறோம். ஒரு நபருக்கு 4000 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. சில வங்கிகளில் உள்ள ஊழியர்கள், நிர்ணயத்துக்கு மேல் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுப்பதாக தகவல்கள் வந்துள்ளன.  இதற்காக கமிஷனும் பெறப்படுவதாக சொல்கின்றனர்.
மக்கள் கொடுக்கும் அடையாள அட்டைகளின் எண்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை கையால் எழுதிவிட்டு, பணத்தை கொடுக்கிறோம். இதனால் ஒரு நபரே எத்தனை முறை வேண்டும் என்றாலும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். மேலும், மக்கள் கொடுக்கும் அடையாள அட்டைகளின் நம்பர்களை சில வங்கி ஊழியர்களே தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக எழுதி விட்டு கொடுக்கவும் வழி உள்ளது. மேலும், போலி நம்பர்களை கூட குறிப்பிட வாய்ப்புகள் உள்ளன. இதையெல்லாம் கண்டறிய வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் அனைத்துத் தகவல்களும் கம்ப்யூட்டரில் ஏற்றப்படாததால் முறைகேடுகளை கண்டறிய வழியில்லை” என்றனர்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி உயர் அதிகாரியிடம் கேட்ட போது, “மக்கள் கொடுக்கும் விண்ணப்ப படிவங்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்வது சிரமம். இதனால் ஒரு நபரே எத்தனை முறை வேண்டும் என்றாலும் வாங்கி கொள்ள வாய்ப்பு இருந்தது. இதுகுறித்து தகவல் வந்ததும் அனைத்து விவரங்களையும் கம்ப்யூட்டர் மூலம் பதிவேற்றுகிறோம். இதனால் ஒரு நபர் 24 மணி நேரம் கடந்த பிறகே அடுத்து பணத்தை மாற்ற முடியும். இந்த விவரங்கள் அனைத்தும் வருமானவரித் துறையினர் பார்வைக்கு சென்று விடும். வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களின் விவரங்களையும் வருமானவரித்துறையினர் கணக்கிடுவார்கள்” என்றார்.
எஸ்.மகேஷ்
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக