சனி, 5 நவம்பர், 2016

அப்போலோவில் கோலோச்சும் மன்னார்குடி அதிகாரம்! - ஜெயலலிதாவைச் சுற்றி ‘பவர் சென்டர்’கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 42 நாட்களுக்கும் மேலாக அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நலனில் இன்னும் முழுமையான முன்னேற்றம் ஏற்படவில்லை.>லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டின் தொடர் கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகளும் சிங்கப்பூர் பிஸியோதெரபிஸ்டுகளில் தொடர் சிகிச்சையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
 'முதல்வரின் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, சில நிகழ்வுகள் அதிகாரத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. பதிவு செய்யப்பட்ட காட்சிகளை மட்டுமே, முதல்வருக்கு டி.வியில் காண்பிக்கிறார்கள். மன்னார்குடி உறவுகளின் அதிகாரம் உறுத்தும்படி இருக்கிறது!’ எனக் குமுறுகிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். அவர்கள் ஆதங்கத்தோடு பட்டியலிட்ட சில நி்கழ்வுகள் இங்கே...
 1. முதல்வருக்கு பிஸியோதெரபி சிகிச்சை மட்டும் மேலும் ஒரு மாதம் தொடர்ந்து கொடுக்க இருக்கிறார்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வந்து சென்னையில் தங்கி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தந்த பிஸியோதெரபிஸ்ட் ஒருவர், அக்டோபர் 31-ம் தேதி சென்னையை விட்டு புறப்பட்டுப்போனார். அதே தினம் டெல்லியில் இருந்து இன்னொரு பிஸியோதெரபிஸ்ட் சென்னைக்கு வந்து சேர்ந்தார். தொண்டையில் மூச்சுக்குழாய் பொருத்தப்பட்டிருப்பதாலும், வென்டிலேட்டர் இணைப்பு இருப்பதாலும்  ஜெயலலிதாவால் பேசமுடியவில்லை. சசிகலாவை கூப்பிடவேண்டும் என்றால், கையால் 'எஸ்' என்று சைகை காட்டுகிறார். உடனே சசிகலாவை அழைத்துவருகிறார்கள்.

அடிக்கடி கை கடிகாரம் இருக்குமிடத்தை காட்டி, 'வீட்டுக்குப் போகலாமா?' என்கிற தொனியில் கேட்கிறாராம். ;42 நாட்கள் தொடர்ந்து படுக்கையில் இருப்பதால், அவரை நிற்கவைத்து, மெள்ள நடக்க வைக்கும் வகையில் பிஸியோதெரபி பயிற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆஸ்பத்திரி சூழ்நிலை வேறு... வீட்டு சூழ்நிலை வேறு...! வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும். அப்படி ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அப்போலாவுக்கு வரமாட்டார்; நேராக லண்டன்தான் சாய்ஸ். ஆனால், முன்பு இருந்ததைப் போல மருத்துவமனை சிகிச்சைக்குப்பின் சுறுசுறுப்புடன் செயல்பட முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.;

 3. அப்போலோவில் சசிகலா, இளவரசி... இரு தரப்பினரைச் சேர்ந்தவர்கள்தான் ஜெயலலிதா அறை அருகே ஆரம்பத்தில் போய் வந்தார்கள். ஆனால்,  இளவரசி தரப்பினர் தற்போது கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றனர். இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் திருமணத்தில் ஆரம்பித்த மனக்கசப்பு இன்றுவரை தொடர்கிறதாம். ஆனாலும், இவர் மேற்பார்வையில் சென்னையில் சில பிஸினஸ்கள் நடப்பது வேறு விஷயம்.  இளவரசி, அவரின் மகள்கள் சகிலா, கிருஷ்ண பிரியா ஆகியோர் ஜெயலலிதாவின் அறைக்குள் போய்வருவதைக் கண்டு முகம் சுளித்திருக்கிறார் சசிகலா. இவர்களின் நடமாட்டத்தை ஜெயலலிதா அறவே விரும்பவில்லை என்று சசிகலா தரப்பினர் சொல்லி தடா போட்டு வருகிறார்கள்.

 4.  அப்போலோ மருத்துவமனையின் மூன்றாவது மாடியின் சில அறைகளை சசிகலா கோஷ்டியினர் தங்குவதற்காக எடுத்துள்ளனர். அங்குள்ள அறைகளில் ஒன்றில், ஜெயானந்த் திவாகரன் அடிக்கடி தென்படுகிறார். மருத்துவமனைக்கு ஜெயலலிதா வந்த ஆரம்ப நாட்களில் ஜெயானந்த் வந்த காரை வாசலில் நின்ற போலீஸ் அதிகாரி ஒருவர் விடவில்லை. தடுத்து நிறுத்தியிருக்கிறார். கோபமான ஜெயானந்த் அங்கிருந்த தடுப்புகளை தள்ளிவிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இந்த சம்பவத்துக்குப் பிறகு, அந்த போலீஸ் அதிகாரி அங்கே தென்படவில்லை. இந்த நிகழ்வு சென்னை போலீஸார் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கிவிட்டது.

5. ஜெயலலிதாவுக்கு அறவே பிடிக்காதவர்கள் லிஸ்டில் இருந்தவர்களில் மன்னார்குடி திவாகரன், கோவை ராவணன் ஆகியோருக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், இவர்கள் அப்போலோவுக்கு விசிட் அடித்துவிட்டுச் சென்றார்கள். ஆனால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை மருத்துவமனை வாசலில் வைத்தே திருப்பி அனுப்பினார்கள். அப்போலோ நிர்வாகத்துக்கு வேண்டப்பட்ட மூன்று எழுத்து நபர் ஒருவர், அடிக்கடி மூன்றாவது மாடிக்கு விசிட் வருகிறார். சசிலா தரப்பினரை 'பாஸ்' என்றுதான் அழைக்கிறாராம் இவர். மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே, சில பல பிஸினஸ் விஷயங்களில் ஏற்கெனவே மன்னார்குடிக்கு இவர் அறிமுகம் உண்டாம். அதைவைத்து, தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் வருகிறார்கள் என்றால், அவர்களின் கார் எண்ணை மன்னார்குடி நபர்கள் சிலர் அந்த மூன்றெழுத்து பிரமுகரிடம் சொல்லுவார்களாம். உடனே, அவர் அப்போலோ செக்யூரிட்டி பிரிவினருக்கு 'வி.ஐ.பி' வருகிறார் என்று முன்கூட்டியே தகவல் கொடுத்து காரை போர்டிகோ வரை அனுமதிக்க சொல்லுகிறாராம்.

மருத்துவமனை ரிசப்ஷனுக்கு மருத்துவமனை பிரமுகர் நேரில் வந்து வி.ஐ.பி-களை அழைத்துப் போய் இரண்டாவது மாடியில் விடுகிறாராம். இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்து வரும் மத்திய உளவுத்துறையினர், மருத்துவமனை பிரமுகரின் பிஸினஸ் விவரங்களை தோண்டி வருகிறார்கள். எங்கேயாவது மன்னார்குடி நபர்களின் பெயர் வருகிறதா? என்று விசாரித்து வருகிறார்கள்.

; 6. உயர் அதிகாரிகள் தரப்பில் பவர் சென்டர்களை அப்போலோவுக்கு அனுப்பி வருகிறார்களாம். உதாரணத்துக்கு, சில நாட்களுக்கு முன்பு, மதம் தொடர்பான மூன்றெழுத்துப் பிரமுகர், திடீரென அப்போலோ மருத்துவமனையின் உள்ளே சக தோழர்களுடன் வந்து பிரார்த்தனை நடத்தினார். இதே நோக்கத்தில் வரும் மற்றவர்களுக்கு மருத்துவமனை வாசலில் ஒதுக்கப்பட்டுள்ள தனி இடத்தில் பிரார்த்தனை நடத்திவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், அந்த மூன்றெழுத்துப் பிரமுகருக்கு விசேஷமாக ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டதாம். காரணம்...உளவுத்துறை ஐ.ஜியான சத்தியமூர்த்தி சிபாரிசு என்கிறார்கள்.

 7. கோவையைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரியைப் பிடித்து அவர் மூலம் சத்தியமூர்த்தியை அணுகி விசேஷ அனுமதி வாங்கினாராம். இந்த நபரை பார்த்த சில அமைச்சர்கள் திடுக்கிட்டார்களாம். ஏற்கெனவே தி.மு.க ஆட்சியில் ராஜாத்தி அம்மாள் அணியில் இருந்தவராம். பிஸினஸ் டீலில் நடந்த தகிடுதத்தங்களை பார்த்து இவரை விரட்டி விட்டார்களாம். ' விஜயகாந்தை தி.மு.க கூட்டணிக்கு கொண்டுவருகிறேன்' என்று சொல்லித் திரிந்தாராம். விஜயகாந்த்தும் இவரின் சுயரூபம் தெரிந்து கழட்டிவிட்டாராம். பலமுறை அ.தி.மு.கவுக்குத் தாவ நினைத்தும், முதல்வர் ஜெயலலிதா அவரை அனுமதிக்கவில்லை. தற்போது மருத்துவமனையில் ஜெயலலிதா அட்மிட் ஆகியிருக்கும் சூழ்நிலையில், புறவாசல் வழியாக அப்போலோவில் அட்டடென்ஸ் போட்டுவிட்டாராம்.

 8. எம்.என் நடராஜனின் சகோதரர்கள் பழனிவேலு, எம்.ஆர் என்று அழைக்கப்படும் ராமச்சந்திரன்...இருவரும் அப்போலோ பக்கம் அவ்வப்போது வந்து போகிறார்கள். நடராஜன் சசிகலா குடும்ப உறவுகள் இடையே நல்லெண்ண தூதுவராக பழனிவேல் செயல்படுவதாக அ.தி.மு.கழக கட்சிக்காரர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனாலும்,  சசிகலா குடும்ப ஆதிக்கம்தான் அப்போலோவில் மேலோங்கி இருக்கிறது. வருகிற நவம்பர் 6-ம் தேதியன்று நடராஜனின் மூத்த சகோதரர் சாமிநாதனின் 80-வது பிறந்தநாள் வருகிறது. அதை கோலகலமாக கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள். அழைப்பிதழ் அடித்து சொந்தபந்தங்களை அழைத்திருக்கிறார்கள். பூர்வீக கிராமமான விளாரில் பிறந்தநாள் விழா நடக்க ஏற்பாடாகி வருகிறது. நடராஜன் தரப்பினர் அன்று ஒன்று கூடுகிறார்கள்.  - VIKATAN
- நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக