வியாழன், 3 நவம்பர், 2016

அதிமுக இன்றைய எபிசொட் .. விவேக்கும் , சிவகுமாரும்தான் அமைச்சர்களுக்கு ஆடர் பிறப்பித்தார்கள் .. சசி வெளில வரல .. இதெல்லாம் ஒரு கட்சி .. ஆட்சி ..


மொபைலில் டேட்டாவை தொட்டோம். ஃபேஸ்புக்கில் நேற்று பதிவிட்ட ஸ்டேட்டஸ்க்கு லைக்ஸ் மூவாயிரத்தைத் தாண்டியிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டது.
“அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று அதிகாலையிலேயே விவேக் வந்துவிட்டார். எப்போதும் காலை 8 மணிக்குப் பிறகுதான் மன்னார்குடி சொந்தங்கள் ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வருவார்கள். இளவரசியின் மகன் விவேக் அதிகாலை 5.30 மணிக்கு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அவர் வந்த சற்றுநேரத்தில் டாக்டர் சிவகுமாரும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார். அமைச்சர்கள் யார் வந்தாலும் முதல் தளத்துடன் நின்றுவிடுவார்கள். விவேக், டாக்டர் சிவகுமார் என சசிகலா உறவினர்களுக்கு மட்டும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் எந்தநேரத்திலும் இரண்டாவது தளத்துக்குப் போகலாம், வரலாம். விவேக், சிவகுமார் இருவருமே அதிகாலை நேரத்தில் சசிகலா தங்கியிருந்த அறைக்குப் போனார்கள்.
ஒரு மணிநேரத்துக்குப் பிறகு அதாவது, காலை 6.45 மணியளவில் இருவரும் வெளியே வந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் அமைச்சர்கள் யாரும் அப்பல்லோவில் இல்லை. விவேக்கும் சிவகுமாரும் அப்பல்லோவிலிருந்து நேராகச் சென்ற இடம் போயஸ் கார்டன்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் போயஸ் கார்டனில் இருந்தார்கள். மீண்டும் இருவரும் அப்பல்லோவுக்கு வந்தார்கள். அவர்கள் அப்பல்லோவுக்கு வந்தபோது அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் வந்துவிட்டார்கள். விவேக்கைப் பார்த்ததும் அமைச்சர்கள் அனைவருமே பணிவுடன் வணக்கம் சொன்னார்கள். விவேக் தலையை மட்டும் அசைத்தபடி இரண்டாவது தளத்துக்குச் சென்றுவிட்டார். மீண்டும் அவர்கள் இருவரும் சசிகலா தங்கியிருக்கும் அறையில் நீண்டநேரம் பேசியிருக்கிறார்கள். போயஸ் கார்டனிலிருந்து விவேக் திரும்பி வரும்போது கையில் ஒரு பேக் எடுத்து வந்திருக்கிறார். அந்த பேக்கில், என்ன எடுத்து வந்தார் என்பது தெரியவில்லை. சசிகலா அறையிலிருந்து முதலில் விவேக் மட்டும் வெளியே வந்திருக்கிறார். அதன்பிறகுதான் டாக்டர் சிவகுமார் வந்தார். விவேக், எதற்காக போயஸ் கார்டன் போனார்? என்ன எடுத்துவந்தார்? என்ன பேசினார்கள்? என்ற தகவலும் கசியவில்லை. ஆனால் மருத்துவமனையிலிருந்து விவேக் கிளம்பிப் போகும்போது டென்ஷனுடனேதான் போனார் என்று சொல்கிறார்கள்.

மதியம் முதல் தளத்துக்கு வந்த டாக்டர் சிவகுமார் அங்கிருந்த அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார். ‘இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு யாரெல்லாம் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்காங்களோ, அவங்களை எல்லாம் அந்தந்த தொகுதிக்கு போகச் சொல்லுங்க. பிரச்சாரத்தை தீவிரப்படுத்தச் சொல்லுங்க. இப்போது நம்ம டார்கெட், தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகள்தான். அவங்க காதுல நாம வெற்றிச் செய்தியை மட்டும்தான் சொல்லணும். தேர்தல் செலவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். அதேநேரத்துல, பணப் பட்டுவாடா என்ற புகாரால்தான் ஏற்கனவே தேர்தல் நிறுத்தப்பட்டது. அப்படியொரு சிக்கல் எந்தக் காரணத்துக்காகவும் மீண்டும் வந்துவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருங்க. தேர்தல் சம்பந்தமாக எது வேண்டுமானாலும் என்னுடனோ அல்லது விவேக்குடனோ பேசுங்க!’ என்று சொல்லியிருக்கிறார் சிவகுமார். அமைச்சர்கள் எல்லோரும் பவ்யமாக தலையாட்டி இருக்கிறார்கள். தேர்தல் முடியும்வரை அப்பல்லோ பக்கம் அதிகம் வரவே வேண்டாம் என்பதை அமைச்சர்களுக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சிவகுமார்.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
அந்த ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப். தொடர்ந்து கமெண்ட்டில் கேள்வி ஒன்றைப் போட்டது. “வழக்கமாக, இதுபோன்ற உத்தரவுகளை சசிகலா தரப்பிலிருந்து அமைச்சர்களுக்கு வந்து சொல்வது விவேக்தானே? இன்று ஏன் சிவகுமார் வந்து சொன்னார்?” என்பதுதான் அந்தக் கேள்வி.
பதிலை ரிப்ளைஸில் டைப்பிங் செய்ய ஆரம்பித்தது ஃபேஸ்புக். “அதுதான் அமைச்சர்களுக்கே புரியவில்லை. சசிகலா அறைக்கு வந்துவிட்டு திரும்பிய விவேக், ஏன் டென்ஷனுடன் கிளம்பிப் போனார்? சசிகலா சொன்ன தகவல்களை ஏன் சிவகுமார் வந்து சொன்னார்? என்று பல சந்தேகங்கள் அமைச்சர்களுக்கு! ஆனால் யாரிடம் இதையெல்லாம் கேட்க முடியும்? அதனால் சிவகுமார் சொன்னதைக் கேட்டு அமைதியாக தலையாட்டி இருக்கிறார்கள். சிவகுமார் சொல்லிவிட்டுப் போனபிறகு அமைச்சர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ‘யாருக்கெல்லாம் பொறுப்பு போடப்பட்டு இருக்கோ அவங்க எல்லாம் உடனே தொகுதிக்குக் கிளம்புங்க. இங்கே தினமும் வரணும் என்ற அவசியம் இல்லை. எதுவானாலும் என்னுடன் பேசுங்க…’ என்று சொல்லியிருக்கிறார் அவர்.” இதுதான் அந்த பதில்.

(அப்பல்லோ மருத்துவர் சிவக்குமார், விவேக்)
“அப்படியானால், இனி மூன்று தொகுதிகளிலும் அதிமுக அமைச்சர்கள் முழுவீச்சில் களமிறங்கப் போகிறார்கள். வாக்காளர்களுக்கு செய்ய வேண்டியதைச் செய்யும் பணிகளையும் தொடங்கிவிடுவார்கள்!’’ என்று வாட்ஸ் அப் கமெண்ட் அடிக்க, ஸ்மைலி ஒன்றைப் போட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.   மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக