ஞாயிறு, 20 நவம்பர், 2016

20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் மரணம்: ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி !

கோவையில் 20 ஆண்டுகளுகளுக்கும் மேலாக 20 ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்று, மருத்துவம் பார்த்து வந்த 'மக்கள் டாக்டர்' என அழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் காலமானார். அவருக்கு வயது 67. கோவை ராஜகணபதி நகரை சேர்ந்தவர் மருத்துவர் பால சுப்பிரமணியம். இவர் கோவை ஆவாரம்பாளையம் சாலையில் சிறிய அறையில் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். இவரின் மருத்துவமனையை சுற்றியுள்ள ஆவரம்பாளையம், நேதாஜிநகர், அண்ணாநகர் போன்ற பகுதியில் மட்டுமல்லாமல் மாநகரத்தில் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் வைத்தியம் பார்க்க வருவார்கள். இரண்டு ரூபாயில் வைத்தியம் பார்த்து வந்த இவர், கடைசியாக கடந்த சில வருடங்களாக 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தார். இதனால் பிற மருத்துவர்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். மேலும், பல இடையூறுகளை சந்தித்து வந்தார். இருப்பினும் தன்னுடைய மருத்துவ சேவையை காசாக்க விரும்பவில்லை. மேலும், நோயாளிகளுக்கு ஊசி, மருந்து போன்றவற்றை இலவசமாக வழங்குவார். பல நேரங்களில் நோயாளிகளின் ஏழ்மை நிலையறிந்து அந்த இருபது ரூபா கட்டணம் கூட பெறாமல் வைத்தியம் பார்ப்பார். கடந்த இருபது ஆண்டுகளில் ஒருநாள் கூட தனது மருத்துவமனைக்கு வராமல் இருந்ததில்லை.
அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்றதால் இரண்டு ரூபா டாக்டர் என்றும், இருபது ரூபா டாக்டர் என்றும், தற்போது மக்கள் 'மக்கள் மருத்துவர்' என்றும் அன்போடு அழைத்தனர். மேலும், இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைக்கு டாக்டர்தான் பெயர் வைக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து பெயர்வைத்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இவர் வெள்ளியன்று (18.11.2016) காலை வழக்கம் போல் நடைபயிற்சி சென்று வீடு திரும்புகையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். இதனைத்தொடர்ந்து மாலை இவரது மருத்துவமனைக்கு வைத்தியம் பார்க்க வந்த மக்கள் மருத்துவர் வராததையறிந்து விசாரித்துள்ளனர். இவர் இறந்ததை கேள்விப்பட்டு அம்மருத்துவமனையின் முன்பே கதறியழுதனர். மேலும், கண்ணீரோடு அவரது மருத்துவமனையின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் வளையம் வைத்தும் நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். மருத்துவத்தை கொள்ளையடிக்கும் வியாபாரமாக மாறிவிட்ட சமூகத்தில் தான் படித்த படிப்பு சாமன்ய மக்களுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணத்தில் குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்த்ததால் மக்கள் இவருக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாகினர். அருள்குமார்  நக்கீரன்,இன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக