வெள்ளி, 4 நவம்பர், 2016

அண்ணா நூலகம்! உயர்நீதிமன்றம் கெடு!.. கலைஞர் உருவாக்கினார் என்ற ஒரே காரணத்துக்காக ஜெயலலிதா ....


சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம், கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. நூலகத்தைப் பராமரிப்பது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு இறுதிக் கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவின் மிக முக்கிய நூலகமாகக் கருதப்படுவது. மிகப்பெரிய நூலகமான இது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2011ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது.

ஆட்சியில் அமர்ந்த அதிமுக அரசு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரிக்கத் தவறி அக்கறையின்மையாகச் செயல்பட்டது. இது பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழறிஞர்கள் இடையே வருத்தத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோன்மணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா நூலகம் பராமரிப்பு தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்துவந்தநிலையில், ஏற்கனவே மனுமீதான விசாரணைக்கு நூலகத்தை ஆய்வு செய்யுமாறு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அடிப்படை வசதிகளைச் செய்துதரக் கோரி பேராசிரியர் மனோன்மணி தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், நூலகத்தை முறையாகப் பராமரிக்க நீதிமன்ற உத்தரவை டிசம்பர் 14க்குள் அரசு செயல்படுத்த வேண்டும் என்று கெடு விதித்ததோடு, உத்தரவை அரசு நிறைவேற்றாவிட்டால் நீதிமன்றமே குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக