வெள்ளி, 4 நவம்பர், 2016

வைகோவுடன் சி.பி.எம். மோதல்! விஜயகாந்தை விமர்சிப்பது ஏற்று கொள்ளமுடியாது

தமிழக சட்டசபைக்கு கடந்தமுறை நடந்த பொதுத் தேர்தலின்போது மக்கள்
நலக் கூட்டணியோடு தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. ஆனால் விஜயகாந்த், திருமாவளவன் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை.
தேர்தல் முடிந்த சிலநாட்களிலேயே தேமுதிக-வும் தமாகா-வும் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகின. அப்போதே மக்கள் நலக் கூட்டணியின் பிளவு தொடங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அழைப்பை ஏற்று அதில் கலந்துகொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விரும்பியது. ஆனால் திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்கேற்காது என்று, அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்தார். இதனால் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிறகு சமாதானம் அடைந்தது.

அடுத்து, நடைபெறவிருக்கும் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பதிலும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே முரணான கருத்துகள் எழுந்தன. கம்யூனிஸ்டுகளுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் ஒருங்கிணைப்பாளரான வைகோ, மக்கள் நலக் கூட்டணி இடைத்தேர்தலில் போட்டியிடாது என்று அறிவித்துவிட்டார்.
அண்மையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வைகோ, கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது தவறு என்ற கருத்தின் அடிப்படையில் பேட்டி அளித்திருந்தார். வைகோவின் பேட்டி கம்யூனிஸ்டுகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது சரியானதுதான். வைகோவின் கருத்து தவறானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியும் மத்தியக் குழு உறுப்பினருமான பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக., திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை வலுவானதாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை தங்கள் அணியில் சேர்க்க, திமுக-வுக்கும், பாஜக-வுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தேமுதிக சார்பில், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தால் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து பணியாற்றுவதில் எந்தவித தயக்கமும் இல்லை என்ற நிபந்தனை வைக்கப்பட்டது.
அப்போதிருந்த அரசியல் சூழலில், அதுபற்றி ஆலோசித்து மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த 4 கட்சித் தலைவர்களுமே கூட்டாக முடிவெடுத்துதான் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம். அது சரியான முடிவுதான்.
பல்வேறு காரணங்களால் மக்கள் நலக் கூட்டணி தோல்வியைத் தழுவியது. விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது சரியா? தவறா? என்பதுபற்றி இப்போது பேசவேண்டிய அவசியம் இல்லை” என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மக்கள் நலக் கூட்டணியில் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொடர்ந்து கூட்டணி நீடிக்குமா? உடையுமா? என்பதுதான் அரசியல் வட்டார பரபரப்பாக இருக்கிறது.மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக