செவ்வாய், 29 நவம்பர், 2016

அப்போலோ காற்றுள்ளபோதே தூற்றி கொள்கிறது ..60 அடி அகல சாலை..

அப்பல்லோ மருத்துவமனையின் உயிர் காக்கும் சிகிச்சைப் பிரிவான கிரிட்டிகல் கேர் யூனிட்டிலிருந்து தினம் தினம் வித்தியாசமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஜெ. சிகிச்சை பெறும் இரண்டாவது மாடியில், அவர் சிகிச்சை பெறும் அறை தவிர சசிகலா-இளவரசி போன்றோர் தங்குவதற்கென ஒரு அறை ஏற்கனவே அப்பல்லோ நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அறை தவிர புதிதாக இரண்டு அறைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. ஒன்று, ஜெ.வுக்கு பாதுகாப்பு அளிக்கும் முதல்வர் சிறப்பு பாதுகாப்பு படை தங்கும் அறை. இரண்டு, முதல்வரின் செயலாளர்கள் தங்குவதற்கான அறை. ""எங்களுக்கு இரண்டு அறைகள் ஒதுக்க வேண்டும்'' என சசிகலா சொன்னபோது அதிர்ந்து போய்விட்டார் அப்பல்லோ ரெட்டி. சீக்கிரமாக அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ஜெ. டிஸ்சார்ஜ் ஆக வேண்டும். மருத்துவமனை எந்த தொந்தரவும் இல்லாமல் மறுபடியும் வேகமாக செயல்பட வேண்டும் என்கிற ரெட்டியின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக இரண்டு அறைகள் கூடுதலாக வேண்டும் என சசிகலா சொன்னதற்கு மறு பேச்சில்லாமல் ரெட்டி ஓ.கே. செய்தார்.


நவம்பர் 20ஆம் தேதியிலிருந்து முதல்வரின் செயலாளர்கள் அந்த அறையிலிருந்து செயல்பட ஆரம்பித்தார்கள். தலைமைச் செயலகமான செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து கட்டுக் கட்டாக ஃபைல்கள். கறுப்பு நிற பெட்டிகளில் வைத்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு ஃபைல் அப்பல்லோ மருத்துவமனை தொடர்பானது. தற்பொழுது அப்பல்லோ மருத்துவமனைக்கு கிரீம்ஸ் சாலையில் இருந்து வருவதற்கு 20 அடி சாலை தான் உள்ளது. கிரீம்ஸ் சந்து எனப்படும் அந்த 20 அடி சாலை போதாது. அப்பல்லோவின் பின்புறமுள்ள பெரிய சாலையான கல்லூரி சாலையில் இருந்து தற்பொழுது இடிக்கப்பட்டுள்ள காவலர் குடியிருப்பான கொச்சின் ஹவுஸ் வழியாக 40 அடி சாலை வேண்டும் என தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அப்பல்லோ நிர்வாகம் கோரிக்கை வைத்து நிறைவேற்றிக் கொண்டது.

அரசு கொடுத்த அந்த 40 அடி சாலை போதாது. 60 அடி சாலையாக மாற்றித் தர வேண்டும் என ஜெ. அரசிடம் கோரிக்கை வைத்தது அப்பல்லோ மருத்துவமனை. காவலர் குடி யிருப்பில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் வழியாக 60 அடி சாலை அமைக்க ஆய்வுப் பணிகள் தொடங்க தமிழக அரசு உத்தர விட்டது. அதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கும் நெடுஞ்சாலைத் துறைக்கும் உத்தரவு பறந்துள்ளது. உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நெடுஞ்சாலைத்துறை எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்த வேலைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாக அப்பல்லோ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அ.தி.மு.க. தரப்பில் சொல்லப்படும் தகவல்கள் ஆச்சரியமளிக்கின்றன. 3 தொகுதி இடைத்தேர்த லில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர்கள் அப்பல்லோ விற்கு வந்து சசிகலாவை சந் தித்தார்கள். அவர்களின் வெற்றி பெற்ற சான்றிதழ்களை ஜெ. அறைக்கு சசிகலா எடுத்துச் செல்ல, ஜெ. வாழ்த்து சொன்னார். 500, 1000 ரூபாய் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு தொடர்பாக ஜெ. சொன்ன ஆலோசனைகளை தம்பித்துரையிடம் சசிகலா எடுத்துசொல்ல, அதன்படி தம்பித்துரை நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்துப் பேசி தமிழக கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி ஒதுக்கக் கோரினார் என அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இடைத்தேர்தல் வெற்றிக்கு அறிக்கை, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடு பற்றி ஆணை, பிரபல பாடகர் பாலமுரளி கிருஷ்ணா மறைவிற்கு இரங்கல் ஆகியவை அப்பல்லோவிலிருந்து ஜெ. பெயரில் தொடர்ச்சியாக வெளிவந்தன. ஜெ. டி.வி. பார்த்தார், அரை இட்லி சாப்பிட்டார், அ.தி.மு.க.வின் வெற்றிச் செய்தியை டி.வி.யில் பார்த்து கைதட்டி அகமகிழ்ந்தார்... என ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சசிகலா உறவினர்களிடம் கேட்டால் "அம்மா நன்றாக இருக்கிறார். வீடியோ கேமெல்லாம் விளையாடுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு அம்மாவுக்கு சாதகமாக வர வேண்டும் என்றுதான் மருத்துவமனையில் இருக்கிறார்.

அவர் விருப்பப்பட்டால் போயஸ் கார்டனுக்கு செல்வார்' என்கிறார்கள். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டால், ""ஜெ.வின் உடலில் பாயும் ரத்தத்தின் வேகம் இயல்பாக இல்லை. அதற்காகத்தான் பாசிவ் பிசியோதெரபி பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பொதுவாக வெளிப்புற அங்கங்களின் செயல்பாடின்மைக்கு அளிக்கப்படும் இந்த பாசிவ் பிசியோதெரபி சிகிச்சைகள் இரத்த ஓட்டத்தை கொண்டுவர ஜெ.வுக்கு அளிக்கப்படுகிறது. நவம்பர் 7-ம் தேதி லண்டனுக்குச் சென்ற டாக்டர் ரிச்சர்டு பேல் இண்டர்நெட் கேமரா மூலம் இந்த சிகிச்சைகளை கண்காணிக்கிறார். இதில் ஏதாவது பின்னடைவு ஏற்படுமானால் மீண்டும் பழைய அறைக்கே கொண்டு செல்வதற்காகத்தான் இரண்டாவது மாடியில் ஜெ.வின் புதிய அறை அமைக்கப்பட்டுள்ளது'' என்கிறார்கள். ""ஜெ. நல்ல உடல் நிலையில் உள்ளார்'' என் கிறார் அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி. ""ஜெ. விரைவில் போயஸ் கார்டன் வருகிறார்'' என்கிறார் டாக்டர் மாதங்கி. "அம்மா எப்போ புகைப் படத்தில் வருவார்?' என காத் திருக்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். -தாமோதரன் பிரகாஷ் படங்கள் : ஸ்டாலின் விகடன்,காம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக