புதன், 30 நவம்பர், 2016

நாடு முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள் பட்டினியுடன் பணமில்லாமல் சொந்த மாநிலங்களுக்கு திரும்புகின்றனர்

thehindu.com
சனிக்கிழமை அதிகாலை 3 மணி. தில்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில், நான்கு மணி நேரம் தாமதமாக வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இருக்கும் ஃபராக்கா நிலையத்தை வந்தடைந்தது. சில மணி நேரங்களிலேயே, தில்லிக்கு வேலைக்குச் சென்றிருந்த நூற்றுக்கணக்கான காண்டிராக்ட் ஊழியர்கள் கடலால் ரயில் நிலையம் நிறைந்தது. நெரிசலான ரயில் பெட்டிகளிலிருந்து இறங்கி இருளுக்குள் மறைந்தனர்.
வீடு திரும்பியவர்களுள் மூன்று இளைஞர்கள் அர்ஷத் ஷெய்க், கௌசர் ஷெய்க், ராஹுல் ஷெய்க். ஃபராக்கா பகுதியில் இருக்கும் காசி நகரைச் சேர்ந்தவர்கள். வேலைக்கெனச் சென்று, நாற்பதே நாட்கள் ஆகிய நிலையில் வீடு திரும்பியிருக்கிறார்கள். தங்கள் காண்டிராக்டர் உடனான ஒப்பந்தத்தின்படி, அவர்கள் இன்னும் இரண்டு மாதங்கள் வேலை செய்திருந்தால், பனிரெண்டாயிரம் ரூபாய் சம்பாதித்திருக்கலாம் என விளக்குகிறார்கள்.
ஆனால் நவம்பர் எட்டாம் தேதிக்குப் பிறகு நாடு முழுதும் பணப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், சம்பளம் பெறாமலேயே வீடு திரும்பியிருக்கின்றனர். ‘பல நாட்கள் பட்டினி கிடக்க வேண்டியிருந்தது. டிக்கெட் பணத்துக்கு ஒருவழியாக சமாளித்தோம். நிலைமை சரியாகும்வரையில் தில்லிக்குப் போக மாட்டோம்’ என அர்ஷத் சொல்கிறார், அதை அவருடைய நண்பர்கள் ஆமோதிக்கின்றனர்.
காலி ரயில்கள்
வந்த ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, 3483 மால்டா - தில்லி நியூ ஃபராக்கா எக்ஸ்பிரஸ், தில்லிக்குச் செல்ல ரயில் நிலையத்துக்குள் நுழைகிறது. வழக்கமாக, இந்த ரயில் தில்லிக்கு காண்டிராக்ட் வேலை தேடிச் செல்லும் மக்கள் நெரிசல் நிறைந்திருக்கும். உள்ளூர் தொழிற்சாலைகளிலிருந்து வரும் பீடிகள் சரக்குப் பெட்டியை நிறைத்திருக்கும். ஆனால் சனிக்கிழமை அன்று, ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சஞ்சய் தாஸ், லோகேந்திர தாஸ் வசதியாக பயணிக்கின்றனர். ‘வழக்கமாக, ரயில் மிக கூட்டமாக இருக்கும். கழிப்பறைகளில்கூட நிற்க இடம் கிடைக்காது. இன்று, இருபதுபேர் கூட இங்கு இல்லை. எல்லோரும் வீடு திரும்புவதால் தில்லிக்குப் போவோம் என கிளம்பியிருக்கிறோம்’ என்று அவர் சொல்கிறார்.
பெருமளவிலான இடப்பெயர்ச்சி
ஃபராக்காவின் கிராமங்களிலும் முர்ஷிதாபாத் மற்றும் மால்டா மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான ஆண்கள், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் காண்டிராக்ட் ஊழியர்களாக இருப்பவர்கள். மக்கள் முன்னேற்றத்துக்காக அரசுசாரா அமைப்பு ஒன்றை நடத்தும் ப்ரதிக் சௌத்ரி, வடக்கு முர்ஷிதாபாத்தில் நடத்திய ஆய்வில், அங்குள்ள 46% இளைஞர்கள் வெளி மாநிலங்களில் காண்டிராக்ட் ஊழியர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கிறது. ‘இப்போது, இந்த எண்ணிக்கை கூடியிருக்கும். 50-60 சதவிகிதம் வரை ஆகியிருக்கலாம்’ என அவர் கூறுகிறார்.
மிகவும் வழக்கமான இந்த இடப்பெயர்ச்சி குறித்து, கிராம பஞ்சாயத்து உறுப்பினரான சனாஉல்லா பேசும்போது, ‘பிரதேசத்தில் பரவியிருக்கும் வறுமையை காரணமாகக் குறிப்பிடுகிறார். ‘ஆண்கள் கூலியாட்களாக வேலைசெய்யப் போகும்போதும் பெண்கள் பீடி சுற்றுவார்கள். சிலசமயம் இங்கிருக்கும் வறுமை, மன அழுத்தம் தரக்கூடியதாக இருக்கிறது’ என்று அவர் கூறுகிறார். 2010ஆம் ஆண்டு, தில்லியின் லஷ்மி நகர் கட்டடம் இடிந்து விழுந்தபோது, தன் பஞ்சாயத்தில் இருந்து சென்ற பத்துப்பேர் உயிரிழந்ததையும் நினைவுகூர்கிறார்.
பணமின்றி பரிதவிப்பு
முன்னர் விபத்துகள் ஏதேனும் நேரும்வேளையில், பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்புவார்கள். இம்முறை, சூழல் வேறு மாதிரியானது. அஃபிகுல் ஷெய்க் இதற்கு உதாரணம். இதே பஞ்சாயத்தைச் சேர்ந்த வேறு இருவரோடு, கேரளாவில் இருந்து திரும்பி வந்திருக்கிறார். கேரளாவில் கட்டட வேலை செய்துகொண்டிருந்தார். ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அங்கு வேலை இல்லை. எனக்குக் கிடைத்த பணம், பழைய தாளாக இருந்தது. எந்தக் கடைகளும் அந்தப் பணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் நாற்பதுபேர் திரும்பிவர வேண்டும் என அங்கு இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் பணம் இல்லை’ என்று அவர் கூறினார்.
ஜோர்புகுரியா கிராமத்தின், நிமிட்டா பகுதியின் வடக்கே நிலைமை மோசமாக இருக்கிறது. இங்கே பெரும்பாலும் கிராம மக்களிடம் நிலம் இருப்பதில்லை. உத்திரப்பிரதேசத்தின் எடாவாவில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் கட்டட வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஐம்பதுபேர், மோடியின் அறிவிப்பு காரணமாக திரும்பி வந்திருக்கின்றனர். ஆந்திரப்பிரதேசத்திலிருந்து திரும்பி வந்திருக்கும் மொனிரிருல் ஷெய்க், ஷாஹித் ஷெய்க், எடாவாவிலிருந்து வந்திருக்கும் ஆப்பில் ஷெய்க், ஸமீருதீன் ஷெய்க், அன்வர் ஷெய்க் ஆகியோருடன் டீ கடையில் உரையாடத் தொடங்குகின்றனர். பெதாருதீன் ஷெய்க், டீ கடையில் நின்றுகொண்டிருந்த காண்டிராக்டர், ‘பயத்தால் வீட்டிலேயே இருக்க முடியவில்லை’ எனச் சொல்கிறார். ‘என் வங்கிக் கணக்கில் ஏழு லட்சம் இருந்தாலுமே, பணியாட்களுக்கு என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஐம்பதுபேர் திரும்பி வந்திருக்கின்றனர். ஐம்பதுபேர் அங்கேயே இருக்கின்றனர். அவர்களில் நால்வரிடம் மட்டுமே வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. அவர்கள் திரும்பி வரக்கூடாதென்று அவர்களுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்’ என்கிறார் அவர். ஒடிசாவின் சம்பல்பூரில் கட்டட வேலையை விட்டுவிட்டு வந்திருக்கும் ஜக்தாய் கிராமத்தைச் சேர்ந்த ஸமீருதீன், அன்வர், சுர்ஜயா கோஷ் தாங்கள் இழந்தது வேலையை மட்டுமே அல்ல என உணர்கின்றனர்.
பெண்களின் துயர்
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பீடித் தொழிலும் மெலிந்துவிட்ட காரணத்தால், வேலை இல்லாமல் திரும்பிவரும் பணியாட்களுக்கு ஆறுதலே இல்லாமல் ஆகிவிட்டது. இருபது பெரும் பீடித் தொழிற்சாலைகள், சில சிறு தொழிற்சாலைகளுக்காகவும் வேலை செய்யும் பனிரெண்டு லட்சம் பீடித் தொழிலாளர்கள் இப்பகுதியில் இருக்கிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ., ஹௌரா பீடி நிறுவனத்தின் உரிமையாளரான இமானி பிஸ்வாஸ், ‘பீடித் தொழில் என்பது பணியாட்களையே நம்பியிருக்கும் தொழில். ஒவ்வொரு வாரமும் பணம் கொடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கும் தொழில். பணப் பற்றாக்குறை இப்படியே தொடர்ந்தால், நான் என்னுடைய தொழிற்சாலையில் பத்து நாட்களில் இழுத்து மூடவேண்டியதாக இருக்கும்’ என்று அவர் சொல்கிறார். மேலும் மூடப்பட்ட தொழிற்சாலைகளின் பெயரை பட்டியலிடுகிறார். ஃபராக்கா ரயில் நிலையத்தில் வெகுசில ஊழியர்களோடு, வெகுசில பீடிக் கட்டுகளும் தில்லிக்குப் பயணப்படுகின்றன. வழக்கமாக, 150 மூட்டையில் (ஒவ்வொரு மூட்டையும் 30 கிலோ எடை) அனுப்பப்படும் பீடிகள், சனிக்கிழமையன்று 58 மூட்டைகளில் மட்டுமே அனுப்பப்பட்டன.
தமிழில் ஸ்னேகா
minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக