புதன், 16 நவம்பர், 2016

கறுப்பு மற்றும் கள்ளப் பணம் நெருக்கடியிலிருந்து காப்பாற்றியதா? ஆம் கொஞ்சம் உண்மை இதில் இருக்கிறது!


கறுப்புப் பண பொருளாதரமும், கள்ளப்பணமும்தான் இந்தியப் பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து காப்பாற்றியிருக்கிறது என்னும்விதமாக அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரிடமிருந்து கருத்துகள் வெளியாகியிருக்கின்றன. நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விவாதத்தின்போது மிகத்தெளிவாக கறுப்புப் பணம் மற்றும் கள்ளப்பணம் தொடர்பான கண்ணோட்டத்தை முன்வைத்தார். அப்போது அவர், “கறுப்புப் பண பொருளாதாரத்தை ஒழிப்பது வேறு, கறுப்புப் பணத்தை ஒழிப்பது வேறு. தற்போதைய சூழ்நிலையில், வரிவிதிப்புக்கும் அபராதத்துக்கும் அரசின் நடவடிக்கைக்கும் அஞ்சி கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் அதை புதைத்தோ, தீயிலிட்டுக் கொளுத்தியோ அழித்துவிடுவார்கள். இது, கறுப்புப் பண ஒழிப்பு. எனில், இது கறுப்பு நோட்டுகளை அழிக்கும் நடவடிக்கைதான். கறுப்பு பணம் மீளப் போவதில்லை. அதேபோல் கறுப்பு பொருளாதாரம், ரூபாய் நோட்டில் வழியாக இயங்குவதில்லை. அதற்கு எத்தனையோ மாற்று வழிகள் இருக்கின்றன.
வெளிநாடுகளிலும் வேறு வடிவங்களிலும் பதுக்கப்பட்ட கறுப்பு பொருளாதாரத்தை மத்திய அரசு எப்படி மீட்கப் போகிறது. அதேபோல், கறுப்புப் பணத்துக்கும் கள்ளப் பணத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கள்ளப் பணம் என்பது சட்டவிரோதமானது, சமூகத்துக்கு சீர்கேடனது என்றபோதும், அதுதான் இந்தியப் பொருளாதாரத்தை நெருக்கடியில் இருந்து காப்பாற்றியிருக்கிறது. கறுப்புப் பணத்தால் உண்டான வெற்றிடத்தை, பற்றாக்குறையை கள்ளப் பணங்கள் பூர்த்தி செய்து இந்தியப் பொருளாதாரத்தை சமன் நிலையில் வைத்திருந்தது என்பதுதான் உண்மை. இப்போது கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டால் அந்த வெற்றிடத்தை நிரப்ப அதற்கு இணையான பணத்தை அரசு அச்சடித்து புழக்கத்துக்கு விட வேண்டும்” என்று கூறினார்.
உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் இதையொத்த கருத்தை முன் வைத்திருக்கிறார். இதுகுறித்து லக்னோ நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கார் பந்தய நிகழ்ச்சியொன்றின் தொடக்க விழாவில் அவர் கூறியதாவது: ‘கறுப்புப் பணத்தை பதுக்கிவைப்பதை கடுமையாக எதிர்க்கிறேன். அதை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. எனினும், உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அதன் தாக்கத்தால் இந்தியப் பொருளாதாரம் பாதிப்படையாமல் இருந்ததற்கு கறுப்புப் பண பொருளாதாரம்தான் கைகொடுத்ததாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்ததன்மூலம், ஏழை-எளிய மக்களை மத்திய அரசு கடும் துயரத்துக்குள்ளாக்கியிருக்கிறது. பொதுமக்களைத் துன்புறுத்திய எந்தவொரு அரசையும் மக்கள் ஆட்சியில் விட்டுவைத்ததில்லை. ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதன்மூலம் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது என்று அகிலேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக