ஞாயிறு, 27 நவம்பர், 2016

சேலத்தில் பாஜக அருண்ராம் காரில் 20.55 லட்சம் புதிய 2000 நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது

பாஜக இளைஞரணி சேலம் கோட்ட பொறுப்பாளர் அருண்ராம் ...
சேலம் மாநகர பகுதிகளில் நடக்கும் குற்றசம்பவங்களை தடுக்கும் வகையில், இரவு நேர வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குமாரசாமிப்பட்டி  பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில், புதிய  ரூ.2000 நோட்டு உள்பட கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த பேக்கில் ரூ.18 லட்சத்து 52 ஆயிரத்திற்கு புதிய ரூ.2000 நோட்டுகளும், ரூ.1  லட்சத்து 53 ஆயிரத்திற்கு ரூ.100 நோட்டும், ரூ.50 ஆயிரத்திற்கு ரூ.50 நோட்டும் என மொத்தம் ரூ.20.55 லட்சம் இருந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய  விசாரணையில், காரில் வந்தவர்கள் பாஜக இளைஞரணி சேலம் கோட்ட பொறுப்பாளர் அருண்ராம் மற்றும் சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த புவனேஸ் என்பது  ெதரியவந்தது.


சின்னதிருப்பதியில் இருந்து சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பணம் தனக்கு சொந்தமானது என அருண்ராம் தெரிவித்துள்ளார். ஆனால், பணத்திற்கான உரிய  ஆவணம் எதுவும் இல்லை. இதனால், சந்தேகமடைந்த போலீசார், ரூ.20.55 லட்சத்தை கைப்பற்றி சேலம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க கொண்டு வந்தனர்.
இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உடனடியாக பெற, கருவூல அதிகாரிகள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வாகன சோதனையில் கைப்பற்றப்பட்ட  பணத்தை ஒப்படைக்க முடியாமல் தவித்த போலீசார், விடிய, விடிய கலெக்டர் அலுவலக வாசலிலேயே காத்திருந்தனர்.

கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், இதுதொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதனை தொடர்ந்து, பணத்திற்கு உண்டான  ஆவணங்கள் உள்ளதா? ரூ.18.52 லட்சத்திற்கு புதிய ரூ.2000 நோட்டு எப்படி வந்தது? கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் புரோக்கர்கள் மூலம் வங்கிகளில்  மாற்றப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்  dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக