வியாழன், 3 நவம்பர், 2016

தீவிரவாதிகளிடம் துப்பாக்கி இருந்ததை பார்க்கவில்லை ..சாட்சி வாக்குமூலம்!

கிட்டத்தட்ட ஒரு டஜன் கிராம மக்கள், போபால் சிறையிலிருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றதை நேரில் கண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் குற்றவாளிகளிடம் துப்பாக்கி போன்ற ஆயுதம் இருந்ததைப் பார்க்கவில்லை என்று தி ஹிண்டு ஆங்கில நாளிதழிடம் கூறியிருக்கிறார்கள்.
இந்த எட்டு சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது திட்டமிட்ட அரசியல் விளையாட்டு என்று எதிர்க்கட்சிகள் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சௌகானை குற்றம்சாட்டியுள்ளார்கள். போபால் சிறையிலிருந்து சிமி தீவிரவாதிகள் தப்பியோடியபோது அவர்களால் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக சௌகான் அறிவித்துள்ளார்.

தப்பியோடிய தீவிரவாதிகள் போலீஸார்மீதும் பொதுமக்கள்மீதும் கற்களை வீசியெறிந்து சாபங்களை விடுத்தனர். கோஷங்களை எழுப்பினர். அவர்களைத் தாக்குவதாக சவால் விடுத்தனர் என்று, என்கவுன்ட்டரை நேரில் பார்த்த சாட்சிகள் கூறியிருக்கிறார்கள். அதேபோல் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் கையில் துப்பாக்கி போன்ற எந்த ஆயுதமும் இருந்தாக நினைவில்லை என்றே கூறுகிறார்கள். அதேபோல், கொல்லப்பட்ட நபர் அருகில் கத்தி போன்ற பொருட்கள் கிடந்ததாகக் கூறப்படுவதும் பொய் என்று கூறுகிறார்கள். ஆச்சார்புரா கிராமத்தில் கட்டுமான தளத்தின் காவலர் ராம்குமார் சோனி என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் வெகு அருகில் இருந்திருக்கிறார். “சில போலீஸார் அன்று அதிகாலையில் என்னை அணுகி சந்தேகப்படும்படியான எட்டு பேரை கண்டீர்களா? என்று விசாரித்துவிட்டுச் சென்றார்கள். அதன்பிறகு, கிராம மக்கள் சந்தேகப்படும்படியான சிலரைப் பார்த்ததாக என்னிடம் கூறினார்கள். நான் உடனே விரைந்து சென்று போலீஸாரிடம் சந்தேகப்படும் நபர்கள் இருக்கும் இடத்தைப்பற்றி கூறினேன். போலீஸார் உடனே தங்கள் வாகனங்களில் பாதை இருந்தவரை வந்தார்கள். அதன்பிறகு, வாகனங்களை நிறுத்திவிட்டு மலைமீது நடந்தே விரைந்தார்கள்” என்று, தி ஹிண்டு நாளிதழிடம் கூறினார் ராம்குமார் சோனி.
சந்தேகத்துக்குரியவர்கள் சுற்றிவளைக்கப்பட்டனர்
போலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட எட்டு சிமி தீவிரவாதிகளும் தப்பியோட வழியே இல்லை. போலீஸார்தான் முதலில் சுடத் தொடங்கினர் என்று கூறுகிறார் சிமி தீவிரவாதிகள் எட்டுப் பேரை சுட்டுக்கொன்ற என்கவுன்ட்டரை நேரில் பார்த்த கட்டுமானத் தள காவலர் ராம்குமார் சோனி. பாறையின்மீது நின்ற அந்த எட்டுப் பேரும் சுற்றியிருந்த மக்கள்மீது கற்களை வீசினார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
என்கவுன்ட்டர் நடந்த இடத்துக்கு மிக அருகில் உள்ள குடிசையில் வசிக்கும் விவசாயியான பாப்பு மீனா கூறும்போது, “சந்தேகப்பட்ட நபர்கள் துப்பாக்கியால் சுடவும் இல்லை. அவர்களிடம் எந்த ஆயுதங்களும் இல்லை. அவர்களில் சிலர் கைகளை அசைத்ததையும், மற்றவர்கள் கற்களை வீசியதையும் நான் பார்த்தேன். அப்போது போலீஸார் எங்களிடம் பாதுகாப்புக்காக அந்த இடத்தைவிட்டு உடனே விலகிச் சொல்லும்படி எச்சரித்தனர். இதே நேரத்தில், காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து மேலும் இரண்டு கிராம மக்கள் சட்சி கூறுகின்றனர். கெஜிரா தேவ் மற்றும் மனிகெய்டி கோட் ஆகிய இரு கிராமங்களும் என்கவுன்ட்டர் நடந்த மலைக்குன்றின் அருகில்தான் இருக்கின்றன. “நான் என் வயலுக்குச் சென்றபோது போலீஸார் சிலர் என்னை அணுகி, எட்டுப் பேர் பதுங்கியிருப்பதாக சந்தேகப்பட்ட மலைக்குன்றுக்கு வழிகாட்ட முடியுமா? என்று கேட்டார்கள். நான் மலைக்குன்றுக்கு அவர்களை அழைத்துச் சென்றேன். பாறையின்மீது நின்ற சிலர் கற்களை வீசினார்கள். உடனே போலீஸார் எங்களை தரையில் படுத்துக்கொள்ளுமாறு கூறினார்கள். அதன்பிறகு போலீஸார் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். ஆனால் எதிர் தரப்பிலிருந்து யாரும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை” என்று கூறியிருக்கிறார் மனிகெய்டி கோட்டில் வசிக்கும் மனோஜ். இந்த என்கவுன்ட்டரை நேரில் கண்ட கிராம மக்களில் பெரும்பாலானோர் சிமி தீவிரவாதிகள் தப்பியோட முயற்சிக்கவில்லை என்றே கூறினர். அவர்கள் ஐம்பது அடி தூரத்தில் பாறையின்மீது நின்றுகொண்டிருந்தார்கள் என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள்.
நன்றி: தி ஹிண்டு மின்னம்பலம்,காம்
தமிழாக்கம்: வேட்டை பெருமாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக