வெள்ளி, 18 நவம்பர், 2016

எப்போது 500 ரூபாய்? பதில் சொல்ல மறுத்த மத்திய அரசு!

எப்போது ரூபாய் 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்ற உயர்நீதிபதியின்
கேள்விக்கு, பாதுகாப்பு கருதி இதுகுறித்து வெளிப்படையாக பதில் சொல்ல முடியாது என்று மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞரும், ரிசர்வ் வங்கி வழக்கறிஞரும் உயர்நீதிமன்றத்தில் மறுத்திருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் தன்னுடைய ரூபாய் 500, 1000 நோட்டை மாற்ற கூட்டுறவு வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், கூட்டுறவு வங்கிகள் பண மாற்றம் செய்யவோ, வாடிக்கையாளர்கள் தங்கள் டெபாசிட் பணத்தை செலுத்தவோ ரிசர்வ் வங்கி அனுமதிக்கவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர், “கூட்டுறவு வங்கிக்கணக்கில் என் பணம் இருக்கிறது. அதை எடுக்க வழியில்லை. எனவே, நான் கோரும் பணத்தை எனக்குத் தர ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடுங்கள்” என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன், “கூட்டுறவு வங்கிகளின் மூலம் மக்களுக்கு எப்போது பணத்தை விநியோகிக்கப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன், “இதுகுறித்து விரையில் இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுக்கும்” என்று கூறினார். இதைக் கேட்ட நீதிபதி, “ரூபாய் 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்திருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் வெகுவாக குறைந்திருக்கும். எப்போது ரூபாய் 500 நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்துக்கு விடப்போகிறது?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் மோகன், “மைசூர் மற்றும் நாசிக்கில் ஏற்கெனவே ரூபாய் 500 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகத்துக்கு ஆயத்த நிலையில் இருக்கின்றன. ஆனால், அவை எப்போது புழக்கத்துக்கு விடப்படும் என்பதை பாதுகாப்பு கருதி என்னால் வெளியிட முடியாது” என்று பதில் அளித்தார். இதைக் கேட்ட நீதிபதி சற்றே கோபத்துடன், “ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து இன்றோடு எட்டு நாட்கள் முடிந்து விட்டது. மக்கள் பண நெருக்கடி மற்றும் சில்லறை தட்டுப்பாட்டால் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நீங்களோ எப்போது ரூபாய் 500 நோட்டு வெளிவரும் என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறீர்கள்” என்று கூறினார். இடையே குறிக்கிட்ட மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் சு.சீனிவாசன், “ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக தொடரப்படும் அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றும்படி மத்திய அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. எனவே இந்த வழக்கை இங்கே விசாரிக்க வேண்டாம்” என்று கூறினார். உடனே நீதிபதி கிருபாகரன், “நீங்கள் குறிப்பிடும் வழக்குகள் வேறு. இந்த வழக்கு வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒரு நீதிபதியாக மக்களின் சிரமத்தை உணர்ந்து ரூபாய் 500 நோட்டு எப்போது புழக்கத்திற்கு வரும் என்று நான் உங்களிடம் கேட்கிறேன்” என்று கடுமையான கேள்வியை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர், “பாதுகாப்பு கருதி என்னால் இதற்கு பதில் அளிக்க முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் ரூபாய் 500 எப்போது புழக்கத்துக்கு வரும் என்பதை கூறுகிறேன்” என்று கூறினார். இதையடுத்து அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக